டாஸ்மாக் டவுன் டவுன்!




‘‘தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என்றாகிவிட்டதால், தடுக்காமலே விழுந்து கொண்டிருக்கிறார்கள் பல தமிழர்கள். ‘கடந்த சில ஆண்டுகளில் 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் 20 சதவீதத்தினர் மது அருந்துகின்றனர்’ என அதிர்ச்சித் தகவல் அளிக்கின்றன ஆய்வுகள். இன்றைய வருமானத்துக்காக எதிர்கால இந்தியாவை நாம் மலடாக்கிக் கொண்டிருக்கிறோம். இதைத் தடுப்பது நம் கடமை இல்லையா?’’ - கொஞ்சமும் தளர்வின்றிப் பேசுகிறார் மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி.

டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி ஜூலை 29ம் தேதி மதுரையில் உண்ணாவிரதத்தைத் துவக்கியுள்ள நந்தினிக்கு மாணவர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆதரவு வலுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை 31ம் தேதி நள்ளிரவு நந்தினியை போலீசார் கைது செய்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அதற்கு முன்பாக, அன்று மாலை நந்தினி நம்மிடம் பேசினார்...

‘‘எனக்கு சொந்த ஊர் டி.கல்லுப்பட்டி பக்கத்துல கொல்ல வீரன்பட்டி. எங்க அப்பா, விவசாயத்துறையில் இளநிலை எஞ்சினியரா இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். மதுரை சட்டக்கல்லூரியில இப்ப 4ம் ஆண்டு படிக்கிறேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு குடி, குடிப்பழக்கம்னா பிடிக்காது. குடியால தெருவுக்கு வந்த எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து வளர்ந்திருக்கேன். என்னோட தோழிகளே பல பேர், அவங்க அப்பாவோட குடிப்பழக்கத்தால பாதிக்கப்பட்டிருக்காங்க.

அந்தக் காலத்துல சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவங்கள்ல கூட நிறைய பேர் வழக்கறிஞர்களா இருந்திருக்காங்க. அப்படி நானும் சமூகத்துக்காக ஏதாவது பண்ணணும்னு நினைச்சதாலதான் சட்டம் படிக்கவே முடிவு பண்ணினேன். காலேஜ் முதல் வருஷத்திலேயே நானும், என் ஃப்ரெண்ட் தங்க மாரீஸ்வரியும் சேர்ந்து, நிறைய இடங்களில் மது பாதிப்பு பத்தி ஆய்வு செஞ்சு கையெழுத்து இயக்கம் நடத்தினோம். மது அருந்துவது சட்டப்படியும் தவறு. அதனால சமுதாயத்தை சீர்குலைக்கும் மதுவை ஒழிக்க முயற்சி எடுக்கணும்னு சட்டக்கல்லூரி மாணவர்கள் 222 பேர் சேர்ந்து முடிவெடுத்தோம். மார்ச் 1ல் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முதல்வர், அமைச்சர்கள் உட்பட 145 பேருக்கு மனு அனுப்பினேன். முதல்வர் அலுவலகத்திலிருந்து, ‘இது அரசின் கொள்கை முடிவு. டாஸ்மாக்கை ஒழிக்க இயலாது’ன்னு ஏப் 18ம் தேதி பதில் வந்தது. சட்டத்துக்கு விரோதமான செயல் எப்படி கொள்கை முடிவா இருக்க முடியும்?

இப்ப, ‘மது இல்லா தமிழகம் காண விரும்பும் சட்ட மாணவர்கள்’னு ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கோம். மாணவர்கள் ஒன்றிணைஞ்சா எதையும் சாதிக்க முடியும்ங்கற அசைக்க முடியாத நம்பிக்கையோட, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் அனுப்பிட்டு, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கி யிருக்கேன். அங்கங்க மாணவர்கள் முற்றுகைப் போராட்டம், மறியல்னு பல விதங்கள்ல இதுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. திருநங்கைகள், வழக்கறிஞர்கள்னு எல்லா தரப்பினரோட சப்போர்ட்டும் இருக்கு. நிச்சயம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மதுக்கடைகளை அகற்ற முடியும்’’ என்கிற நந்தினியிடம் நம்பிக்கை மின்னுகிறது.

‘‘பெண்ணாச்சே... இதெல்லாம் எதுக்கும்மா?’’ என்கிற சராசரி அப்பாவல்ல நந்தினியின் தந்தை ஆனந்தன். மகளுக்கு பக்கபலமாக அருகிலேயே நிற்கிறார். ‘‘சமுதாயப் பிரச்னைகளை சிறு வயதிலிருந்தே என்ரெண்டு பெண்க ளுக்கும் சொல்லி வளர்த் திருக்கிறேன். அந்த விதைதான் இப்போ மரமாக வளர்ந்து பயன் தருது. எனது மகளை நினைச்சு பெருமைப்படுறேன். நந்தினி நல்லா படிக்கிற பொண்ணு. டென்த்ல 478 மார்க்கும் பிளஸ் 2ல 1141 மார்க்கும் வாங்கினா. மெடிக்கல், எஞ்சினியரிங்னு எதுவும் டிரை பண்ணாம சட்டம் படிக்க விரும்பி சேர்ந்திருக்கா. இந்தப் போராட்டத்தால அவளோட எதிர்காலம் நல்லா இருக்கும். நந்தினியை முன்னுதாரணமா நினைச்சு இன்னும் நிறைய இளைஞர்கள் சமூக மாற்றம் ஏற்படுத்த முன்வருவாங்க’’ என்கிறார் அவர் பெருமிதத்துடன்.
நம்பிக்கை ஜெயிக்கட்டும்!
- ஆர்.ஜெயலெட்சுமி
படங்கள்: பாலமுத்துகிருஷ்ணன்