கடைசி பக்கம் : நிதர்ஸனா





அந்த உயிரியல் பூங்காவுக்கு குழந்தைகள் கூட்டம் அதிகம் வருவதற்குக் காரணம், ஒரு கொரில்லா! கூண்டுக்குள் இருந்தபடி அது நிகழ்த்தும் சேட்டைகளை கூடி நின்று வேடிக்கை பார்ப்பார்கள். திடீரென ஒரு இரவில் அது இறந்துவிட்டது. பூங்கா உரிமையாளருக்கு என்ன செய்வது என புரியவில்லை. ஊருக்கு புதிதாக வந்த சர்க்கஸில் இருந்த கோமாளியை ஊழியர்கள் அழைத்து வந்தார்கள். ஆள் குள்ளமாக, அந்த கொரில்லா உயரத்தில்தான் இருந்தான்.

சர்க்கஸைவிட மூன்று மடங்கு சம்பளம். கொரில்லா போல வேடமிட்டு கூண்டில் இருக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலையே அவன் வேலையில் சேர்ந்து விட்டான். உண்மையில் அந்த கொரில்லாவைவிட தத்ரூபமாக இவன் சாகசங்கள் செய்ய, கூட்டம் நிறைய கூடியது. நினைத்தால் தூங்கலாம்; நினைத்தால் சேட்டை செய்யலாம்; பார்வையாளர்கள் பழங்களும் தின்பண்டங்களும் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்கள். வேலை அவனுக்கு ரொம்ப பிடித்து விட்டது. சர்க்கஸில் கூட கோமாளியை ரசிக்க இவ்வளவு பேர் வந்ததில்லை.

ஆனால் பிரச்னை சிங்கத்தின் வடிவத்தில் வந்தது. பக்கத்து கூண்டில் இருக்கும் சிங்கம் இத்தனை நாள் அமைதியாகத்தான் இருந்தது. சமீபகாலமாக அதன் கோபமும் உறுமலும் அதிகமாக, கூட்டம் மொத்தமும் அங்கே போனது. கொரில்லாவை யாரும் கண்டு கொள்ளவில்லை.

கோமாளி கடுப்பானான். அடிக்கடி சிங்கத்தின் கூண்டின் உயரத்துக்கு ஏறி, அந்தப் பக்கம் எட்டிப் பார்த்து சிங்கத்தை வெறுப்பேற்றுவான். அது ஒரு உறுமலோடு அமைதியாகும். ஒருநாள் இப்படி சிங்கத்தை நக்கல் செய்யும்போது கால் தவறி அந்த கூண்டுக்குள் விழுந்து விட்டான். சிங்கம் வேகமாக நெருங்கி வந்தது. ஒரே அடியில் தன்னை சாகடித்துவிடுமே என்ற பயத்தில் இவன் அலற, ‘‘எதுக்கு இப்போ கத்தறே? அப்புறம் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும்’’ என்று கிசுகிசுப்பாக சொன்னான், சிங்க வேடத்தில் இருந்த ஆள்.
நிழல்களில் நிஜத்தைத் தொலைக்காதீர்கள்!