கர்ணனின் கவசம்





‘‘என்ன சொல்ற?’’ - நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் உயரமான மனிதன் மீண்டும் கேட்டான்.
‘‘உண்மையைச் சொல்றேன். இவர்தான் தேவர்களின் தலைவர். சர்வ சக்தி படைச்ச இந்திரன்...’’ - கண்கள் பனிக்க நெகிழ்ச்சியுடன் கூறிய குள்ள மனிதன், அப்படியே மண்டியிட்டு வணங்கினான். அவனைச் சேர்ந்த மற்ற எட்டு பேரும் அப்படியே இந்திரனை வணங்கினார்கள்.
ஃபாஸ்ட்டும், சூ யென்னும் மட்டும் அசையாமல் நின்றார்கள். அவர்களது கண்கள் சந்தித்துக் கொண்டன. உரையாடின. கனவுகள் விரிந்தன. தேடி வந்த பொருளை அடையப் போகிறோமா..?
சட்டென்று ஃபாஸ்ட்டின் கரத்தை சூ யென் அழுத்தினான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக ஃபாஸ்ட் தலையசைத்தான். பிறகு குள்ள மனிதனைப் போலவே இருவரும் மண்டியிட்டார்கள். வணங்கினார்கள்.
‘‘வாங்க...’’ என்று சொல்லியபடியே எழுந்து நின்றான் குள்ள மனிதன்.

‘‘இருங்க... இருங்க...’’ என்று கத்திய மத்திம உயர மனிதன், உயரமான தன் தோழனை ஏறிட்டான். ‘‘இது செவ்வக அறை. நாம ஒரு பக்கத்துல இருக்கோம். மறுபக்கத்துல இந்திரன் அமர்ந்திருக்கார்...’’ என்றவனை இடைமறித்தான் குள்ள மனிதன்.

‘‘என்ன சொல்ல வர்றேன்னு புரியலை...’’    
‘‘இந்திரனைச் சுத்தி என்ன இருக்குனு பாருங்க...’’ - யாரையும் பார்க்காமல் சொன்னான் மத்திம உயரம் கொண்ட மனிதன்.
பார்த்தார்கள். சுற்றிலும் சிற்பங்கள். அதுவும் பழங்கால கோயில்களில் இருக்கும் கற்சிற்பங்களின் மாதிரிகள்.
‘‘இந்திரன் காலத்துல கற்களால சிற்பம் வடிக்கிற முறை புழக்கத்துல இல்லை...’’ என்று இழுத்தான் மத்திம உயரம் கொண்ட மனிதன்.
‘‘மேல சொல்லு...’’ குள்ளமான மனிதன் இடைமறித்தான்.
‘‘இந்த ஏற்பாடு இடைக்காலத்துலதான் வந்திருக்கணும்...’’
‘‘ம்...’’

‘‘ஏற்கனவே எந்திரப் பொறியோட ஆபத்தைத் தாண்டித்தான் இங்க வந்திருக்கோம். ஒருவேளை அதே மாதிரியான பொறியை இங்கயும் பொருத்தியிருக்கலாம் இல்லையா?’’
‘‘வாய்ப்பிருக்கு...’’ என்ற குள்ள மனிதன், உயரமான மனிதனைப் பார்த்து செய்கை செய்தான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக இமைகளை மூடித் திறந்த உயரமான மனிதன், முன்பு போலவே தன் தலைமுடியை வேருடன் பிடுங்குவதற்காக கைகளை உயர்த்தினான். ஆனால், பிடுங்கவில்லை. பதிலாக கைகளை இறக்கிவிட்டு ஃபாஸ்ட்டையும், சூ யென்னையும் பார்த்தான். அவன் இதழ்களில் புன்னகை பூத்தது.

இதைக் கண்ட ஃபாஸ்ட், சூ யென்னின் கண்களில் அச்சம் படர ஆரம்பித்தது. இருவரது அடி வயிற்றிலும் பயம் ஊற்றெடுத்தது. நடக்கவிருக்கும் விபரீதத்தை மைக்ரோ நொடியில் உணர்ந்தார்கள். இந்த முறை எந்த உரோம மனிதனையும் அனுப்பப் போவதில்லை. பதிலாக உயிருடன் இருக்கும் தங்களைத்தான் பலியிடப் போகிறார்கள்...

‘‘இல்ல... இல்ல... எங்களை விட்டுடுங்க...’’ - கோரசாக அலறினார்கள்.

