நிழல்களோடு பேசுவோம்

சொல் அழியும் காலம்

கடந்த வாரம் சென்னையில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் ஒரே நேரத்தில் நடந்தேறின. ஒன்று மெரினா கடற்கரைக்கு எதிரே உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. தமிழக முதல்வர், தான் சட்டசபைக்குப் போகும் வழியிலுள்ள அந்தக் கண்காட்சியை காணொளியில் திறந்து வைத்தார். இன்னொன்று, பெரியார் திடலில் நடந்த புத்தகக் கண்காட்சி. சென்னை புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தில் இருக்கும் இரண்டு குழுக்கள் தனித்தனியே இதை நடத்தியதாகத் தெரிகிறது. இந்தக் கண்காட்சிகளைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ‘துன்பியல் சம்பவம்’ எனலாம்.

கண்காட்சி திறக்கப்பட்ட முதல் நாள் காலையிலிருந்து மாலை வரை, கடவுளின் வருகைக்குக் காத்திருப்பதுபோல வாசகர்களின் வருகைக்காகக் கடைக்காரர்கள் காத்திருந்தார்கள். அன்று எங்களது அரங்கில் விற்பனை 700 ரூபாய். இதை நான் பக்கத்து கடைக்காரரிடம் சொல்லிப் புலம்பியபோது, ‘‘அடடே... அபாரமான விற்பனையாக இருக்கிறதே. எங்களுடைய இன்றைய விற்பனை 52 ரூபாய்’’ என்றார். நான் ஒரு வீம்புக்காக தினமும் கண்காட்சிகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். பெரும்பாலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடம் போல காட்சியளிக்கும். பகல் முழுக்க ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டிற்குக் கீழ், கொதிக்கும் வெயிலில், கடைக்காரர்கள் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டவர்கள் போல அமர்ந்திருந்த காட்சி கொடுமையானது. ஒரு நாளைக்கு கண்காட்சிக்கு ஆயிரம் பார்வையாளர்கள் வந்தாலே அதிகம் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. சென்னை போன்ற இவ்வளவு மக்கள் வாழும் ஒரு நகரத்தில், இவ்வளவு பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகளில் புத்தகத்தைத் தவிர வேறு ஏதாவது ஒரு பொருளைக் கொண்டுவந்து வைத்திருந்தால், நிச்சயமாக இதைவிட பல மடங்கு கவனம் கிடைத்திருக்கும். ‘இந்தப் புத்தகங்களை எல்லாம் அள்ளிக் கொண்டுபோய் எதிரே இருந்த கடலில் போட்டுவிட்டு வீட்டிற்குப் போய்விடலாமா’ என்கிற எண்ணம் பல சமயங்களில் எனக்கு ஆழமாக எழுந்தது.

கடந்த ஜனவரி மாதம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை ‘ஒரு தோல்வியடைந்த கண்காட்சி’ என்று நான் ஊடகங்களில் வெளிப்படையாக விமர்சித்தபோது சம்பந்தப்பட்டவர்களுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியது. தோல்வியடைந்ததற்கான காரணங்களை நான் மிகத் தீவிரமாக முன்வைத்தபோதும், யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. வியாபாரம் செய்யும் விதமாக மட்டும் ஒரு கண்காட்சியைக் கருதுவது, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள மறுப்பதாகும். ஆனால் ஒரு கண்காட்சி தோல்வியடைவதற்கான அதே காரணங்களுடன், நான்கே மாதத்தில் இன்னும் இரண்டு கண்காட்சிகளை ஒழுங்கு செய்து இந்த அபத்தத்தை அதிகரித்திருக்கிறார்கள். திருச்சி, கோவை, நெல்லை என பல நகரங்களில் முறையான புத்தகக் கண்காட்சிகள் இல்லை. இந்த உழைப்பையும் போட்டியையும் அங்கெல்லாம் கொண்டு போய் செலுத்தியிருந்தால் உபயோகமானதாக இருந்திருக்கும்.

தமிழகத்தில் சிறியதும் பெரியதுமாக சுமார் ஆயிரம் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களாவது இருப்பார்கள். ஆனால் சென்னை மற்றும் மதுரை என இரண்டு புத்தகக் கண்காட்சிகள் மட்டும்தான் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தால் நடத்தப்படுகிறது. கொஞ்சம் முயற்சியும் கனவும் இருந்தால் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் சேர்ந்து, எல்லா இடங்களுக்கும் வெற்றிகரமான கண்காட்சிகளைக் கொண்டு செல்ல முடியும். அரங்குகளை அமைப்பது மட்டுமல்ல, அந்தந்த ஊரிலுள்ள கல்வி நிறுவனங்கள், பண்பாட்டு அமைப்புகள், ஊடகங்கள் இவற்றின் துணையுடன் இதை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்ற வேண்டும். ஆனால் இதையெல்லாம் யார் செய்யப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி. புத்தகங்களை வெறும் சரக்காகவும் பண்டமாகவும் பார்க்கும் பதிப்பாளர்கள், இதன் பின்னே இருக்கும் சமூக சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடியாது.

