உலகத்துக்கே பூ விற்கும் நம்பிக்கை தமிழர்!




‘‘வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு செயலுக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு காரணம் இருக்கு. எந்தச் செயலும் நாம விரும்பி நடக்கிறதில்லை. 10வது படிச்சப்போ, கிளாஸ் ரூம்ல ஒரு டெஸ்க் உடைஞ்சு போச்சு. அதை நான்தான் உடைச்சேன்னு நினைச்சு ஹெச்.எம் என்னை அடிக்க வந்தார். கையத் தூக்கித் தடுத்தேன். அவருக்கு கோபம் வந்திடுச்சு. உடனே என்னை பள்ளிக்கூடத்தை விட்டு அனுப்பிட்டார். அந்த சம்பவம் நடக்காம இருந்திருந்தா, நான் என்னவாகியிருப்பேன்..? எனக்குத் தெரியலே. ஏன்னா எந்தச் செயலுக்கும் நாம காரணமில்லையே!’’

- புன்னகை மாறாத தன்னடக்கத்துடன் வாழ்க்கையின் உள்ளடக்கத்தைக் கடந்து செல்கிறார் முகமது எஹியா. திருவையாற்றை அடுத்துள்ள நடுக்கடை கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயப் பின்னணி கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த எஹியா, இன்று உலகின் முன்னணி மலர் வணிகர். உலகெங்கும் 1200 ஏக்கரில் மலர் சாகுபடி செய்யும் எஹியா, 14 நாடுகளில் நம்பர்1 ஏற்றுமதியாளர். இவரிடம் 4500 ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். விரக்தியின் விளிம்பில் இருக்கிற விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், இப்போது தமிழகத்தில் கால் பதித்திருக்கிறது எஹியாவின் நிறுவனம்.

‘‘கடல் மாதிரி பரந்து விரிஞ்சு பாயுற காவிரிக்கரையில இருக்கு எங்க ஊர். உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் மாசத்துக்கு ரெண்டு நாள் இந்த மண்ணுல கால் வச்சு, ஈரக்காத்தை சுவாசிச்சாதான் வாழ்ந்தது மாதிரி இருக்கும். விவசாயத்தைத் தவிர வேறெந்த தொழில் வாய்ப்பும் இல்லாத ஊர். அப்பா மலேசியாவுக்கு பிழைக்கப் போனவர், சம்பாதிச்ச காசை வச்சு ஒரு கடை ஆரம்பிச்சார். பஷீர் அகமது, சாதிக்பாட்ஷான்னு எனக்கு ரெண்டு சகோதரர்கள். ரெண்டு பேருமே வெளிநாட்டுல இருந்தாங்க. என்னை மட்டுமாவது படிக்க வச்சுப் பாக்க ஆசைப்பட்டார் அப்பா. ஆனா, பத்தாம் வகுப்போட படிப்பு முடிவுக்கு வந்திருச்சு.

‘ஊருல சும்மா சுத்தாம மலேசியாவுக்கு வா’ன்னு அப்பா கூப்பிட்டார். கிளம்பிட்டேன். மூணு மாசம் அப்பாவுக்கு உதவியா கடையில இருந்தேன். ஒரு 8க்கு 10 கட்டிடத்துக்குள்ள அடைஞ்சு கிடக்க மனசு தயாரா இல்லை. சுயமா ஏதாவது பண்ணணும்ங்கிற உந்துதல். துபாய்ல இருந்த பஷீர் அண்ணன்கிட்ட சொன்னேன். ‘வா பாத்துக்கலாம்’னார். அங்கே ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல ஆபீஸ் பாயா சேத்துவிட்டார். பஷீர் அண்ணன் ஒரு பூக்கடையில வேலை செஞ்சார். மலேசியாவில இருந்து இறக்குமதி செஞ்சு துபாய் முழுவதும் சப்ளை செய்வாங்க. விடுமுறை நாட்கள்ல நானும் அந்தக் கடைக்குப் போறதுண்டு. 



சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு பழக்கம்... சாதாரணமா எதிலயுமே திருப்தி அடையமாட்டேன். அடுத்து... அடுத்து...ன்னு மனசு கிடந்து துடிக்கும். நாலுபேருக்கு சேவகம் பண்ற ஒரு வேலையை எவ்வளவு காலத்துக்கு பண்றது? ‘நமக்கு சுயமே இல்லையா’ங்கிற கேள்வி என்னை குடைஞ்சுச்சு. அண்ணன்கிட்ட போய் நின்னேன். ரெண்டு பேர்கிட்டயுமே கொஞ்சம் பணம் இருந்துச்சு. தம்பியும் ஒருங்கிணைஞ்சான். தனியா ஒரு பூக்கடை ஆரம்பிச்சோம்.

பூத்தொழிலைப் பத்தி பலபேருக்கு தெரியாது. பூக்களை விரும்பாத மனிதர்களே இல்லை. எல்லா நாட்டுக்கும் தேவையிருக்கு. உலகத்தில நடக்கிற மிகப்பெரிய வர்த்தகங்கள்ல பூ வர்த்தகமும் ஒண்ணு. மாதம் 1000 கோடி ரூபாய்க்கு மேல பரிவர்த்தனை நடக்குது. கென்யா, மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் இதுல முன்னணியில இருக்கு. ஆனா மிகப்பெரிய விவசாய நாடான இந்தியாவோட பங்களிப்பு வெறும் 1 சதவீதம். இதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு.

 மலேசியா, கென்யா, ஹாலந்து நாடுகள்ல இருந்து பூக்களை இறக்குமதி செஞ்சு, துபாய் முழுவதும் சிறு கடைகளுக்கு சப்ளை பண்ணினோம். ஆனா அவ்வளவு சாதாரணமா வெற்றி கிடைக்கலே. பூ வர்த்தகத்துல சிந்திக்காரங்களோட ஆதிக்கம் அதிகம். அவங்களைக் கடந்து ஜெயிக்கிறது சாதாரணமில்லை. அவங்களோட போட்டி போடுற அளவுக்கு எங்ககிட்ட முதலீடு இல்லை. ஆனா உண்மையும், உழைப்பும் இருந்துச்சு. நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டோம். திடீர்னு ஈராக் போர் வந்துச்சு. ரெண்டு மாதங்கள் விமானப் போக்குவரத்தே இல்லை. பூக்கள் வராததால பல வாடிக்கையாளர்கள் கடையை காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. வரவேண்டிய பெருந்தொகை முடங்கிப்போச்சு. பெரிய அடி. ஆனா நஷ்டத்தை ஏத்துக்கிட்டு, கடன் வாங்கி, எங்களுக்கு பூ அனுப்பின எல்லாருக்கும் பட்டுவாடா செஞ்சோம். அது எங்க மேல பெரிய மரியாதையை உருவாக்குச்சு.



எல்லார்கிட்டயும் உண்மையா இருந்ததால, கடன்ல இருந்து மீண்டோம். வாடிக்கையாளர்கள் அதிகமானாங்க. அடுத்தகட்டமா, மத்தவங்ககிட்ட இருந்து வாங்கி விக்கிறதை குறைச்சு நாங்களே பூ விவசாயம் பண்ண முடிவெடுத்தோம். கென்யாவை ‘ரோஜாக்களின் ராஜா’ன்னு சொல்வாங்க. அதிக மலர் விவசாயம் நடக்கிற நாடு. அற்புதமான சீதோஷ்ணம். வேலையாள் தட்டுப்பாடு இல்லை. நியாயமான கூலி; தண்ணீர் பிரச்னை இல்லை. அங்கே 800 ஏக்கர் நிலம் வாங்குனோம். ரோஸ், ஆர்கிட், கார்னேஷன், கிரிசந்தம் பூக்கள் பயிரிட்டோம். கென்யாவிலேயே ஒரு அலுவலகம் தொடங்கி, நேரடியா அங்கிருந்து ஏற்றுமதி பண்ண ஆரம்பிச்சோம். அப்படியே படிப்படியா தொழிலை விரிவுபடுத்தினோம். காய்கறி, பழங்கள் பயிரிட்டு அதையும் ஏற்றுமதி செய்ய ஆரம்பிச்சோம். இப்போ நிறைய திறமைசாலிகள் எங்ககிட்ட இருக்காங்க. உலகத்தில நம்பர் 1 இடம்தான் எங்க இலக்கு. அதுக்கு முன்னாடி இன்னொரு கடமையும் இருக்கு. கென்யாவில சாத்தியமானதை இந்தியாவில சாத்தியமாக்கணும்...’’