‘‘அப்படியெல்லாம் உங்களை விட்டுட முடியாது. கழட்டுங்க...’’ என்றான் உயரமான மனிதன்.
‘‘வாட்?’’ ஃபாஸ்ட்டின் குரல் குழறியது.
‘‘நேரம் போய்க்கிட்டே இருக்கு. சீக்கிரம் சொன்னதை செய்ங்க...’’ - அழுத்தத்துடன் கட்டளையிட்டான் குள்ள மனிதன்.
‘‘புரியலை...’’ - சூ யென் வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

‘‘முட்டாள்களா... நீங்க போட்டுட்டிருக்கிற சட்டை, பேன்ட்டை அவிழ்த்துக் கொடுங்க...’’ - கர்ஜித்தான் உயரமான மனிதன்.
ஒருவரையொருவர் பார்த்தபடி அணிந்திருந்த உடைகளை கழற்றிக் கொடுத்தார்கள். கையில் வாங்கிய உயரமான மனிதன், கண்களை மூடி எதையோ முணுமுணுத்தான். பிறகு அவ்விருவரின் உடைகளையும் தன் முன்னால் வீசினான்.
அடுத்த விநாடி அந்த உடைகள் உயிர்பெற்று எழுந்தன. நடப்பதை கண்கள் விரிய ஃபாஸ்ட்டும், சூ யென்னும் பார்த்தார்கள். அச்சு அசலாக அவர்களைப் போலவே இருவர் அவர்களுக்கு முன்னால் நின்றார்கள். இந்திரனை நோக்கி அடியெடுத்து வைத்தார்கள்.
அப்போதுதான் அந்த விபரீதம் நடந்தது.

இந்திரனைச் சுற்றியிருந்த சிற்பங்களில் இருந்து அம்புகள் பாய்ந்து வந்தன. நிழல் உருவங்களான ஃபாஸ்ட், சூ யென்னின் உடல்களை சல்லடையாக சலித்தன. நீலம் பாய்ந்த நிலையில் இருவரும் அந்த இடத்திலேயே வெட்டப்பட்ட மரம் போல் விழுந்தார்கள். இறந்தார்கள்.
‘‘நீங்க ரெண்டு பேரும் இப்ப செத்துட்டீங்க...’’ என்றபடி இடி இடி என குள்ள மனிதன் சிரித்தான்.
இந்த நகைச்சுவையை ரசிக்கும் நிலையில் ஃபாஸ்ட்டும், சூ யென்னும் இல்லை. தங்களைப் போலவே உயிர்பெற்ற இரு உருவங்கள், ஒரு முழு நிமிடம் கூட வாழவில்லை என்ற உண்மை அவர்கள் முகத்தில் அறைந்தது. உடல் நடுங்க, வியர்த்து வடிய அப்படியே பிரமை பிடித்து நின்றார்கள்.
‘‘அம்புல கொடிய விஷம் தடவப்பட்டிருக்கு...’’ புருவங்கள் முடிச்சிட, மத்திம உயரம் கொண்ட மனிதன் வாயைத் திறந்தான்.
‘‘ஆமா. வாசுகி பாம்போட விஷம்...’’ - சட்டென்று பதிலளித்தான் குள்ள மனிதன்.
‘‘பாற்கடலை கடைய தேவர்களும், அசுரர்களும் கயிறா பயன்படுத்தினாங்களே... அந்த வாசுகியா?’’
‘‘ஆமா...’’
‘‘இதைத் தாண்டி எப்படி இந்திரன்கிட்ட போக?’’
‘‘ஏதாவது வழியிருக்கும்...’’ என்ற குள்ள மனிதன் தாங்கள் இருக்கும் பகுதியை கண்களால் அலசினான். எதுவும் தட்டுப்படவில்லை. திருகுவதற்கான சக்கரங்களோ, அல்லது சாவிக்கான துவாரங்களோ எதுவுமே அகப்படவில்லை. ஆனால், தரையோடு தரையாக ஒரேயொரு பலிபீடம் மட்டும் தட்டுப்பட்டது.

குனிந்து அதை பரிசோதித்தான். தரைக்கும், பலிபீடத்துக்குமான இடைவெளி நூலளவுக்கு இருந்தது. ஆனால், பலிபீடத்தின் மேல்பாகம் தட்டையாகவே இருந்தது.
‘‘இந்த பலிபீடம்தான் அம்புகளை நிறுத்த வழியா?’’ - மத்திம உயரம் கொண்ட மனிதன் கேட்டான்.
‘‘அப்படித்தான் இருக்கணும். ஏன்னா இந்த பலிபீடம் வழக்கத்துக்கு மாறா ரொம்ப சின்னதா இருக்கு...’’ என்று சொன்ன குள்ள மனிதன், அந்த பலிபீடத்தைத் தடவினான். சட்டென்று அவன் கண்கள் ஒளிர்ந்தன. உடனே தன் வலது கை கட்டை விரலின் நகத்தை தன் இடது கையால் தடவினான். கொஞ்சம் கொஞ்சமாக நகம் வளர ஆரம்பித்தது. அதை அந்த நூலளவு பிளவில் நுழைத்தான். நிமிண்டினான்.
புதைந்திருந்த பலிபீடம் மெல்ல மெல்ல அசைந்தது. மேல் நோக்கி வந்தது. பார்த்தார்கள். அதிர்ந்தார்கள். காரணம், அவர்கள் நினைத்தது போல் அது பலிபீடமல்ல. பதிலாக, பஞ்சலோகத்தில் செதுக்கப்பட்ட மகா மேரு. அதுதான் தலைகீழாக உள்நோக்கி புதைந்திருந்தது.
ஒன்பது பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

