இரண்டாம் உலகம் : யாரும் எட்டிப் பார்க்காத பூமி! இயக்குனர் செல்வராகவன்





குழந்தை லீலாவதியை கொஞ்சிக் கொண்டிருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். ‘இரண்டாம் உலகம்’ படப்பிடிப்பு முடித்த இளைப்பாறல். பட்டுக் குழந்தையின் சின்ன சிணுங்கலுக்குக்கூட செல்வாவின் முகம் வலிக்கிறது. ‘‘இதுதாங்க சொர்க்கம்... மனதைத் திறக்கிற கருவி. கடவுளுக்கு அடுத்து நிம்மதி தருவது இசையும் குழந்தைகளும்தான். இப்ப நான் இவள் கைப்பிடியில் இருக்கேன்’’ - ஆனந்தமாக சிரிக்கிறார் செல்வா. ‘‘வாங்க பேசுவோம்’’ என அவர் ஆரம்பிக்க, விரிந்து சென்றது உரையாடல்...

‘‘ ‘இரண்டாம் உலகம்’ நிஜமாகவே நீண்ட நெடிய பயணம். சென்னையிலிருந்து ஜார்ஜியா வரைக்கும் போய்... தங்கி... எடுக்க நினைத்த சினிமா வந்திருக்கா?’’
‘‘அது மாதிரி கொண்டு வர்றதுதானே முயற்சி. ‘ரொம்ப நாள் இழுத்துடுச்சே’ன்னு எல்லாரும் பேசுறாங்க. உடனே எடுக்கணும்னா, வீட்டைச் சுத்தி காமெடி பண்ணித்தான் எடுக்கணும். கொஞ்சம் யோசிக்கணும்... சட்னு வச்சுக் கொடுக்க இது என்ன சாம்பாரா? பொதுவாக இது மரியாதை இல்லாத உலகமா போச்சு. சினிமாக்காரங்களே கலையை மதிக்கலைன்னா அது என்னத்துக்காகும்? மக்கள் மனசில சினிமான்னா மரியாதை வரணும். சினிமா ஹீரோ, ஹீரோயினை பார்க்கவும் தொட்டு ரசிக்கவும் ஆசைப்படுறாங்களே தவிர, மரியாதை இல்லை. இவ்வளவு நாளாக இல்லாத மரியாதையை இப்ப கேட்கிறது சங்கடமாகத்தான் இருக்கு. ஐ.டின்னா பொத்துக்கிட்டு வர்ற மரியாதையை சினிமாவுக்கும் கொடுங்களேன்...
எங்க கஷ்டங்களையும் புரிஞ்சுக்கணும். என்ன மாதிரி படத்துக்கு எத்தனை நாட்கள் ஆகும்னு எல்லோரும் தெரிஞ்சுக்கணும். கிச்சுகிச்சு மூட்டுறது என் வேலை கிடையாது. ‘அவதார்’ படத்தை ஆறு மாசத்திற்குள் கொடுன்னா கொடுக்க முடியுமா? ஹாலிவுட்டில் பண்ணினா கண்மூடித்தனமா ஏத்துக்கிறாங்க. இங்கே வேற வகையில் கொடுத்தால் எல்லாமே கேள்விகளா கேட்கிறாங்க. சங்கடமா இருக்கு. எனக்கு இவங்களை புரிஞ்சிக்க முடியலை.’’

‘‘இங்கே எல்லாமே இப்ப காமெடி படங்களாக வருது. ஈஸியாவும் ஜெயிக்குது. நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்களோ..!’’
‘‘நீங்க சொல்றது சினிமா கிடையாது. சினிமாங்கிறது ரொம்ப பெரிய வார்த்தை. பிரான்ஸ், ஈரான் பக்கமெல்லாம் சினிமாங்கிறது கடல் மாதிரி அளவே இல்லாதது. மும்பையில கூட நல்ல சினிமாங்கிறது சின்ன விதையாப் போட்டு பெரிய மரமாகிட்டது. தெற்குப் பக்கம் அது வரவே இல்லை. காமெடியா கிச்சுகிச்சு மூட்டி எடுக்கிறதை சேஃப்டின்னு சொல்றாங்க. போட்ட பணத்தை திரும்ப எடுக்கணும்னு சொல்றாங்க. முதலுக்கு மோசமாகக் கூடாதுன்னு நினைக்கிறவன் பிஸினஸ்மேன். அதை சினிமான்னே நீங்க சொல்லக்கூடாது.’’
‘‘என்ன மாதிரி அனுபவத்தை ‘இரண்டாம் உலகம்’ தரப் போகுது?’’



