சாயி





யார் அதிர்ஷ்டசாலியோ, யாருடைய பாவங்கள் ஒழிந்தனவோ, அவர்கள் சாயிபாபாவின் வழிபாட்டை எய்துகிறார்கள். தம் முன் பணிந்து சரணாகதி அடைந்த எந்த மனிதரையும் சாயிபாபா ஆசிர்வதிக்கிறார்.
- ஸ்ரீசாயி சத் சரித்திரம்

ஜவ்ஹார் அலி நமாஸ் முடிந்ததும் கண்களைத் திறந்தார். எதிரே பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் உற்சாகமடைந்தார். ‘‘வாருங்கள், என் இனிய நண்பர்களே’’ என்றார் புன்னகையுடன். மக்கள் அருகில் வந்தார்கள்.
‘‘சொல்லுங்கள்... நீங்கள் யார்?’’
‘‘நானா? நான் ஒரு மனிதன்... என்னைப் பார்த்தால் உங்களுக்கு மனிதனாகத் தெரியவில்லையா? ஒட்டகமாகத் தெரிகிறேனா? அல்லது ஆடு போலவா?’’ - ‘ஆடு’ என்று சொன்னபோது அவர் சிரித்துக்கொண்டே தன் தாடியை உருவினார்.
எல்லோரும் சிரித்தார்கள். ‘‘அப்படியெல்லாம் இல்லை... நீங்கள் யார்? உங்கள் பெயர் என்ன?’’
‘‘அச்சா! என் பெயர் ஜவ்ஹார் அலி. அகமத் நகர் என் சொந்த ஊர்...’’
‘‘இங்கு எதற்காக வந்திருக்கிறீர்கள்?’’
‘‘நான் இப்பொழுதுதான் உங்கள் ஊருக்கு வந்து நமாஸ் செய்து முடித்தேன். அதற்குள் ஆயிரத்தெட்டு கேள்விகள்? என்னை இங்கிருந்து விரட்டிவிடுவீர்கள் போலிருக்கிறதே?’’ - சிரித்தவாறே கேட்டார்.
‘‘அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் வந்தததில் ரொம்ப சந்தோஷம். உங்களைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் கேள்வி கேட்டோம்’’ என்றான் பகு என்பவன்.

‘‘உன் பெயர்?’’
‘‘பகு சதாபாள்’’ என்றான் வினயத்துடன்.
‘‘பகு! உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. நீ என்னுடனே இரு. உன்னுடைய பெயரில் இருப்பதுபோல, எப்பொழுதும் பழங்கள் உனக்குக் கிடைக்கும். முன்னே வா. என்னருகில் உட்கார்...’’
கூட்டத்திலிருந்து எழுந்து வந்தான் பகு. அவன் ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போல உணர்ந்தான்.
‘‘நண்பர்களே! இப்பொழுது நீங்கள் கேட்டவற்றுக்கு பதிலளிக்கிறேன். நான் குரானைப் படித்திருக்கிறேன். நிறைய சாஸ்திரங்களைக் கற்றிருக்கிறேன். பல வருடங்கள் தவம் செய்திருக்கிறேன். எனவே, என்னிடம் நிறைய யோக சக்தி இருக்கிறது. நான் கடவுளிடம் பேசும்போது, எனக்குச் சில கட்டளைகளை அவர் இடுவார். அதன்படி நான் இங்கு வந்திருக்கிறேன்!’’
‘‘ஆஹா... எங்களுடைய பாக்கியம் தங்களை தரிசித்தது’’ - மக்கள் சிலிர்த்தார்கள்.
‘‘நான் உங்கள் ஊரில் தங்கி உங்களை நல்ல வழியில் கரையேற்றணும் என்பது கடவுளின் விருப்பம். அவர் வழிகாட்டியதால் இங்கு வந்தேன். இந்த வீரபத்திர கோயில் எனக்குப் பிடித்தது. இந்த வீரபத்திர சாமி, எனக்கு ஒரு கட்டளையிட்டார்... அவர் அருகில் நான் தங்கணும் என்று! எனவே இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தேன்.