தமிழ்நாட்டினுடைய மக்கள்தொகை மற்றும் கல்வி வளர்ச்சியின் விகிதாச்சாரத்தோடு ஒப்பிட்டால், இன்று புத்தகங்கள் வாங்குபவர்கள், வாசிப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவு என்பது தெரியும். நமது கல்வியமைப்பில் மதிப்பெண்களுக்கான படிப்பு அல்லது தொழில்சார் படிப்பு என்பதோடு வாசிப்புக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டது. பாடத்திட்டத்தில் அல்லாத நூல்களை வாசிப்பதற்கு, வாங்குவதற்கு எந்தவிதமான விருப்பமோ அவகாசமோ பெரும்பான்மை இளைஞர்களிடம் இல்லை.

பொழுதுபோக்கு என்ற நிலையில்கூட இன்று வாசிப்பு என்பது அற்றுப்போய்விட்டது. என்னுடைய 20வது வயதில் டால்ஸ்டாயின் ‘போரும் வாழ்வும்’ நாவலின் 2000க்கும் மேற்பட்ட பக்கங்களை ஒரு தியானம் போல ஒரு வாரத்தில் படித்து முடித்தேன். இன்றைய வாழ்க்கை முறையில் என்னைச் சிறைக்கு அனுப்பினாலொழிய அப்படிப்பட்ட ஒரு வாரம் கிடைப்பது சாத்தியமே இல்லை. வெறும் புத்தகங்களும் பத்திரிகைகளும் மட்டுமே இருந்த இடத்தில் இன்று எவ்வளவு ஊடகங்கள், எவ்வளவு கவனச் சிதறல்கள். வேலை நேரம் போக பொழுதுபோக்கிற்காக இருக்கும் நேரங்களின் பெரும் பகுதியை சினிமாவும் தொலைக்காட்சியும் சமூக வலைத்தளங்களும் எடுத்துக்கொண்டு விட்டன. ‘‘ஒரு புத்தகத்தின் 10 பக்கங்களை இன்று தொடர்ச்சியாக வாசிக்க முடிவதில்லை’’ என்று இளைஞர்கள் சொல்வதைக் கேட்கிறேன். ஆனால் தமிழ் நாவலாசிரியர்கள் 1000 பக்க நாவல்களை பயமில்லாமல் எழுதுகிறார்கள். ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு 1000 பக்கங்களிலான நாவல்களை எழுதுவதற்கு கேன்வாஸ் இருக்கிறதா என்கிற கேள்விகளெல்லாம் ஒரு புறமிருக்கட்டும். இந்தப் புத்தகங்கள் எப்படி விற்பனையாகின்றன என்பதும், விற்பனையான புத்தங்கள் படிக்கப்படுகின்றனவா என்பதும் முக்கியமான கேள்விகள். பெரிய புத்தகங்களை வாங்குவதிலுள்ள ஒரே சௌகரியம், அதைப் படிப்பதை எப்போதும் ஒத்திவைத்துக்கொண்டே இருக்கலாம் என்பதுதான். நம்முடைய நுகர்வு கலாசாரத்தில் எவ்வளவோ பொருள்கள் வாங்கப்பட்டு உபயோகிக்கப்படாமல் கிடப்பதுபோல புத்தகங்களும் சில வீடுகளில் கிடக்கின்றன. எப்போதாவது நேரம் கிடைக்குமென்று அந்தப் புத்தகத்தை வாங்கியவர்கள் வருடக்கணக்கில் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனல் அப்படி ஒரு நேரம் காலமாற்றத்தால் நிரந்தரமாகப் பறிக்கப்பட்டுவிட்டது என்பதை அவர்கள் அறிவதில்லை.


‘புத்தகங்களை டிஜிட்டல்மயப்படுத்திவிட்டால் தமிழர்கள் அவற்றை வாசித்துத் தீர்த்துவிடுவார்கள்’ என்று சிலர் கனவு காண்கிறார்கள். புத்தகங்கள் எந்த வடிவில் இருக்கின்றன என்பதல்ல பிரச்னை. அவற்றை படிப்பதற்கான உள்ளார்ந்த ஆசையும் தேவையும் நமக்கு இருக்கிறதா என்பதுதான் கேள்வி. உடனடியாகப் படித்து, உடனடியாகப் பார்த்து மறந்துவிடுவதற்கு ஏராளமான விஷயங்கள் ஒவ்வொரு கணமும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இங்கு மொழி, சிந்தனை, பண்பாடு, வரலாறு என்றெல்லாம் எதுவும் தேவையில்லை. துண்டு துண்டான சில நொடி அனுபவங்களும் வெளிப்பாடுகளும் போதுமானதாக மாறிவிட்டது. இங்கே எழுத்தாளன் என்பவன் யுத்தத்தினால் காலியான ஒரு நகரத்தில் கைவிடப்பட்ட வயோதிகர்களையும் நோயாளிகளையும் போலக் காட்சியளிக்கிறான்.