‘‘எப்படியிருந்தாலும் இது ஹாலிவுட் படம் மாதிரியிருக்குன்னு சொல்லப்போறாங்க. என்னைக்கு நான் ஒரிஜினலா எடுத்தேன்னு ஒத்துக்கிட்டாங்க? உடனே இன்டர்நெட்டை தட்டி, இது எங்கேயிருந்து வந்துச்சுன்னு பார்ப்பாங்க. படம் எடுக்கிற நம்ம சகோதரனை எப்படி மட்டம் தட்டலாம், முகத்தில காறித் துப்பலாம்னு நினைப்பாங்க. ‘காதல்கொண்டேன்’ பார்த்திட்டு ‘குணா’ மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. அதுலயும் இரண்டு பேரும் காட்டுக்குள்ளே போயிடுறாங்க, இதிலயும் போறாங்க. ஆனா, காட்டுக்குள்ளே போறது மட்டும் போதுமா..?

ஒரு ஆணும், பொண்ணும் கல்யாணம் கட்டிக்கிட்டு புருஷன் பொண்டாட்டி ஆகிட்டாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சாலே ‘மௌன ராகமா’ன்னு கேக்கறாங்க. என் படமும் சீக்கிரம் ரிலீசாகும்... ‘அவதாரி’ல் ஆரம்பிச்சு, 1940ல் வந்த ஹாலிவுட் படம் வரைக்கும் ‘இரண்டாம் உலகம்’ அதுவா இதுவான்னு எழுதப்போறாங்க. ‘எங்களில் ஒருத்தன் எங்கெங்கோ போய் ரத்தம் சிந்தி இப்படி ஒரு படம் எடுத்திருக்கான்’னு யாரும் பரவசப்படப் போறதில்லை...’’

‘‘நீங்க தனுஷை வச்சுக்கிட்டு உங்களின் சிறந்த படங்களை எடுத்திட்டீங்க... அந்த வகையில் ஆர்யா சரியா வந்தாரா?’’
‘‘ஏதோ சில சிரிப்புப் படங்களில் நடித்ததற்காக அவரை குறைத்து மதிப்பிட முடியாது. நல்ல சேனல் அமைந்தால், அருமையாக நடிக்கிறதில் அவர் குறையே வைக்க மாட்டார். முதல் நாலைந்து நாள்தான்... அப்புறம் எல்லாமே அமைஞ்சது. அனுஷ்காவும் ஆர்யா மாதிரிதான். டெடிகேட்டட் பொண்ணு. ஆர்யா ரொம்ப ஃப்ளெக்ஸிபிள். அவர் மனசு வச்சு ரெடின்னு வந்திட்டால், அவரை வச்சு ஒரு கிரியேட்டர் விளையாட முடியும். ஜார்ஜியான்னு யாரும் எட்டிப் பார்க்காத பூமிக்கெல்லாம் போன பிறகு ஒருத்தருக்கொருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டோம். குதிரை சவாரி செய்யணும், யானையில் ஏறிப் போகணும்னு சில அசாத்தியங்கள் அவங்களுக்கு இருந்தது. அனுஷ்கா பக்குவப்பட்ட நடிகை. பிரமாதமான பெர்ஃபார்மர். இது சவாலான கேரக்டர். அனேகமா ஆர்யா, அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் இது ஒரு புது இன்னிங்ஸா இருக்கும். இப்ப கிட்டத்தட்ட படம் முடிஞ்ச நேரம். என் தேர்வுகள் சரிதான்னு தோணுது!’’



‘‘ஜார்ஜியாவிலேயே நிறைய நாட்கள் தங்கி எடுத்ததால், இது என்ன மாதிரி படம்னு கூட யாருக்கும் தெரியலையே... சொல்லக் கூடாதா?’’
‘‘அதுதான் முன்பே சொன்னேனே. கதை எப்படின்னு சொன்னால், அது எப்படி சாத்தியம்னு பார்க்க மாட்டாங்க. 13 வருஷமா தமிழ் சினிமாவில் இருக்கேன். என்கிட்ட மட்டும் பத்தாயிரம் கேள்வி கேட்பாங்க. ஒரு ஹீரோ சுமோவை இடிக்கிறார், அது சொட்டையா போகுது. தூக்கி வீசுறார்... பனை மரம் உயரத்திற்கு அடியாள் போறாரு. அதையெல்லாம் கேள்வி கேட்காம ஏத்துக்கிட்டு, என்கிட்ட மட்டும் கேட்கிறாங்க. இங்கே உண்மைக்கும் கிளாமருக்கும் வித்தியாசம் தெரியலை. ஒரு ஆணும் பொண்ணும் கட்டிப் பிடிச்சா வல்கர்னு சொல்றாங்க. சுவிஸ் நாட்டில் பனி மலையில அரைகுறையாக கட்டிப் பிடிச்சு உருண்டால் அது பாடல் காட்சியாம். இப்படியொரு இடத்தில் என் படத்தைப் பார்த்தே தெரிஞ்சுக்கட்டும்!’’



