பாரம்பரிய விதைகளைக் காக்கும் பழங்குடி பெண்கள்




விதையின் மீதான உரிமை என்று பறிபோனதோ, அன்றைக்கே விவசாயம் வீழத் தொடங்கியது. உற்பத்தியை பெருக்கும் வெறியில் இயற்கையைச் சிதைத்து விதைக்குள் செயற்கையைப் புகுத்திய விஞ்ஞானம், இன்றைக்கு மலடாகிப் போன நிலங்களை மீட்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது. கோட்டை கட்டி விதைகளைப் பாதுகாத்த விவசாயிகள் எல்லாவற்றையும் கோட்டை விட்டு கை பிசைந்து நிற்கிறார்கள். நம் இயற்கைச் சொத்தான பாரம்பரிய விதை ரகங்கள் பலவும், அமெரிக்காவிலும் பிலிப்பைன்ஸிலும் விதை வங்கிகளின் குளிர்சாதனப் பெட்டியில் அடக்கம் பெற்றுவிட்டன.

மரபு வழி விவசாயத்தை மீட்டெடுப்பது ஒன்றே எதிர்கால சிக்கலுக்குத் தீர்வு என்ற முடிவுக்கு இப்போது விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள். அதற்கு முதலில் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்க வேண்டும். நெல்லைப் பொறுத்தவரை, ஆங்காங்கே ஒரு சிலர் தனிப்பட்ட முயற்சியாக இதைச் செய்கிறார்கள். அதே வழியில், பாரம்பரிய தானிய விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி உற்சாகப்படுத்துகிறார்கள் ஜவ்வாது மலை பழங்குடிப் பெண்கள். 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி அப்பெண்களை உற்சாகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.


ஜவ்வாது மலையில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் மலையாளி மக்கள் வசிக்கிறார்கள். மலைநில விவசாயத்தை பிரதானத் தொழிலாகக் கொண்ட இம்மக்கள், சாமை, தினை, வரகு, சோளம், எள் போன்ற தானியங்களை சாகுபடி செய்கிறார்கள். நாட்டு விதைகளைக் கொண்டு இயற்கை வேளாண் முறையில் இவர்கள் விளைவிக்கிற தானியங்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது.



தானிய உற்பத்தியை அதிகரித்து பணம் ஈட்டும் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல இங்கும் பரவத் தொடங்கியது. உயர் விளைச்சல் ரகங்கள் ஊடுருவின. அதற்கு ரசாயனங்கள் அவசியமாக இருந்தன. நாட்டு ரகங்களை விட விளைச்சல் அதிகமாக இருந்ததால் மக்கள் மதி மயங்கினர். இச்சூழலில், ஜவ்வாது மலை வட்டாரத்தில் உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தீபஒளி சுய உதவிக்குழுப் பெண்கள், பாரம்பரிய தானிய ரகங்களை பாதுகாக்கும் பணியில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் கிடைத்திருக்கிறது பரிசு. குழுவை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பத்மாவதி 8வது வரை படித்திருக்கிறார்.

‘‘பொதுவா எங்க சமூகப் பெண்கள் பெரிய படிப்பெல்லாம் படிக்கிற வழக்கமில்லை. இப்பத்தான் கொஞ்சம் பசங்க மேல்படிப்புக்கு போறாங்க. எங்க எல்லாருக்கும் விவசாயம்தான் ஜீவன். ஆடிப்பட்டத்துல சாமை, மார்கழிப் பட்டத்துல கொள்ளு அல்லது பேய் எள்ளு போடுவோம். பேய் எள்ளு, சூரியகாந்தி விதை மாதிரி இருக்கும். அந்தக்காலத்துல எங்க மக்கள் பேய் எள்ளு எண்ணெயத்தான் பயன்படுத்தினாங்க. இப்போ மொத்தமா யாவாரிங்க வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. சாமை எங்க பாரம்பரிய உணவு. சாமையை உடைச்சு அந்த அரிசியிலதான் சோறு வடிப்போம். உப்புமா, பாயசமெல்லாம் செய்யிறதுண்டு. இப்போ விளையுற சாமையை வித்துட்டு, அரிசிச்சோறு சாப்பிடப் பழகிட்டோம். சிலபேரு நிலத்துல கிணறு தோண்டி நெல்லு, பருத்தின்னு போட ஆரம்பிச்சுட்டாங்க.