‘‘மகா மேரு மலைலதான இந்திரன் வாழறாரு?’’ உயரமான மனிதன் கேட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. விடையை அவனும் எதிர்பார்க்கவில்லை. அந்த மகா மேருவை தன் கைகளில் ஏந்தினான் குள்ளமான மனிதன்.

‘‘ஆரம்பத்துலேந்து மகா மேருவ ஏதோவொரு வடிவத்துல நாம சந்திச்சுகிட்டே இருக்கோம்...’’ சூ யென்னின் செவியில் ஃபாஸ்ட் முணுமுணுத்தான். அதற்கு பதில் சொல்லக் கூட சூ யென்னுக்கு அச்சமாக இருந்தது. உத்தேசமாகத் தலையசைத்துவிட்டு குள்ள மனிதனின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினான்.

மகா மேருவை கைகளில் ஏந்திக்கொண்டு, குனிந்தபடியே மீண்டும் தரையை அலசினான் குள்ள மனிதன். பலிபீடம் இருந்த இடத்திலிருந்து நேராக, ஆள்காட்டி விரல் நுழையும் அளவுக்கு ஒரு பள்ளம் தரையில் தென்பட்டது. என்ன பிரச்னை என்றால், அந்தப் பள்ளம் அறையின் நடுவில் இருந்தது. அதனுள்தான் மகா மேருவின் உச்சியை நுழைக்க வேண்டும் என்பதை குள்ள மனிதன் உணர்ந்தான்.
ஆனால் -
அங்கு செல்ல வேண்டுமென்றால் அறையில் நடக்க வேண்டும். நடந்தால், சிற்பங்களிலிருந்து அம்பு பாயும். அதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. அதைத் தவிர்த்து வேறு எதுவும் செய்யவும் முடியாது.
‘‘வேண்டாம் போகாத...’’ - தடுத்தான் உயரமான மனிதன்.

‘‘வேற வழியில்ல. யாராவது ஒருத்தர் பலியாகித்தான் ஆகணும். அது நானா இருந்துட்டு போறேன். சீறி வர்ற அம்புகளோட வேகத்தை கணக்கிட்டுட்டேன். அதுக்குத் தகுந்தா மாதிரி நடந்துப்பேன். ஒருவேளை என் கணக்கு தப்பினாலும் இந்த மேருவை அதுல நுழைச்சுடுவேன். எப்படியும் அம்புகள் அறையோட இந்த மூலைக்கு வர்றதில்லை. அறைக்குள்ளயேதான் சுழலுது. அதனால நீங்க எல்லாரும் பாதுகாப்பா இங்கயே இருங்க...’’ என்ற குள்ள மனிதனை இறுக்கமாகக் கட்டித் தழுவினான் மத்திம உயரம் கொண்ட மனிதன்.
‘‘போயிட்டு வா...’’ - சொல்லும்போதே அவன் உதடுகள் நடுங்கின.
தலையசைத்துவிட்டு குள்ள மனிதன் அந்த துவாரத்தைப் பார்த்தான். பதினான்கு அடி தொலைவில் அது இருந்தது. நடந்து செல்வது ஆபத்து. ஓடுவது தற்கொலைக்கு சமானம். எனவே பூமியில் பாதம் படாதபடிதான் செல்ல வேண்டும். அதற்கு ஒரே வழி, காற்றில் பறப்பது.

பறந்தான். சரியாக அந்தத் துளை இருக்கும் இடத்தில் செங்குத்தாகக் குனிந்தான். மகா மேருவை அதனுள் நுழைத்தான். அப்படிச் செய்யும்போது தவறுதலாக அவன் கை தரையைத் தொட்டு விட்டது. உடனே சிற்பங்களிலிருந்து அம்புகள் சீறிப் பாய்ந்தன.

