நிழல்கள் நடந்த பாதைகள்




நமது இளைஞர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?
கடந்த ஜூலை 29ம் தேதி சென்னை ஸ்பென்ஸர் பிளாசா வளாகத்தின் மூன்றாவது மாடியிலிருந்து ஒரு இளைஞர் கீழே குதித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரிடம், ‘‘ஏன் இப்படிச் செய்தாய்’’ என்று காவல்துறையினர் கேட்டபோது, ‘‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’’ என்றாராம்.

வேடிக்கைக்காக யாராவது மூன்றாவது மாடியிலிருந்து குதிப்பார்களா? இந்த நாட்டில் குதிப்பார்கள் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அந்த இளைஞர் மனநிலை பிறழ்ந்தவர் என்று கருதப்படுகிறார். இளைஞர்கள் இதைவிட மோசமாக மனம் பிறழ்ந்து எவ்வளவோ காரியங்களை
செய்துகொண்டிருக்கிறார்கள். அவற்றின் கொடூர விளைவுகள் பற்றி ஒவ்வொரு நாளும் எத்தனையோ விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், படிக்கிறோம்.

ஜூலை 27ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, மோட்டார் பைக்கின் பில்லியனில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த 19 வயது பையன் கரண் பாண்டேயை டெல்லி காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். மனம் கசியச் செய்யும் இந்தக் கொடூரமான கொலையும், அதன் பின்னணியும், நமது இளைஞர்களைப் பற்றியும் நமது சட்ட சமூக அமைப்பைப் பற்றியும் மிகப் பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சம்பவம் நடந்த அன்றிரவு சுமார் 150 இளைஞர்கள் வி.ஐ.பிக்கள் வசிக்கும் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர்களை மடக்குகிற
முயற்சியில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அந்த இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சாலைகளில் வேகமாக பைக்கில் செல்லும் பையன்களைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தும் காவல்துறையின் அணுகுமுறையை எதில் சேர்ப்பது என்று தெரியவில்லை. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியோ, தண்ணீர் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியோ அவர்களை சுலபமாக மடக்க முடியும். ஆனால் ஏதோ பயங்கரவாதிகளிடம் நடந்துகொள்வதைப் போல காவல்துறை நடந்துகொண்டிருக்கிறது. இது கொடூரத்தின் உச்சம். பைக் ரேஸ் அல்லது ஸ்டன்ட் பைக்கர்ஸ் என்பது டெல்லியில் மட்டுமல்ல, நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இருந்து வரும் பிரச்னை. இதில் ஈடுபடுபவர்களை மிரட்டுவதற்காக காவல்துறை அந்தப் பையனை கொலை செய்திருக்கிறது என்று தோன்றுகிறது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. வி.ஐ.பிக்கள் வாழும் சாலையில் அவ்வளவு சுலபமாக அத்துமீறலைச் செய்துவிட்டுத் தப்ப முடியாது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு இதெல்லாம் ஒரு காரணம். சென்னையில் சிறிது காலத்திற்கு முன்பு மரத்தில் காய் பறித்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி சுட்டுக் கொலை செய்யவில்லையா?

