கலக்கல் கமல்... கண்ணாமூச்சி ரஜினி..!





இரண்டு சிகரங்கள் சந்தித்துக்கொள்ளும் ஒரு அபூர்வ தருணத்தில் அவர்களுடன் நானும் சங்கமித்து இருக்கும் இந்தப் படம் ‘தசாவதாரம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்தது’’ என்ற இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்...

வெளியுலகத்தில்தான் ரஜினி ரசிகன், கமல் ரசிகன் என்ற பாகுபாடும் இடைவெளியும் இருக்கிறது. ஆனால் நிஜத்தில் ரஜினி, கமல் இருவருக்குமிடையே உள்ள பரிசுத்தமான நட்புறவை நான் நன்கறிவேன். அவர்களிடையே போட்டி, பொறாமையை துளியும் நான் கண்டதில்லை.

‘தசாவதாரம்’ படத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் வேடத்தில் கமல் தோன்றும் ஒரு காட்சிக்காக ஃபிலிம் சிட்டியில் வெள்ளை மாளிகை செட் போட்டு படமாக்கினோம். தோற்றத்தில் மட்டுமின்றி, அசல் புஷ்ஷாக அவ்வளவு அற்புதமாக ஆங்கிலம் பேசி நடித்திருப்பார் கமல்.

அவர் இங்கும் அங்கும் நடந்தபடி பேசும் காட்சியை படமாக்கிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று ரஜினி சார் உள்ளே வர, ‘சார்... நீங்க எப்படி இங்க?’ என்று நான் ஷாக்காகி கேட்டேன். உடனே அவர் வாயை மூடுவது போல் பாவனை செய்து, ‘கமலுக்கு இது தெரிய வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு ஓரமாக நின்று கமல் நடிப்பதை வேடிக்கை பார்த்தார். அந்த ஷாட்டில் பிரமாதமாக கமல் பேசி நடிக்க, காட்சி ஓகே ஆனது. அப்போது நான் கட் சொல்வதற்கு முன்பே ஒரே ஒரு கைதட்டல் மட்டும் சத்தமாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால், ரஜினி சார் இடைவிடாமல் கைதட்டுகிறார். அப்போதுதான் ரஜினி வந்திருக்கும் விஷயம் கமல் சாருக்கே தெரிந்தது.

அவரோடு கைகுலுக்கிய ரஜினி, ‘என்ன மாதிரியான ஆக்டிங் கொடுத்தீங்க... நீங்க பிறவிக் கலைஞன்தான்’ என மனசாரப் பாராட்டினார். ‘ஜார்ஜ் புஷ்ஷோட ரசிகன் நான். அவர் எடுக்கிற போல்டான முடிவு, பேச்சு எல்லாத்தையும் ரசிப்பேன். அவரை அப்படியே கண்முன் கொண்டு வந்துட்டீங்க. சூப்பர்... சூப்பர்...’னு ரஜினி சொன்னதைக் கேட்டு கமல் சாரும் சந்தோஷப்பட்டார்.

கமலை ‘பிறவிக் கலைஞன்’ என்று ரஜினி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ‘அவ்வை சண்முகி’, ‘தசாவதாரம்’ படங்களை இயக்கியபோது உணர்ந்தேன். ‘தசாவதாரம்’ பாட்டி வேடத்திற்காக ஆறரை மணி நேரத்துக்கு மேல் மேக்கப் போட வேண்டியிருக்கும். மேக்கப் சாதனங்களால் உடம்பெல்லாம் அரிக்கும். அந்த சிரமங்களை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் தத்ரூபமாக நடிப்பை வெளிப்படுத்துவார். ரஜினி சார் மாஸ் என்றால் கமல் சார் கிளாஸ். இருவரையும் வைத்து நான் இயக்கிய படங்கள் மாஸ்டர்பீஸ்.’’
- அமலன்