கௌரவம் : சினிமா விமர்சனம்





உறவுகளின் உன்னதங்களை அழகாகவும் அழுத்தமாகவும் சரம் தொடுக்கக்கூடிய ராதாமோகன், தனது பாதையிலிருந்து விலகி நின்று கௌரவக் கொலைகளை அலசியிருக்கிறார். சாதி கௌரவம், குடும்ப கௌரவத்துக்காக ‘எதையும்’ செய்யத் துணியும் ஒரு குடும்பத்தின் கதைதான் ‘கௌரவம்’.

சென்னையைச் சேர்ந்த சிரிஷ், வெளியூர் போன இடத்தில், பழைய நண்பனைப் பார்க்கச் செல்கிறார். அங்கு நண்பன் இல்லை. ‘‘வேறொரு சாதிப் பெண்ணுடன் ஊரை விட்டே போன மகன் என்ன ஆனானோ’’ என்று அவன் தந்தை புலம்ப, நண்பனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்கும் நாயகனுக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி. அதுதான் க்ளைமாக்ஸ்.
அறுபடாமல் இருக்கும் சாதியத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டும் முயற்சிக்காகவும், ‘கௌரவக் கொலைகள்’ பற்றி முதல்முறையாகச் சொல்ல வந்த துணிவுக்காகவும் ராதாமோகனுக்கு வெல்கம்! ஆனால், அதைச் சொல்ல வந்த விதத்தில் சறுக்கியது பெரும் குறை.

கனமும் நெகிழ்வும் பதைபதைப்பும் தீவிரமும் காட்ட வேண்டிய அழுத்தமான பாத்திரத்துக்கு, ஹீரோ அல்லு சிரிஷ் காட்டியிருப்பது ஒரு துண்டு நடிப்பு. அண்டை வீட்டிலிருந்து வந்திருந்தாலும் வரவேற்பு பொக்கே தர முடியாதது எங்களுக்கே வருத்தம்தான். தோளில் தூக்கி சுமக்க வேண்டியவரே தவறுவதால், அங்கேயே படம் துவண்டு விடுகிறது.

சட்டம் படித்த நாசரின் மகளாக யாமி கௌதம், செம ஃபிரஷ். வழக்கம்போல, நாயகனின் முயற்சிக்குத் தோள்கொடுத்து கடைசியில் கை கோர்க்கிறார். ஆனால், நடிப்பு? செம ஃபீலிங்கான காதல் படத்துக்கு செட் ஆகிறவரை ‘கௌரவக் கொலை’ கண்டுபிடிப்புக்குப் பயன்படுத்தியது தவறு. ஊர்ப் பெரியவராக பிரகாஷ்ராஜ். ‘ஒரு குழந்தையைக் கொல்லவா, இன்னொரு குழந்தையைப் பெத்தேன்..?’ என மகனிடம் விம்மி உடையும்போது பழக்கப்பட்ட நடிப்பு. அவர் உயிரைக் கொடுத்து நடித்தாலும், அவ்வளவு தேவைப்படாத ஸ்கிரிப்ட்தான்.

யாருமே தொடுவதற்கு அஞ்சுகிற ரெட்டை டம்ளர் நடைமுறை, கூட உட்கார்ந்து சினிமா பார்க்க முடியாத கொடுமை, செருப்பு கூடப் போட முடியாத தலித்களின் இழிநிலை என எல்லா பக்கமும் தொடப் பார்த்தாலும், ஆழம் போகாதது தெரிகிறது. இன்றைய எதிர்ப்புக் கலாசாரத்தில், ஒரு எல்லைக்கு மேல் போக முடியாமல் டைரக்டர் தடுமாறியிருப்பதும் புரிகிறது. மறைந்து போன காதலர்கள் என்ன ஆகியிருப்பார்கள் என படம் பார்க்கும் எல்லோருக்கும் தெரியும்போது, டைரக்டர் மட்டும் படம் முழுவதும் தேடிக் கொண்டிருப்பது வீண் வேலையாகி, நம்மைத் தளர வைக்கிறது.
துணைப் பாத்திரங்களில் அப்பா ஸ்ரீராம், தலித் வாலிபர் குமரவேல் என அருமையான வார்ப்பு. ஒருநாள் கால்ஷீட் கொடுத்திருப்பார் போல நாசர். ‘இன்னும் இருந்திருக்கலாம்’ என நினைக்கும்போது காணாமல் போகிறார். விஜியின் வசனம் ஆரம்பத்தில் சமுதாயத்தை சாடி, போகப் போக வீச்சில் குறைகிறது. சொல்லப்பட்ட கதைக்கு அவ்வளவுதான் முடியும் போல.

ப்ரீதாவின் ஒளிப்பதிவு படத்திற்கு இடைஞ்சலாக இல்லை. ஆனால், ஆந்திராவில் கொடி கட்டும் தமன், தமிழில் மட்டும் இசையை நெற்றியடியாய் கொடுப்பதில்லையே... ஏன்? உங்களுக்கு இங்கே மட்டும் என்ன பிரச்னை பாஸ்?
உன்னதமான நோக்கம் என்றாலும் இதில் சினிமா ‘மொழி’ இல்லை ராதாமோகன். ஆதங்கமாகத்தான் சொல்கிறோம்... ‘பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்’!
- குங்குமம் விமர்சனக் குழு