காவல்துறையின் இந்த நியாயமற்ற செயலைக் கண்டிக்கும் அதே சமயத்தில், இளைஞர்களின் பைத்தியக்காரத்தனமான சாகச மனப்பான்மையைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. சில மோட்டார் சைக்கிள் நிறுவனங்களே விளம்பரத்திற்காக இளைஞர்களுக்கு பணம் கொடுத்து, அதிவேக பைக்குகளையும் கொடுத்து, அவர்களை சாலைகளில் இதுபோன்ற பந்தயங்களில் ஈடுபடுத்துகின்றன. பொது மக்களுக்கோ அந்த இளைஞர்களுக்கோ இது ஏற்படுத்தும் ஆபத்துகளைப் பற்றி அவை கவலைப்படுவதில்லை. அதிகாலை வேளைகளில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு குழுவாக கடற்கரைச் சாலையில் இளைஞர்கள் கண்மூடித்தனமான வேகத்தோடு செல்வதை பலமுறை கண்டிருக்கிறேன். சாலைகளில் கூட்டாக ரேஸில் ஈடுபடுவது, பைக்கில் எந்தப் பயிற்சியும் இல்லாமல் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஸ்டன்ட் வேலைகளில் ஈடுபடுவது போன்ற காரியங்களைச் செய்கின்றனர். பல மத்தியதர மேல்தட்டு வர்க்க இளைஞர்கள் இந்த வெறிக்கு தொடர்ந்து இரையாகி வருகின்றனர். தனிப்பட்ட முறையில் விலையுயர்ந்த அதிவேக மோட்டார் சைக்கிள்களை வைத்திருப்பது இன்று ஒரு அந்தஸ்தாக மாறிவிட்டது. பெற்றோர்களே பிள்ளைகளுக்கு வாங்கியும் கொடுக்கின்றனர். கிரிக்கெட் வீரர் அசாருதீனின் மகன் சென்ற ஆண்டு இப்படித்தான் ஒரு விபத்தில் இறந்து போனார். நாடு முழுக்க இதுபோல இளைஞர்கள் தினமும் மூளை சிதறி இறக்கிறார்கள். இந்த கண்மூடித்தனமான பைக் சாகசக்காரர்களால் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் உண்டு. சாலைகளில் இவர்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.

இந்த பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களோடு, குற்ற மனப்பான்மை கொண்டவர்களும் சில சமயம் கலந்து விடுகிறார்கள். பெண்களிடம் பாலியல் தொந்தரவுகள் செய்வது, செயின் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். கொல்கத்தாவில் சமீபத்தில் ஒரு பெண், பைக் ரேஸ்காரர்களால் பாலியல்ரீதியாக வன்முறைக்கு ஆளான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி போன்ற நகரங்களில் குற்றவாளிகள் சிலர் பைக் கேங்குகளாக செயல்படுகின்றனர். அவர்கள் கொலைகள், வழிப்பறிகளில் ஈடுபடுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இளைஞர்களின் சாகச மனப்பான்மை என்பது மிகவும் இயல்பான ஒன்று. ஆனால் அதற்கான வாய்ப்பும் பாதுகாப்பான சூழலும் நம் நாட்டில் இருக்கிறதா? பைக் ரேஸை விடுங்கள். அருவிகளிலோ, ஆற்றிலோ, கடலிலோ குளிக்கப்போன இடத்தில் இளைஞர்கள் மூழ்கி இறப்பதாக ஒரு ஆண்டில் எத்தனை செய்திகள் வருகின்றன. முறையான நீச்சல் பயிற்சி இல்லாமல், அல்லது தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதிகளில் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் மரணத்தைத் தேடிப் போகிறவர்கள் ஏராளம். பெண்களை கேலி செய்கிற இளைஞர்களை கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு அதில் காமம் அல்லது குற்றமனப்பான்மையை விட, ஒரு சாகச மனப்பான்மைதான் மேலோங்கி இருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த விளையாட்டு வெகு சீக்கிரத்தில் விபரீதத்தில் கொண்டுபோய் விட்ட சந்தர்ப்பங்கள் ஏராளம்.

மனிதர்களின் உடல்களையும் மனங்களையும் ஒடுக்குகிற சமூகம் நம்முடையது. வீட்டிற்குள்ளோ கல்வி நிலையங்களிலோ பெரும்பாலும் எதற்கும் சுதந்திரம் கிடையாது. இளைஞர்கள் தங்கள் சாகச மனப்பான்மையையும் விளையாட்டுணர்வையும் வெளிப்படுத்துவதற்கு வடிகாலாக இருந்த கிராமிய விளையாட்டுகளும் கிராமிய வாழ்க்கையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துபோய் விட்டன. பெருநகரங்களில் பெரும்பாலான இளைஞர்கள் புறாக்கூடு போன்ற வீடுகளில் வசிக்கிறார்கள். திரையரங்குகளிலும் கடற்கரைகளிலும் மால்களிலும் கூட்டம் கூட்டமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கான பொதுவெளிகள் அருகிப் போனது அவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இந்தச் சூழலில் தங்கள் சாகச மனப்பான்மையை பொறுப்பற்ற அல்லது சமூக விரோத செயல்களின் வழியே வெளிப்படுத்துகிறார்கள்.

