இட்லி மேல சத்தியம்!





‘பஸ் ஸ்டாண்டில் பிரசவம்’ செய்தியைப் படித்தபோதே பதறியது. நாம் மனிதநேயமுள்ள நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்ற அறச்சீற்றம் நெஞ்சை அடைத்தது.
- எம்.பர்வீன் பாத்திமா, சென்னை-91.

மெக்சிகோ பளிங்குக் கடலில் டால்பின்களோடு நீந்தி விளையாடுவதில் எமி ஜாக்சனுக்கு கொள்ளைப் பிரியம்னு படிச்சேன். உண்மையில் டால்பின்கள்தான் அவரோடு நீச்சலடிக்க தவம் கிடக்கிறதாம். டால்பின் சங்கத்தில் இருந்து தகவல் வந்துச்சு!
- ஜெ.கே.விநாயகம், விருதுநகர்.

‘தங்கம் விலை இன்னும் இறங்கட்டும்’ எனக் காத்திருப்பதைவிட, தேவைப்படுகிறவர்கள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாங்குவது புத்திசாலித்தனம் என கட்டுரையில் கூறிய கருத்து அபாரம்!
- ஏ.ஜி.கல்யாணசுந்தரம், கோவை-6; இ.பசரியா, திருச்சி; எஸ்.கோபாலன், நங்கநல்லூர்; லட்சுமி செங்குட்டுவன், வேலூர்.

தேன்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ், இறப்பதற்கு முதல் நாள் எழுதிய கவிதை, குங்குமம் வாசகர்களுக்கு எக்ஸ்குளூசிவ். அவர் பாடிய ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...’ என்ற வரி அவருக்கே பொருந்தும்!
-வெ.லட்சுமிநாராயணன், வடலூர்; சாரதாமணி, சுந்தராபுரம்; ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்; வரலட்சுமி முத்துசாமி,சென்னை-37.

கவிப்பேரரசு வைரமுத்து போல பலரும் விவசாயிகளைப் பற்றி சிந்திக்கத் துவங்கிவிட்டால், காவிரியிலிருந்து தண்ணீர் வராவிட்டாலும், அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வராமல் இருக்கும்!
- எஸ்.நாகராஜன், திருச்சி; மா.மாரிமுத்து, ஈரோடு-1; எம்.கிரிஜா, புதுச்சத்திரம்; கவியகம் காஜூஸ், கோவை-24; ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

என்னது... சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் கதைதான் முக்கியமா? இதைச் சொன்ன கார்த்திகா நாளைக்கே சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு வந்தால் நிச்சயம் கதை கேட்காமல் கால்ஷீட் கொடுப்பார். இது ஒரு ரூபாய் இட்லி மேல சத்தியம்!
- ஆதி.சௌந்தரராஜன், பட்டவர்த்தி.

ஷீரடி சாயிபாபாவின் அற்புதங்களே எங்களை எங்கோ அழைத்துச் செல்கிறது. அதோடு மாற்றம் தரும் சாயி மந்திரத்தையும் வெளியிட்டு பக்திப் பரவசத்தில் மூழ்கடித்து விட்டீர்கள். நன்றி!
- எஸ்.வனிதா, புதுச்சேரி.

‘தற்போது தமிழ்த் திரையுலகின் சிறந்த நடிகர் யார்?’ என்ற கேள்விக்கு, ‘படத்திலா... பிரஸ்மீட்டிலா?’ என்று மனுஷ்ய புத்திரன் கேள்வியாகவே பதில் தந்திருந்தது நச்!
- கே.ஆர்.கல்யாணம், சிவகங்கை.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர், ‘சர்’ ரவீந்திர ஜடேஜா பற்றிய வஞ்சப் புகழ்ச்சி ஜோக்குகள் வயிற்றைப் பதம் பார்த்தன. இப்ப எல்லா துறையிலும் பவர் ஸ்டார்கள் பாப்புலேஷன் பெருகிடுச்சு சார்!
- ஜி.வி.மூர்த்தி, கடலூர்.

உணவு தயாரிக்கும் குக்கரில் கூட குண்டு தயாரித்து உயிரைக் குடிப்பார்களா? பாஸ்டன் குண்டுவெடிப்பின் விவரங்களைப் படித்து நெஞ்சே வெடிச்சிடுச்சு சாமி!
- சாய்ராம், செங்கல்பட்டு.