தீயா வேலை செய்யனும் குமாரு





காதல் பாரம்பரியத்தில் பிறந்த சித்தார்த்துக்கு மட்டும் லவ் ஏரியாவில் வாஸ்து சரியில்லை. வேலைக்குப் போன இடத்தில் சித்தார்த் மனதில் பத்ரிநாத் வெள்ளம் போல காதலைப் பொங்க வைக்கிறார், புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஹன்சிகா. காதலுக்கு ஐடியா கொடுப்பதற்கென்றே அலுவலகம் நடத்தும் சந்தானத்துடன் சகவாசம் வைத்துக்கொண்டு அடுத்தடுத்த அடிகளை எடுத்து வைக்கும் சித்தார்த், ஹன்சிகாவை கைப்பிடிக்கிறாரா இல்லையா என்பதே மீதிக் கதை.

ஒரே எஸ்.எம்.எஸ்ஸில் தட்டிவிடக் கூடிய கதைதான். ஆனால், சிரிப்பு திரைக்கதைக்காக ‘தீயாய் வேலை செய்து’ தான் ‘வின்னர்’ என மீண்டும் நிரூபித்திருக்கிறார் சுந்தர்.சி.
சித்தார்த்துக்கு அருமையான அடுத்த வரிசை. பெரும்பாலும் கலாய், காமெடி, டயலாக் டெலிவரிதான் நடிப்பு. அதில் உறுத்தாமல் பொருந்தியிருப்பதில் சித்தார்த் ஜெயிக்கிறார். டான்ஸில் வித்தியாச ஸ்டெப்பில் ஈஸியாக முன்னேறுவதில், கொஞ்சம் வருஷம் முன்னாடியிருந்த கமலைப் பார்த்த நினைவு. ஹன்சிகாவை பார்த்த நொடியில் பட்டாம்பூச்சியாகப் பறப்பதும், சந்தானத்தின் ஐடியாக்களை அமல்படுத்துவதும் புத்தம் புது ரசனை. அலுவலகத்தில் ஆணழகனாக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் என்று சித்தார்த் வீசும் கிசுகிசு அம்பில் அவரே சிக்குவது, பிறகு அந்த முடிச்சை அவிழ்க்கப் போராடுவது என காட்சிக்குக் காட்சி காமெடி களேபரம்.

ஆரம்பத்தில் சற்றே மெதுவாக நகரும் படம், சந்தானம் என்ட்ரியானதும் எக்ஸ்பிரஸ் வேகம் எடுக்கிறது. சித்தார்த் ஐடியா கேட்கும்போதெல்லாம் கார்டு தேய்க்கும் இ.டி.சி மெஷினை நீட்டி பில் தீட்டுவது, விபசார கேஸில் சித்தார்த்தை மாட்ட வைக்க நினைத்து தான் தோண்டிய பள்ளத்தில் தானே விழுவது என சந்தானத்தின் அலப்பறையில் தியேட்டரில் சிரிப்பு அள்ளுகிறது.

படத்தின் இன்னொரு இணை நாயகன் சந்தானம்தான். ‘கோலிவுட் ஸ்டார்ஸ் எல்லாம் எங்கிட்டதான் லவ்வுக்கு ஐடியா கேட்பாங்க. ஆர்யா கூட மாசம் ஐந்து லட்ச ரூபாய் பில் போடுற அளவுக்கு ஐடியா கேட்கிறான்’’ என சந்தானம் அள்ளிவிடும் காட்சியில் ஆர்யாவே விழுந்து விழுந்து சிரிக்கலாம். படத்தின் திருப்பம் கூட சந்தானத்தின் திட்டத்தால்தான் வருகிறது.

‘‘லவ்வுதானே ஃபெயிலியராச்சு... என்னவோ லிவர் ஃபெயிலியர் ஆன மாதிரி குடிக்கிறதை நிறுத்துறேங்கறே?’’ என அவர் அடிக்கும் டைமிங் பன்ச்சுகளுக்கு இளைஞர்கள் கூட்டம் கை சிவக்க அப்ளாஸ் பண்ணுகிறது. சந்தேகமே இல்லை... இது உங்க சீஸன் பாஸ்!

ஆரம்பத்தில் சித்தார்த் ‘‘ஐ லவ் யூ’’ சொல்ல நினைத்து தயங்கி சொதப்புவதெல்லாம் ‘ஸ்பைடர் மேன்’ சீரிஸ் படங்களை நினைவுபடுத்துகிறது. சந்தானத்தின் ஃப்ளாஷ் பேக் ஓகே... ஆனால், மீண்டும் அவர் அப்பாவிடம் போய் ஒருமையில் பேசி ஓவர் ரீயாக்ட் செய்வது வளவள!

கொஞ்சம் இளைத்திருந்தாலும் ஹன்சிகாவின் அழகில் மாற்றமில்லை. அமர் கோபிநாத்தின் ஒளிப்பதிவு அம்சம். ஜப்பான் பாடல் காட்சிகளில் இன்னும் கேமரா ஸ்பெஷல். சத்யாவின் இசையில், ‘அழகென்றால்’ பாடல் ஈர்க்கிறது. சுந்தர்.சி தலைமையில் ‘சூது கவ்வும்’ நலன் குமாரசாமி உள்ளிட்ட திரைக்கதைக் குழு வித்தியாச காமெடி ட்ரீட்மென்ட்டில் கதையை விரட்டியிருக்கிறது!
‘தீயா வேலை...’ செய்திருக்காங்க!
 குங்குமம்
விமர்சனக் குழு