ஆண்டுதோறும் பஸ் டே கொண்டாடுவது தொடர்பான பிரச்னைகளைப் பார்க்கிறேன். இளைஞர்களுக்கான கலாசார வெளிகள் இல்லாத ஒரு இடத்தில், இதுபோன்ற அர்த்தமற்ற போலி கொண்டாட்டங்கள் உருவாகின்றன. இன்னொருபுறம் சமூகப் பொறுப்போ, அரசியல் ஈடுபாடோ அற்ற ஒரு இளைய தலைமுறையை நமது கல்வியமைப்பின் மூலமாக உருவாக்கியிருக்கிறோம். இளைஞர்களின் துணிச்சலும் மனக்கிளர்ச்சியும் சாகச ஈடுபாடும் பிறருக்கு எதிரான, அல்லது தன்னைத் தானே அழித்துக்கொள்கிற மனம் பிறழ்ந்த நடவடிக்கைகளாக இந்த இடத்தில்தான் மாறுகிறது.

பொறுப்பற்ற, பிறரைப் பற்றி அக்கறையற்ற இளைஞர்களை எச்சரிப்பதும் தண்டிப்பதும் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் இந்த இளைஞர்களை அவர்களது பைத்தியக்காரத்தனத்திலிருந்து மீட்பதும் ஆகும். எந்த ஒரு இளைஞனும் எந்த ஒரு தருணத்திலும் ஏதேனும் ஒரு அர்த்தமற்ற செயலின் வழியாக அழிவின் பாதைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் திறந்திருக்கின்றன.
பைக்கில் போகும் பையன்களை சுட்டுக் கொல்வதன் மூலம் நமது பொறுப்புகளை நாம் கைகழுவிவிட முடியாது.
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்




மின்தட்டுப்பாடு தமிழகத்தில் தற்பொழுது எப்படி உள்ளது?
- எஸ்.பி.பாபு, முள்ளிக்காடு.
காற்றடிக்கும் காலத்தில் காற்றாடி ஓடும். மழை பெய்யும் காலத்தில் ஏ.சி ஓடும்.
தமிழனின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சாதனம் எது?
- எம்.குணசேகரன், வேலாயுதம்பாளையம்.
அடுத்தவர்களின் அந்தரங்கம்.   
நம்பிக் கெடுவது, நம்பாமல் கெடுவது - இதில் எது மோசம்?
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.
ஏதோ நீங்கள் கெடுவது உங்கள் கையில் இருப்பது போல் அல்லவா பேசுகிறீர்கள்!
‘ஒரு நாளைக்கு 27 ரூபாய் இருந்தால் போதும்’ என்கிற திட்டக் கமிஷனின்
வறுமைக்கோடு அளவுகோல் பற்றி?
- ரேவதிப்ரியன், ஈரோடு.
இவர்களை ஒரு கால எந்திரத்தில் ஏற்றி 50 வருடங்களுக்கு முன்னதாகக் கொண்டு போய் விட்டுவிட்டு, திரும்பிப் பார்க்காமல் வந்துவிட வேண்டும்.
தீவிரவாதத்தின் ஆணிவேர் எது?
- எம்.நாவுக்கரசு, பாம்பன்குளம்.
ஜனநாயக அமைப்பின் தோல்வியும்
இயலாமையும்.