‘‘தேசிய விருது... இந்திப்படம்... கையில் நல்ல படங்கள்னு தனுஷோட கிராஃப் மேல போயிட்டிருக்கு... இதை எதிர்பார்த்தீர்களா?’’
‘‘குடும்பக் கஷ்டத்திற்குத்தான் அவர் நடிக்க வந்தார். கையில் ஒரு படம்தான். தப்பாச்சுன்னா குடும்பத்தோட தேனிக்குப் போக வேண்டியதுதான். பிரச்னை ஓய்ந்தால் போதும்னு இருந்த காலம். அப்படித்தான் அவர் ஹீரோவா வந்தார். மத்தபடி எல்லாமே அவரோட திறமைதான். ‘புதுப்பேட்டை’ அவரைப் போலவே ஒரு பொடியனோட கதை. அடிக்கிறது உதைக்கிறதைத் தவிர சட்டம், கோர்ட், அரசாங்கம்னு வேற எதுவும் தெரியாத ஒரு பையன். அதுல தனுஷ் காட்டினதெல்லாம் கிளாஸ் நடிப்பு. சும்மா உள்ளே அனுப்பினோம். தெளிஞ்சு வந்தது எல்லாம் அவரோட வேலை. மத்தபடி தம்பிங்கிற பாசமெல்லாம் சினிமாவில் செல்லாது. இந்தியில் அவரோட ஸ்டைல் எல்லாம் புதுசு. வெரிகுட், வரட்டும்!’’

‘‘எல்லோரும் பொறாமைப்படுற குடும்பத் தலைவரா ஆகியிருக்கீங்க... இந்த மாறுதல் எப்படி?’’
‘‘எனக்கு சினிமாதான் சார் லைஃப்! வீட்டில ஒரே ஹால்தான். பாட்டி, அப்பா, அம்மா, தங்கச்சிகள், தம்பி சேர்ந்து படுத்திருப்போம். அந்த நேரம் இன்னிக்கும் மனசில இருக்கு. ஒரே சோப் போட்டு குளிச்ச நாட்கள்தான் அவை. இவ்வளவு நாளாகியும் அம்மா முந்தானையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் இன்னமும் நானும், தனுஷும் அலையுறோம்.
சில பிரச்னைகள் இருந்திருக்கு... ‘என்னடா, இப்படி திட்டுறாங்க... ஒரு பெண்ணும் ஆணும் லிப் டூ லிப் கிஸ் குடுக்கிறது தப்பா? இதுக்கு முன்னாடி தமிழில் வந்தது இல்லையா’ன்னு ‘துள்ளுவதோ இளமை’யின்போது அழுதிருக்கேன். கொலை பண்றவன், கிட்னாப் பண்றவன், மாமூல் வசூல் பண்றவன், கட்டப் பஞ்சாயத்து செய்கிறவன், சாராயம், கஞ்சா, விபசாரம்னு ஆரம்பிச்சு பிக் பாக்கெட் வரைக்கும் நாம் கற்பனை பண்ணி வச்சிருக்கிறவங்களை ஃபீல் பண்ணி, அந்த உலகத்தைப் புரிஞ்சுக்கிட்டு ‘புதுப்பேட்டை’ எடுத்தேன். ‘என்ன படம்ங்க, வயலென்ஸ் பயங்கரமா இருக்கு’னு சொல்லிட்டாங்க. இப்ப அந்தப் படத்தை ‘மாஸ்டர்பீஸ்’னு சொல்றாங்க. என்னடா உலகம் இதுன்னு ஆச்சர்யப்படறேன். இப்படி தண்டிக்கப்படறப்ப நிறைய பேருக்கு பைத்தியம் பிடிக்கும்; இல்ல, குடிகாரனா மாறிடுவாங்க. அது மாதிரி எதுவும் இல்லாமல் நான் முழுசா இருக்கேன். வாழ்க்கையில் பெரிய பிரயாணத்துக்குப் பிறகுதான் திருப்பம் வரும். நிம்மதியாக இருந்தாலே போரடிக்குதுன்னு இப்ப நிறைய பேர் சொல்றாங்க. வெயிலோட அருமை நிழல்லதான் தெரியும். எனக்குக் குடும்பம் இப்ப முக்கியம்!’’
- நா.கதிர்வேலன்