‘‘கடவுளே...’’ என எட்டு பேரும் அலறினார்கள். ஆனால், அம்புகள் தன் உடலைத் துளைப்பதற்குள் மகா மேருவை அந்தப் பள்ளத்தில் நுழைத்து, வலது பக்கமாக மடமடவென்று குள்ள மனிதன் திருக ஆரம்பித்துவிட்டான்.

இதனையடுத்து அந்த அதிசயம் நிகழ்ந்தது. எவ்வளவு வேகமாக அம்புகள் சீறி வந்தனவோ, அவ்வளவு வேகத்தில் அதன் சீற்றம் குறைந்தது. சரியாக குள்ள மனிதனின் உடலுக்கு அருகில் வந்த அம்புகள், அவனைத் துளைக்காமல் அப்படியே தரையில் விழுந்தன. அதற்குள் முழுமையாக அவன் மேருவை திருகி முடித்திருந்தான்.

நெற்றியில் வடிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு தரையில் நன்றாகக் காலூன்றினான். சுற்றிச் சுற்றி நடந்தான். சிற்பங்களிலிருந்து அம்புகள் சீறவேயில்லை.

‘‘இப்ப வாங்க...’’ நிம்மதியுடன் குள்ள மனிதன் செய்கை செய்தான். கால்கள் நடுங்க ஒருவர் பின் ஒருவராக அனைவரும் அவன் இருக்கும் இடத்தை அடைந்து, அப்படியே இந்திரனை நோக்கிச் சென்றார்கள்.

இந்திரன் தியானத்திலேயே இருந்தார். அவரை வணங்கி விட்டு அப்படியே தரையில் அமர்ந்தார்கள்.
‘‘இவர் கண் திறக்கிற வரைக்கும் அமைதியா இருப்போம்...’’ என்றான் குள்ள மனிதன்.
‘‘எனக்கென்னவோ கண் திறப்பார்னு தோணலை...’’ எச்சிலை விழுங்கினான் சூ யென்.
‘‘உளறாத...’’ உயரமான மனிதன் சீறினான்.
‘‘நான் சொல்றதை நம்புங்க. இவர் ஒரிஜினல் இந்திரனா இருக்க வாய்ப்பில்ல...’’
‘‘அப்படீன்னா?’’
‘‘  ஙிணீநீளீ ஹிஜீ...’’
‘‘என்னது...’’ - குள்ளமான மனிதன் சட்டென்று எழுந்தான்.

‘‘சிற்பங்கள்ல Back Up உண்டு. மயிலாடில நான் கவனிச்சிருக்கேன்...’’ சூ யென் அடித்துச் சொன்னான்.
அதன்பிறகு குள்ள மனிதன் துளியும் தாமதிக்கவில்லை. பாய்ந்து சென்று இந்திரனைத் தொட்டான். அதிர்ந்தான். ‘‘உண்மைதான். இது சிலை. தத்ரூபமா செதுக்கியிருக்காங்க...’’
‘‘அப்படீன்னா உண்மையான இந்திரன் எங்க இருக்காரு?’’ கவலையுடன் கேட்டான் உயரமான மனிதன்.
‘‘அப்படி யாருமே கிடை யாது...’’ என்று புன்ன கைத்தாள் ஆயி. என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயலட்சுமி.
‘‘ஆமாம் விஜி... ‘இந்திரன்’னு யாருமே இந்த உலகத்துல கிடையாது...’’
‘‘ஆயி..?’’ கண்கள் விரிய கேட்டாள் விஜயலட்சுமி.

‘‘இதுல ஆச்சர்யப்பட ஒண்ணுமில்லை. அது பதவியோட பேரு. பிரதமர், அதிபர், ஜனாதிபதின்னு சொல்றோம் இல்லையா... அதுமாதிரி ‘இந்திரன்’ங்கிறது தேவர்களோட தலைவரை குறிக்கிற ஒரு அடைமொழி. அவ்வளவுதான். இதுவரைக்கும் பதினான்கு பேர் அந்தப் பதவில அமர்ந்திருக்காங்க. அதாவது பதினான்கு இந்திரன்!’’

‘‘...’’
‘‘யஜ்னா, விபஷித், சுஷாந்தி, ஷிபி, விபூ, மனோஜவ், புரந்தர், பாலி, அட்புட், சாந்தி, விஷ், ரிதுதம்மா, தேவஸ்பதி, சுச்சி... இவங்க பதினான்கு பேரும் இந்திர பதவில அமர்ந்திருக்காங்க...’’

‘‘ஆயி... அப்படீன்னா கர்ணன்கிட்டேந்து கவசத்தை வாங்கின இந்திரன் இப்ப எங்க இருக்காரு?’’
‘‘கபாடபுரத்துல!’’
(தொடரும்)