நெஞ்சில் நின்ற வரிகள்


கடந்த காலத்தின் துயர இருட்டுக்கும் நிகழ்காலத்தின் நிச்சயமற்ற வெளிச்சத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஒரு பெண்ணின் இதயத்தை ‘புன்னகை மன்னனி’ல் வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் பெரும் உணர்ச்சிப் பெருக்குடன் வரைந்து செல்கிறது. நடனத்தின் உக்கிரத்தோடு வெளிப்படும் இந்தத் தவிப்பு, ரேவதி நடித்த மிகச் சிறந்த காட்சிகளில் ஒன்று.
‘காலநேரம் சேரவில்லை
காதல் ரேகை கையில் இல்லை’
என்ற வரிகளின் தன்னிரக்கம் நாம் ஒவ்வொருவரும் எப்போதோ சந்தித்து மீண்ட ஒரு இடம்.
‘பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில்
விழுந்து
துடி துடிக்குது மீனு...’
என்று ஒரு கவிஞன் எழுதும்போது எதிர்மறைகளுக்கிடையேயான போராட்டத்தை இதைவிட தீவிரமான படிமங்களால் சொல்ல முடியுமா என்று தோன்றவே செய்கிறது.

எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்


அம்பையின் சிறுகதைகள் தமிழில் பெண்ணிய எழுத்திற்கு மட்டுமல்ல, நவீன எழுத்திற்குமே ஒரு புதிய முகத்தைக் கொடுத்தவை. தமிழ் புனைகதை மொழியின் எல்லைகளை உடைத்தவை. அவரது முகநூல் பதிவிலிருந்து...
தஞ்சாவூர் பி.எம்.சுந்தரத்தின் ‘மரபு தந்த மாணிக்கங்கள்’, தேவதாசி நடனக் கலைஞர்களைப் பற்றியது. 138 தேவதாசிக் கலைஞர்களைப் பற்றிய குறிப்புகள் கொண்ட புத்தகம். புத்தகத்தைப் படிக்கும்போது நான் சந்தித்த பல தேவதாசிக் கலைஞர்கள் நினைவுக்கு வந்தார்கள். தேவதாசி தடை மசோதா கொண்டுவரப்பட்டபோது, ‘பொட்டு கட்டும் வழக்கம் குறிப்பிட்ட பெண்களை ஒரு தொழிலைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது’ என்ற ஒழுக்கம் சார்ந்த கண்ணோட்டம் மேலோங்கி இருந்தது. விருப்பம் இல்லாமலே சில பெண்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்பது உண்மை என்றாலும், தேவதாசி எனும் நபர் ஒரு மதிப்புக்குரிய கலைஞரும் கூட என்ற விஷயம் அதிகம் கவனம் பெறவில்லை.

சமுதாயம் துச்சமாக நோக்கினாலும் அவர்களுக்கென்று சில வழிமுறைகளை வைத்துக்கொண்டவர்கள். தேவதாசித் தடைச் சட்டம் அவர்கள் கலையை, முக்கியமாக நடனக் கலையை வெளிப்படுத்தும் சமுதாய அரங்காக இருந்த கோயிலை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டதும் அல்லாமல், அக் கலையை அரங்கேற்ற மாற்று இடம் ஒன்றை ஏற்படுத்தாமல் விட்டது. கலையே ஒழுக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக நோக்கப்பட்டதால் பல தேவதாசிக் கலைஞர்கள் தங்கள் கலை வெளிப்பாட்டை முடக்கிக்கொண்டும் முறித்துக்கொண்டும் வாழ்ந்தனர்.

தேவதாசிக் கலைஞர்களிடம் இருந்த பல நுண்ணுணர்வு சார்ந்த விஷயங்கள் மொண்ணையாக்கப்பட்டு ‘பிராமண’மயமாக்கப்பட்டன. கலை என்ற மகத்தான ஒன்றையும் இணைத்துப் பார்த்திருந்தால், தேவதாசிகளின் சமுதாய அரங்கு பறிக்கப்படாமல் இருந்திருக்கும். அல்லது அவர்களுக்கான மாற்று அரங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருக்கும். அந்த அரிய கலைஞர்களுக்குரிய மரியாதை கிட்டியிருக்கும். அவர்கள் கலையும் நசுக்கப்படாமல் இருந்திருக்கும்.