நான் தபஸ் செய்யும் மார்க்கம் சிறந்தது. என்னுடைய சர்வதர்மக் கொள்கை உயர்ந்தது. இந்தச் சிறப்புகளினால் ஜாதி, மதம், தர்மம் இவற்றைக் கடந்து வந்திருக்கிறேன். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், சீக்கியம், பார்ஸி இவை எல்லாம் ஒன்றுதான்! எல்லாம் சரி சமமானதுதான். அல்லாவும் வீரபத்திர சாமியும் கட்டளையிட்டதால் நான் இங்கு வந்தேன். நீங்கள் சரி என்றால்தான் நான் தங்குவேன்! இல்லாவிடில், இன்றைய இரவு மட்டும் இருந்துவிட்டு, காலையில் வேறு இடத்திற்குப் போய்விடுகிறேன்...’’
‘‘நாங்கள் உங்களை எங்கும் போகவிட மாட்டோம்!’’
‘‘கடவுளின் ஆக்ஞை அதுவென்றால், உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் இருக்கிறோம்.’’
ஜவ்ஹார் அலிக்கு மக்களின் குரலைக் கேட்டு கண்ணில் நீர் தளும்பியது. ‘‘நீங்கள் எல்லோரும் நல்ல மனிதர்கள். பிரியமானவர்கள். எனக்கு உங்களை ரொம்பப் பிடித்திருக்கிறது. பகவானின் கிருபையால் இங்கு வந்தேன். உங்கள் அன்பைக் கண்டு வியந்தேன். நான் உங்களுக்கு உறுதிமொழி கொடுக்கிறேன், நான் இங்கேயே இருக்கிறேன்’’ என்றார்.

‘‘ஜவ்ஹார் அலி...’’
‘‘வாழ்க...’’
வாழ்த்தொலி கேட்டு அவரின் இதயம், கபட நாடகத்தால் சந்தோஷத்துடன் துடித்தது.
பாபா மசூதியில் திறந்த மனதோடு பேசிக் கொண்டிருந்தார்.
‘‘தாத்யா, ஒரு வருஷத்திற்கு முன் குழந்தை பாக்கியம் தேடி இந்த மசூதிக்கு ஒரு குடும்பம் வந்ததே, நினைவிருக்கா?’’
‘‘ம்... ஞாபகம் இருக்கிறது பாபா. நாநா சாகேப் அவரின் இரண்டு மனைவிகளுடன் வந்திருந்தார். அவர்களைப் பற்றி எதற்காக இப்போது நினைத்துக்கொண்டீர்கள்?’’
‘‘இங்கு தோட்டத்தில் மலர்ந்திருக்கிற பூக்களைப் பார்த்ததும் அவர்களுடைய குழந்தைகளின் ஞாபகம் வந்தது மகல்சாபதி!’’
‘‘அப்படியென்றால்... அவர்களுக்குக் குழந்தை பிறந்ததா?’’
‘‘இங்கு யார் வந்து தங்கள் குறைகளைச் சொல்கிறார்களோ, நிச்சயம் அவை நீங்கும். தாத்யா, பேரக்குழந்தைகளைக் காணும் பாக்கியம் இன்று கிட்டும்!’’
சிறிது நேரத்தில் குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து நாநா சாகேப், பத்மா, சரஸ்வதி இறங்கினார்கள். அவர்கள் கைகளில் அன்று மலர்ந்த தாமரை போல இளம் சிறார்கள். பாபாவிடம் வந்த நாநா, பாபாவின் காலடியில் தலை வைத்து வணங்கினார். பத்மாவும் சரஸ்வதியும் தங்களுடைய குழந்தைகளை அவருடைய பாதங்களில் வைத்தார்கள்.
‘‘அரே... அரே... இவர்களின் இருப்பிடம் காலடி அல்ல. என் இதயம்...’’ என்ற பாபா, குழந்தைகளை தன் மார்போடு அணைத்துக்கொண்டார். ரோஜாவின் நிறத்தில் இளஞ்சிவப்புடன் இருந்த அந்த இரு குழந்தைகளும், உருண்ட கண்களால் சாயிபாபாவைப் பார்த்தன... அழாமல், அசையாமல்!

