நயன்தாராவின் லவ் ஃபெயிலியர் டான்ஸ்!





‘‘ ‘சொந்த பேனரில் ஒரு படம் தயாரிக்கப்போறேன். சிவகார்த்திகேயன்தான் ஹீரோ. அவருக்கு ஏற்ற மாதிரி ஒரு கதை சொல்ல முடியுமா?’ன்னு தனுஷ் சார் ஒரு நாள் கேட்டார். ஏற்கனவே நான் வச்சிருந்த கதையில் சிவகார்த்திகேயனை கற்பனை பண்ணி பார்த்தப்போ, அவருக்காகவே அளவெடுத்து செதுக்கியது மாதிரி பொருந்தியது. அதுதான் ‘எதிர்நீச்சல்’ ’’ - ஒளிவு மறைவு ஏதுமின்றி பேசும் இயக்குனர் துரைசெந்தில்குமார், வெற்றிமாறனின் சிஷ்யர்.

‘‘எப்படி வந்திருக்கு படம்?’’
‘‘படம் முடிச்சதும் பார்த்துட்டு போன தனுஷ் சார், அரை மணி நேரத்தில் என்னை வீட்டுக்கே வரச் சொல்லி, ‘மறுபடியும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னு சொன்னார். அந்த ஒற்றை வார்த்தை, சினிமாவில் நான் போட்டு வந்த எதிர்நீச்சலில் கரை சேர்ந்துட்ட நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. மிச்ச வெற்றியை ஆடியன்ஸ் தந்துடுவாங்க.’’

‘‘கதை எப்படி?’’
‘‘மார்க்கெட்டிங் ஃபீல்டில் இருப்பவர் சிவகார்த்திகேயன். ப்ரியா ஆனந்த் ஒரு இங்கிலீஷ் டீச்சர். இந்த இருவருக்குள்ளும் பூக்கும் ஒரு காதல், சில பிரச்னைகள் என்று நகரும் திரைக்கதையில் முதல் ஆறு ரீல் காமெடியா போகும். சிவகார்த்திகேயன்தானே... அப்ப காமெடியாதான் போகும்னு நாம நினைச்சிக்கிட்டு இருக்கிற நேரத்தில் ஆலங்கட்டி மழை மாதிரி வெவ்வேறு உணர்ச்சிகள் அடுத்தடுத்த காட்சிகளைக் கலவையாக்கும்.



காதல் என்றால் 19, 20 வயசு பசங்களுக்குள் இருக்கிற குழந்தைத்தனமான காதல் இல்ல. ‘இந்த பொண்ணு லைஃப் பார்ட்னரா வந்தா நல்லாயிருக்கும்’னு கல்யாணத்தை மைண்ட்ல வச்சிக்கிட்டு ஃபீல் பண்ற ஒரு பக்குவமான காதல்தான் இதில் இருக்கும். சென்னை தான் கதைக்களம். ஃபிளாஷ்பேக்கை மட்டும் திருச்சியில் எடுத்திருக்கோம். இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் என்ஜாய் பண்ணி பார்க்கிற படமா இது இருக்கும்.’’

‘‘நாகேஷை மனதில் வைத்துத்தான் ‘எதிர்நீச்சல்’ டைட்டிலா?’’
‘‘கரெக்ட். காமெடியனா இருந்து ஹீரோவா மாறியவர்களின் பட்டியலில் முதல் உதாரணமா இருப்பவர் நாகேஷ்தான். காமெடியன் வெறும் பபூன் மட்டுமில்ல... அவங்களாலும் சீரியஸா பண்ண முடியும்னு நிரூபிச்ச முதல் ஆள் அவர். சிவகார்த்திகேயனும் அதில் பொருந்தி வர்றார். இந்தக் காரணத்துக்காக மட்டுமில்லாம, ஒரு பாஸிட்டிவ் வைபிரேஷன் தரவும்தான் இந்த டைட்டில். சிவகார்த்திகேயனை வச்சு ஆக்ஷன் படமும் எடுக்கலாம் என்கிற நம்பிக்கையைத் தர்ற மாதிரி அவரை ஆக்ஷனில் முதல் படி ஏற்றியிருக்கேன். பறந்து பறந்து அடிக்கிற மாதிரி இல்லாம, நம்புற மாதிரியான ஆக்ஷனா அது இருக்கும்.’’

‘‘அந்தமான் பின்னணியில் ப்ரியா ஆனந்த் ரொம்ப கிளாமரா வர்றாங்க போல?’’


‘‘ஆமா. படத்தில் பார்க்கும்போது லொகேஷனுடன் சேர்ந்து ப்ரியா ஆனந்தும் குளிர்ச்சி தருவாங்க. ஆனா, அந்தப் பாட்டை எடுக்கும்போது எனக்குள்ள ஏற்பட்ட உதறல் தனி கதை. சாங் ஷூட்டிங்கிற்காக அதிகாலை 4 மணிக்கு புறப்படும் சமயத்தில், சுனாமி எச்சரிக்கை விடுத்தாங்க. அப்புறம் அந்த எச்சரிக்கையை வாபஸ் வாங்கிட்டாங்க. நான் லொகேஷன் போயிட்டேன். ஷூட்டிங் ஒரு பக்கம் நடந்துகிட்டு இருக்க, ஒரு கட்டத்தில் லேசா பூமி ஆடுற மாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு. மத்தவங்களுக்கு நியூஸ் தெரியாததால சகஜமா இருந்தாங்க. நான்தான் நிமிஷத்துக்கு நிமிஷம் செத்துப் பிழைச்சேன். அந்த லொகேஷனிலிருந்து திரும்பிய பிறகுதான் உயிரே வந்துச்சு.’’

‘‘தனுஷ் கூட நயன்தாரா ஒரு அயிட்டம் நம்பர் ஆடியிருக்கறது ஸ்பெஷல்தானே...’’
‘‘கதை முடிவானதுமே அட்ராக்ஷனுக்காக ஒரு பாட்டில் தனுஷ் சாரை யூஸ் பண்ணலாம்னு பிளான் பண்ணிட்டோம். காதல் தோல்வி பாட்டுதான் சூழ்நிலை. நட்பு அடிப்படையில நயன்தாராவிடம் தனுஷ் கேட்க, அவரும் ஓ.கே சொல்லிட்டார். ஒரு பாட்டுதானேன்னு வேண்டா வெறுப்பா வருவார்னு நினைச்சதுக்கு மாறா, அவ்வளவு சின்சியரா உழைச்சிருக்கார் நயன்தாரா. எந்த மாதிரியான சிச்சுவேஷன்னு முதல்லேயே கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டவர், அவருக்கான காஸ்ட்யூமை அவரே கைப்பட டிசைன் பண்ணிட்டு வந்து செட்ல அமர்க்களப்படுத்திட்டார். துளி பந்தாவோ, தலைக்கனமோ அவர்கிட்ட இல்ல. பிரேக் டைம்ல சிவகார்த்திகேயனை மிமிக்ரி பண்ணச்சொல்லி என்ஜாய் பண்ணினார்.’’

‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லைபத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்லை’ன்னு தொடங்குற அந்தப் பாட்டுல தனுஷ் - நயன்தாரா ரகளை பண்ணியிருக்காங்க. நாகர்கோவிலில் பஞ்சாபி தாபா செட் போட்டு அந்தப் பாட்டை எடுத்திருக்கோம்.’’
- அமலன்