வாசிப்பதற்கு புத்தகங்களை மட்டுமல்ல... வாசகனையும் சேர்த்து உற்பத்தி செய்யவேண்டிய ஒரு காலத்தில் வாழ்கிறோம்.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்மோடியை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகள் தயங்குவது ஏன்?
- த.சத்திய நாராயணன், அயன்புரம்.

அவர், தான் இருக்குமிடத்தில் எல்லோரையும் இல்லாமல் ஆக்கிவிடுவார் என்பதால்.
‘சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வாதாட அனுமதி தரமாட்டேன்’ என்று தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் கூறியதைப் பற்றி...
- அ.சுகுமார், காட்டுக்கானூர்.

‘யார் இந்த ஆள்’னு எப்பவோ வந்திருக்க வேண்டிய சந்தேகம் இப்ப வந்திருக்கு.
இன்னும் மூணு மாதத்தில் த.மா.கா. மீண்டும் ஜி.கே.வாசனால் உயிர்பெறும் என்று சொல்லப்படுவது உண்மையா?
- சையது முஹம்மது தமீம், திருமங்கலக்குடி.

தரை தட்டிப்போன பிரதிபா காவேரி கப்பலை ஜி.கே.வாசன் உத்துப் பார்த்துக்கிட்டு உக்கார்ந்திருந்தப்பவே நினைச்சேன், ஏதோ யோசனையில் இருக்கிறார் என்று.
ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துருவைப் பற்றி...
- அ.குணசேகரன், புவனகிரி.

நீதித்துறையில் நாகரிக சமூகத்தின், நவீன சமூகத்தின் முற்போக்கான மதிப்பீடுகளை பயன்படுத்திய அரிதினும் அரிதான நீதிமான்.
கமல் படம் ரிலீசானால் காய்ச்சியெடுக்கும் இலக்கியவாதிகள், ரஜினி படத்தை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்?
- இரா.ரமேஷ்பாபு, வரகூர்பேட்டை

ரஜினி படம் அனுபவிப்பதற்கு; கமல் படம் ஆராய்வதற்கு.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள். email: editor@kungumam.co.in)
நெஞ்சில் நின்ற வரிகள்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை.
கண்ணோடு மணியானாய்
அதனால் கண்ணை விட்டுப் பிரிவதில்லை.
- வைரமுத்துவின் இந்த வரிகளைக் கேட்கும்போதெல்லாம் அதன்கூடவே ஒரு குறளும் நினைவுக்கு வந்துவிடும்.
கண்ணுள்ளார் காதல வராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து

‘என் காதலன் என் கண்ணுக்குள்ளேயே நிரம்பியிருக்கிறான். மை தீட்டினால் அதன் கருமையில் எங்கே அவன் மறைந்துவிடுவானோ என்று மை தீட்டாமல் இருக்கிறேன்’ என்று தலைவி கூறுவதாக வள்ளுவர் கூறும் காதலின் பரிதவிப்பை இந்த வரிகள் இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்கின்றன. இந்த உலகில் நாம் காண்கிற அற்புதமான காட்சிகளுக்கெல்லாம் நமது கண்கள் ஒரு கண்ணாடித் திரைபோல்தான் இருக்கின்றன. அந்த அற்புதங்கள் கண்ணாடித் திரையில் பட்டு விலகும்போது அவற்றை தேக்கி வைத்துக்கொள்ள முடியாதா என்று மனம் தத்தளிக்கிறது. அந்தத் தத்தளிப்பிலிருந்துதான் கவிதையும் கலையும் பிறக்கிறது. கண்ணோடு காண்பதை கண்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதைக் கண்ணின் கருவிழியாக்கிக் கொள்வதைத் தவிர வேறு எந்த வழியுமில்லையென்பதை கவித்துவத்தின் உச்சத்தில் நின்று வைரமுத்து நிறுவுகிறார்.

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள்


இன்று சமூக வலைத்தளங்களில் எழுதும் இளைஞர்களில் சாதி, மத, அரசியல் செய்பவர்களைத் தாண்டி, அதீதமான நகைச்சுவை உணர்ச்சியோடும், கூரிய சமூக அரசியல் விமர்சனத்தோடும், மிகுந்த சுய எள்ளலோடும் எழுதும் சில இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்தவர், டிமிட்ரி இவ்நோஸ்கி. சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கான குறுக்குவெட்டுப் பார்வையும், சடாரென அடி மடியில் கைவைக்கிற துணிச்சலும் இயல்பாகவே இவருக்கு இருக்கிறது.
சில உதாரணங்கள்...
*  அரசியலில் ஒரு பற்றற்ற துறவி போல வாழ்ந்து வருகிறேன் - ஜெயலலிதா
இதைக் கேட்டு சிரிக்காமல் இருப்பதற்கு பெயர்தான் ஜென் நிலை.
*  தமிழக காங். தலைவருடன் ராகுல் ஆலோசனை...
‘‘எத்தன பேரு சேர்ந்து உங்கள அடிச்சாங்க?’’
‘‘ஒரே ஒருத்தன்தான்...’’
‘‘அவன் பேரு..?’’
https://www.facebook.com/vinayakdevan?fref=ts