‘‘பத்மா... இவர்கள் கடவுளின் ராஜ்ஜியத்திலிருந்து வந்திருக்கிறார்கள். எனக்கு ரொம்பப் பிரியமானவர்கள். எப்படி அமைதியாக, கள்ளம் கபடமில்லாமல் இருக்கிறார்கள்! ஜாதி மத பேதம், பொய், பித்தலாட்டம், வஞ்சகம், சூழ்ச்சி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எதுவுமில்லை இவர்கள் உலகில். பெரியவர்களாகிய நாம்தான் கெடுக்கிறோம். முதலில் பெயர் வைக்கிறோம். பெயரிலிருந்து ஜாதி, மதம் தெரியவரும். மாருதி என்றால் இந்து, மகமத் என்றால் முஸ்லிம், மைக்கேல் என்றால் கிறிஸ்தவன். செயின்ட்மேரி என்றால் என்ன, சந்த் மீரா என்றால் என்ன? இதில் என்ன பேதமிருக்கிறது? ஜாதி, மதம், தேசம் இவைதான் நம்மைப் பிரிக்கின்றன. வாழ்க்கை என்பது கடவுள் கொடுத்த வரம். இந்த வரத்தை, சரியான வழியில் கடைபிடித்து, முன்னேறி, வாழ்ந்து பூரணத்துவம் அடைய வேண்டும். இதை மறக்கக்கூடாது.
இந்தப் பச்சிளம் பாலகர்களைப் பார். இவர்கள் மாணவர்கள் அல்ல. ஆசிரியர்கள் அல்ல... இந்துவுமல்ல; முஸ்லிமும் அல்ல. மேலும் தான் ஆண், தான் பெண் என்பது கூட தெரியாது. அவர்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாது. அதை அறியத் தேவையும் இல்லை. இந்த இரண்டு பாலகர்களும் அல்லாவின் ரூபம், சாட்சாத் கடவுளேதான். பத்மா, சரஸ்வதி... குழந்தைகளை வாங்கிக்கொள்ளுங்கள். சிறந்த ஒழுக்கத்தோடு வளர்த்து ஆளாக்குங்கள். நாநா, ஒன்றை நினைவில் கொள். அவர்கள் மீது எந்தவித பேதமும் காட்டாதீர்கள். அவர்கள் ‘மனிதனாக’ வளரட்டும். அவர்களுடைய வாழ்க்கைநெறிப் பயணம், கடவுளை நோக்கியதாக இருக்கட்டும்...’’

வினயத்துடன் கைகூப்பி நாநா சொன்னார், ‘‘பாபா, உங்களுடைய கிருபைதான் இந்தக் குழந்தைகள். நாங்கள் இவர்களுக்கு எந்தவித பேதமும் துவேஷமும் சொல்லிக் கொடுக்க மாட்டோம். காரணம், இவர்களின் கடவுள்தான் சாய்பாபா. இவர்களின் வாழ்க்கைத் தத்துவமே சாயி பக்தியாக இருக்கும்! எப்பொழுதும் சாயியின் நினைவுதான்...’’
பத்மாவும் சரஸ்வதியும் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டனர். பாபா ஆசீர்வதித்து அனுப்பினார்.
பகு சதாபாள் கையில் எதையோ எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினான். எதிரே வந்தவன். ‘‘பகு, எங்கே போகிறாய்?’’ என வினவ, ‘‘ஜவ்ஹார் அலியிடம்’’ என்றான்.
‘‘துணியினால் ஏதோ மறைத்திருக்கிறாயே, சாப்பாடா?’’

