கெய்லின் ருத்ர தாண்டவம்! சாரியர்ஸ் ஆன வாரியர்ஸ்





ஐபிஎல் 6வது சீசனில், அக்னி நட்சத்திரத்துக்கு போட்டியாக 2வது கட்ட லீக் ஆட்டங்கள் அனல் கக்க ஆரம்பித்திருக்கின்றன. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறப் போகும் அந்த நான்கு அணிகள் எவை என்பதில் இன்னமும் இழுபறிதான். முதல் பந்தில் கோல்டன் டக், சூப்பர் ஓவர், ஹாட்ரிக், அதிவேக சதம், சிக்சர் மழை என்று ரசிகர்களை கட்டிப்போடும் மசாலா அயிட்டங்கள் அடுக்கடுக்காக அணிவகுக்கின்றன. க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது என மினிமம் கேரன்டி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த முறையும் வழக்கம் போலவே நாட்கள், போட்டிகள் எண்ணிக்கையில் குறை வைக்காத மெகா டோர்னமென்ட். களத்தில் ஒன்பது அணிகள். அறிமுக அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத். பழைய அணிதான் என்றாலும் புதிய பெயர், புதிய நிர்வாகத்தின் கீழ் வீரர்கள் உற்சாகமாக விளையாடி சர்ப்ரைசர்ஸ் ஆகியிருக்கிறார்கள். ராயல்சின் எழுச்சியும் எதிர்பாராதது.

டேர்டெவில்சுக்கு தோல்வி மேல் தோல்வி. சேவக் சோம்பல் முறித்த ஆட்டத்தில் மட்டும் அபூர்வமாக வெற்றியை ருசித்தார்கள். மற்றபடி ‘போட்டியில் இருக்கவே நாங்கள் லாயக்கில்லாதவர்கள்’ என்று கேப்டன் ஜெயவர்த்தனேவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். நடப்பு சாம்பியன் நைட் ரைடர்ஸ் நிலையும் கவலைக்கிடம்தான். எக்சிட் கேட்டுக்கு அருகே நிற்கும் இன்னொரு அணி புனே வாரியர்ஸ். பெங்களூரில் ராயல் சேலஞ்சர்சுடன் நடந்த ஆட்டத்தில், சிக்சாசுரன் கிறிஸ் கெய்ல் நடத்திய ருத்ரதாண்டவத்தில் வாரியர்ஸ், சாரியர்ஸ் ஆகிவிட்டார்கள். அந்த ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை தவிடுபொடி ஆக்கிவிட்டார் கெய்ல்.

‘நல்லவேளை... பவுலிங் போடாமல் விக்கெட் கீப்பர் ஆவது என்ற நல்ல முடிவு என்னைக் காப்பாற்றிவிட்டது’ என்று டோனி ட்வீட் செய்ய, பிரபலங்களின் வாய் பிளந்த தகவல் பதிவில் ட்விட்டர் தளத்திலேயே ஹெவி டிராபிக். கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக... 30 பந்தில் அதிவேக சதம் என்றால் சும்மாவா? கெய்ல் ஏவிய மிசைல்களின் தாக்குதலை தாங்க முடியாமல் சின்னசாமி ஸ்டேடிய கான்க்ரீட்டே கண்ணீர் வடித்தது.



இந்த சீசனில் முப்பதாவது ஆட்டத்தில்தான் வாட்சன் தயவில் முதல் சதம் கிடைத்தது. அடுத்த ஆட்டத்திலேயே கெய்ல் 66 பந்தில் ஆட்டமிழக்காமல் 175 ரன் விளாசுவார் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. மரண அடி என்பதற்கு இலக்கணமாக அமைந்த ஆட்டம். இது போதாது என்று கோஹ்லி, டிவில்லியர்சும் தங்கள் பங்குக்கு போட்டுத் தாக்குவதில் சேலஞ்சர்ஸ் அட்டகாசம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. உள்ளூரில் ரவுண்டு கட்டும் அந்த அணி, வெளி மைதானங்களில் வேலைக்காகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

வாலே இல்லாத சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கில் மிரட்ட, உலகின் நம்பர் ஒன் பவுலர் ஸ்டெயின், இந்திய வேகம் இஷாந்த், ஹாட்ரிக் சுழல் அமித் ஆகியோரின் பவுலிங் கூட்டணியில் அதிரடி காட்டுகிறது சன்ரைசர்ஸ். ஷிகார் தவான், டேரன் சம்மி என்று பேட்டிங் வரிசையும் தற்போது பலமாகி வருவதால் இந்த அணியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ‘நாங்களும் இருக்கிறோம்ல’ என்று குரல் கொடுக்கின்றன கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ்.

பெரிசுகளில் மைக் ஹஸி, டிராவிட் மட்டும் வியப்பூட்டும் வகையில் விளையாடி வருகிறார்கள். சச்சினிடம் பழைய ஆட்டம் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. கில்கிறிஸ்ட், பான்டிங் காலிப் பெருங்காய டப்பாக்கள் என்பது நிரூபணமாகிவிட்டது.  

‘பிரிக்க முடியாதது... ஐபிஎல்லும் சர்ச்சைகளும்’ என்பதில் ஓரளவு மாற்றம் தெரிகிறது. கோஹ்லி - கம்பீர் மோதல், ஹர்பஜனிடம் அறை வாங்கிய அத்தியாயத்தை ஸ்ரீசாந்த் மறுபதிப்பு செய்ய முயன்றது, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட எதிர்ப்பு என விரல் விட்டு எண்ணும் அளவுக்கு சர்ச்சை சதவீதம் சரிந்திருக்கிறது.

பறந்து பறந்து அடிக்கும் ஃபைட்டர்கள் அலுப்பூட்டும் வேளையில், அவ்வப்போது ‘சர் ஜடேஜா’ நல்ல காமெடி ரிலீஃப் கொடுக்கிறார். கலாய்ப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எனக்கு அதில் ஆட்சேபமில்லை என்ற அவரது பெருந்தன்மைக்கு ஒரு ராயல் சல்யூட்.

எஞ்சியுள்ள ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்து, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற எல்லா அணிகளுமே முயற்சிப்பதால்... போட்டிக்குப் போட்டி கடைசி ஓவர் கடைசி பந்துவரை நகம் கடிக்க வைப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
- பா.சங்கர்