3 வருஷம் முன்னாடி எங்க பகுதியில சுய உதவிக்குழுக்கள் ஆரம்பிச்சாங்க. நாங்க 12 பேர் சேந்து தீபஒளி சுய உதவிக்குழு தொடங்குனோம். தொடக்கத்துல பணம் சேக்குறது, வட்டிக்குக் கொடுக்கிறது, பிரிச்சு எடுத்துக்கிறதுன்னு வழக்கமான வேலையைத்தான் செஞ்சோம். விவசாயத்தை விட்டா எங்க மக்களுக்கு வேறு தொழில் தெரியாது. விவசாயம் இல்லாட்டி கேரளாவுக்கு போய் மாசக்கணக்குல தங்கி சித்தாளு வேலை பாப்பாங்க. நல்லது கெட்டதுக்கு ஊருக்கு வந்து போவாங்க. ‘எதுக்காக மலையிறங்கி இன்னொரு ஊருக்கு வேலைக்குப் போகணும்? நாமளே ஒரு தொழிலை ஆரம்பிச்சா என்ன’ன்னு யோசிச்சோம். குழு இருப்பு ரூ.20 ஆயிரத்தை முதலீடாப் போட்டு சாமை மொத்த யாவாரத்தை ஆரம்பிச்சோம். விவசாயிங்ககிட்ட இருந்து ஈரச்சாமையை வாங்கி, காய வச்சு, அடிவாரத்துல இருந்து வர்ற யாவாரிகளுக்கு வித்தோம். ஓரளவுக்கு லாபம் கிடைச்சுச்சு.



சாமையைப் பொறுத்தவரை விதைச்சுட்டு வீட்டுக்கு வந்தா அறுக்கத்தான் வயக்காட்டுக்குப் போவோம். ஆடு, மாடுங்களோட கழிவே உரமாயிரும். பராமரிப்புக்கு அவசியமே இருக்காது. விளைஞ்சு நிக்கிற வைக்கோல் கால்நடைக்கு உணவாயிரும். இப்படித்தான் எங்க விவசாயம் இருந்துச்சு. சித்தஞ்சாமை, பெருஞ்சாமை, வெள்ளஞ்சாமை, கருஞ்சாமைன்னு 25 ரகங்கள் உண்டு. கொஞ்சம் கொஞ்சமா இதெல்லாம் அழியிற நிலமைக்கு வந்திடுச்சு. உரமும் பூச்சி மருந்தும் எங்க மண்ணுக்குள்ள நுழைஞ்சிருச்சு. இப்படியே போனா எங்க மூதாதைங்க கட்டிக் காத்து கொடுத்திருக்கிற பாரம்பரிய விதைகளும், விவசாயமும் அழிஞ்சி போயிடுமே..?

எங்க 12 பேருக்குமே நிலம் இருக்கு. பாரம்பரிய விதைகளை ஒருத்தருக்கு ஒருத்தர் கொடுத்து, ரசாயனம் போடாம பயிர் பண்ணினோம். விதை கேட்டு வர்றவங்களுக்கும் கொடுத்தோம். எங்கள மாதிரி ஆர்வமா விவசாயம் பண்ற மத்த பெண்களையும் உற்சாகப்படுத்தினோம். விவசாய காலேஜ்ல இருந்து எங்க ஊருக்கு வந்த நிர்மலா அம்மா, எங்களப் பத்தி அரசாங்கத்துக்கு எழுதியிருக்காங்க. எங்கள டெல்லிக்கு அழைச்சு பாரம்பரிய விதை பாதுகாப்பு விருதும், பத்து லட்சம் ரூபாயும் கொடுத்தாங்க’’ - வெகு இயல்பாகப் பேசுகிற பத்மாவதிக்கு சாதனையின் உயரம் புரியவில்லை.

‘‘எங்கள் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட உயர்விளைச்சல் ரக சாமை விதையை அறிமுகப்படுத்தவே ஜவ்வாது மலைக்குச் சென்றோம். பல விவசாயிகள் ஆர்வமாக வாங்கிப் பயிரிட்டார்கள். தீபஒளி சுய உதவிக்குழு பெண்கள் உள்பட சிலர் மட்டும் பாரம்பரிய ரகங்களின் மேல் தீவிர ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் விதைகளை நேசித்த விதம், பாதுகாப்பதில் காட்டிய ஆர்வம், மற்றவர்களுக்கு கொடுத்து உத்வேகப்படுத்தியது எல்லாமும் வியப்பாக இருந்தது. அவர்களை உற்சாகப்படுத்தவே மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தோம்’’ என்கிறார் கோவை வேளாண் பல்கலைக்கழக சிறு தானியத்துறை பேராசிரியை நிர்மலா குமாரி.


‘‘இப்போ மலைக்கு கீழே இருந்தெல்லாம் நிறைய பேர் விதை வாங்க வர்றாங்க. பாக்கெட் போட்டு விக்கிறோம். வெறும் சாமையை விக்கிறதை விட, மதிப்புக் கூட்டி வித்தா லாபம் அதிகம் கிடைக்கும். கிடைச்ச பரிசுப் பணத்தை வச்சு கூடுதலா சாமையை கொள்முதல் பண்ணி, அரிசியாக்கி விக்கப்போறோம். அதுக்காக 3 லட்சத்துல ஒரு மெஷின் வாங்கப் போறோம்’’ என்கிறார் தீபஒளி சுய உதவிக் குழுவின் தலைவி வெண்ணிலா.

ஆதிகால விவசாயம் பெண்கள் கையில்தான் இருந்தது. ஆணாதிக்க சமூகம் அதை தனதாக்கிக் கொண்டது. இப்போது மீண்டும் பெண்கள் அதைக் கையில் எடுக்கிறார்கள். எதிர்காலத்தின் மீது நம்பிக்கை துளிர்க்கிறது.
- வெ.நீலகண்டன்
படங்கள்: திவாகர்