‘‘ஆமாம்!’’
‘‘யாருக்கு?’’
‘‘சொல்கிறேன். ஆனால் இதை நீ யாரிடமும் சொல்லமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்துகொடு’’ அவன் அப்படியே செய்தான்.
‘‘இது அசைவ உணவு. நேற்று ஜவ்ஹார் அலி மாமிச உணவு சாப்பிட ஆசையாக இருக்கிறது என்றார். என் வீட்டில் மாமிசம் சமைப்பதில்லை. அதனால் எனக்கு பெரிய தர்மசங்கடமாகிவிட்டது. கடைசியில், எங்கள் தெருக்கோடியிலிருக்கும் ஷிகல்காரிடம் சொன்னேன். அவர் மனைவி சமைத்துக் கொடுத்தாள். அதைத்தான் இப்படி எடுத்துப் போகிறேன். ஆனால் பண்டு, இதை நீ யாரிடமும் சொல்லாதே. சொன்னால், என்னைப் பஞ்சாயத்திற்கு இழுப்பார்கள்.’’
‘‘சொல்லமாட்டேன்... நீ என் நெருங்கிய நண்பனாச்சே...’’

‘‘ஆமாம்...’’
‘‘டேய், வேலையை விட்டு விட்டு பகல் இரவு என்று பார்க்காமல் நாள் முழுக்க அவருக்கு சேவை செய்கிறாயே... அதனால் உனக்குத் திருப்தி கிடைக்கிறதா?’’
‘‘இதோ பார் பண்டு, நானோ படிக்காதவன். வெகுளி. யாரும் என்னை சரியாகப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள். அவருக்கு சேவை செய்வதால் எனக்கு மன திருப்தி உண்டாகிறது. அவர் அருகில் உட்கார்ந்தால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்...’’
‘‘என்னவென்று?’’
‘‘எனக்கு நல்லவற்றை போதித்து வாழ்க்கையில் உயர்வடையச் செய்வதாக சொல்லியிருக்கிறார்!’’
உஷார் பேர்வழியான பண்டு, மனதினுள் சிரித்துக் கொண்டான். ‘‘சரி, ஜாக்கிரதை!’’
‘‘எதற்கு ஜாக்கிரதை? அவருடைய வேலையை நான் ஒருவன்தான் செய்கிறேன். பக்தர்களிடம், ‘அல்லாவை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள், தான தருமங்கள் செய்யுங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள், உண்மையுடன் இருங்கள்’ என்று சொல்கிறார். இதில் எங்கே தவறு இருக்கிறது?’’ என்ற பகு, வேகமாகச் சென்றான்.
வீரபத்திர கோயிலுக்குப் பக்கத்தில் பெரிய ஷாமியானா ஜவ்ஹார் அலிக்காக, ஜனங்களின் உதவியுடன் போட்டிருந்தார்கள். பகு நுழைந்ததைப் பார்த்ததும் ஜவ்ஹார் அலியின் முகம் மலர்ந்தது. ‘‘பகு, என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’’
‘‘புலால் உணவு...’’

‘‘சபாஷ். நீ பெரிய ஆளாகப் போகிறாய். சரி சரி... சாப்பாட்டைக் கொண்டுவா... இருவரும் சாப்பிடலாம்.’’
‘‘நீங்கள் சாப்பிடுங்கள்.... நான் புலால் உண்பதில்லை!’’
‘‘சரி, எனக்கே கொடு!’’
ஒரு தட்டில் பகு பரிமாறினான். செக்கச் சிவந்த நிறத்தில் குழம்பு, சமைத்த இறைச்சி, ஜவாரியில் செய்த ரொட்டிக்குவியல், சாதம், வெங்காயம், எலுமிச்சை துண்டுகள். பார்த்ததுமே ஜவ்ஹார் அலிக்கு நாக்கு ஊறிற்று. ஏதோ மந்திரம் உச்சரித்து, சாப்பிட ஆரம்பித்தார். அருகில் பகு இருப்பதையே மறந்து சுவாரஸ்யமாகச் சாப்பிட்டார். குழம்பின் மேல் நீர்த்த ரசத்தை உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தார். கூர்மையான பற்களால் இறைச்சியைக் கடித்தார். காரக்குழம்பினால் அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. பகு பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘‘வாஹ்... வா! பகு, இன்னிக்கு நீ கொண்டுவந்த சாப்பாடு பிரமாதம். இதை யார் சமைத்தார்களோ, அவர்களுக்கு என் நன்றியைக் கூறு. அவர்களை அல்லா நன்றாக வைப்பார். பகு, உன்னை நிச்சயம் கரை ஏற்றுவேன்! இந்தா, தட்டைப்பிடி... அவர்களிடம் கொடுத்துவிடு!’’
‘‘உங்களுக்கு சாப்பாடு பிடித்திருந்தால், அதுவே எனக்கு சந்தோஷம். நான் கிளம்புகிறேன்.’’
அவன் புறப்பட்டான்.
‘‘எவ்வளவு வெகுளியாக இருக்கிறான்... எவ்வளவு நல்லவன். கடவுள் அவனுக்கு நல்லது செய்யட்டும்’’ - ஜவ்ஹார் அலி சாப்பிட்ட திருப்தியில் ஒரு பெரிய ஏப்பம் விட்டார்.
(தொடரும்...)
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்

நோய் தீர்க்கும் பாபா : தமிழகத்தின் சாயி


கும்பகோணத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் சுவாமிமலை ஸ்டாப் அருகில் பெரிய கோயிலாக கோபுரக் கலசங்களுடன் நிமிர்ந்து நிற்கிறது ஸ்ரீ சீரடி சாயி சமுதாயக் கூடம். திருமணம் மற்றும் வேலை வரம் தந்து, நோய்களைத் தீர்க்கும் இந்த சாயி கோயிலின் நிர்வாகிகளில் ஒருவரான வீராசாமியிடம் பேசினோம்.

‘‘கும்பகோணத்தில் சாதாரணமாக ஒரு ஆப்டிகல் கடை நடத்திக்கொண்டிருந்தவர் டி.எம். புருஷோத்தமன். சாயியின் மகிமை தெரிந்த இவர், பாபாவின் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டார். அக்கம்பக்கத்து மக்கள் அங்கு வணங்க வருவார்கள். அப்படிப்பட்ட சாயி பக்தர்களுக்காக ஒரு டிரஸ்ட் துவங்கிய புருஷோத்தமன், சிறுக சிறுகப் பணம் சேர்த்து 2007ம் ஆண்டு இந்த இடத்தில் ‘ஸ்ரீ சீரடி சாயி துவாரகமாயி தியான மண்டபம்’ கட்டினார். அதன் தொடர்ச்சியாக பக்கத்திலேயே கட்டி முடிக்கப்பட்டு 2010ல் திறக்கப்பட்ட கோயில்தான் இது. புருஷோத்தமன் ஐயாவுக்குப் பிறகு இப்போது 9 டிரஸ்டிகளால் இது நிர்வகிக்கப்படுகிறது’’ என்ற வீராசாமி, இந்தக் கோயிலில் வியாழன் மட்டுமல்லாமல் தினந்தோறும் பிரசாதம் வழங்கப்படுகிறது என்றார்.

தினமும் காலை 6 முதல் மதியம் 12.30 வரையிலும் மதியம் 5 முதல் 9 மணி வரையிலும் இந்தக் கோயில் பக்தர்களுக்காகத் திறந்திருக்கிறது. ஆலயத் தொடர்புக்கு: 99446 64399, 94437 86451.