புன்னகை மாறாத முகம் எஹியாவை மனசுக்கு நெருக்கமாக்குகிறது. ‘‘இந்தியாவில விவசாயம் சிக்கலான நிலையில இருக்கு. இதற்கு முக்கியக் காரணம் 100 நாள் வேலைத்திட்டம். இந்திய ரூபாயோட மதிப்பு குறைஞ்சதுக்கும் அதுக்கும் தொடர்பிருக்கு. உற்பத்திக் குறைவால ஏற்றுமதி குறைஞ்சு, இறக்குமதி அதிகமாயிடுச்சு. இதேநிலை தொடர்ந்தா டாலரோட மதிப்பு 100 ரூபாய்க்கு உயர வாய்ப்பிருக்கு. 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில எந்த வேலையும் ஆக்கபூர்வமா நடக்கலே. சீனாவிலயும் இதுபோல திட்டம் இருக்கு. ஆனா அவங்களை விவசாயத்துக்கு பயன்படுத்துது அரசு. இங்கே அந்தத் திட்டம் விவசாயத்தை அழிக்குது. இளைஞர்களுக்கு விவசாயம் மேல நம்பிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது. அது நாட்டுக்கு நல்லதில்லை.

உண்மையில விவசாயத்தைப் போல லாபம் தரக்கூடிய தொழில் எதுவுமில்லை. இதை அனுபவபூர்வமா சொல்றேன். இங்கே நிறைய நம்பிக்கை ஊட்ட வேண்டியிருக்கு. பிரச்னைகள் இல்லாத தொழிலே இல்லை. ‘தண்ணி இல்லை, விலை இல்லை’ன்னு காரணங்களை அடுக்கலாம். ஆனா எல்லாத்துக்கும் தீர்வு இருக்கு. பாலைவனமா கிடந்த நிலத்தையே சோலைவனமாக்கியிருக்கு இஸ்ரேல். நம்ம மண் இன்னும் தன்மை இழக்கலே. மக்களோட மனோபாவம் மாறினா போதும். இயற்கையை சிதைக்காத நவீன தொழில்நுட்பங்களைக் கத்துக்கணும். மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய முன்வரணும். தஞ்சாவூரைச் சுத்தி 150 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கேன். முன்மாதிரி பண்ணை அமைச்சு கேரட், தக்காளி, இஞ்சி, பூண்டு பயிர் பண்ணி ஏற்றுமதி செய்யப்போறேன். தாய்லாந்தில இருந்து மாசம் 30 லட்சம் ஆர்கிட் பூக்களை இந்தியா இறக்குமதி செய்யிது. அதை ஏன் இங்கே உற்பத்தி செய்யக்கூடாது? அதுக்காகவே காரைக்கால்ல 100 ஏக்கர் வாங்கியிருக்கேன். கொடைக்கானல்ல 60 ஏக்கர்ல ரோஸ், கார்னேஷன் பூக்கள் பயிரிடப் போறேன். விவசாயத்தை லாபகரமா செய்ய முடியும்னு வெறும் வார்த்தையா இல்லாம செயலா காட்டப்போறேன். படித்த இளைஞர்கள் ஈடுபாட்டோட விவசாயம் செய்ய வரணும். ஆர்வமா வர்றவங்களுக்கு தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும், ஏற்றுமதி பத்தி சொல்லித் தரவும் தயாரா இருக்கேன். தமிழ்நாட்டுல ஒரு விவசாயக் கல்லூரி தொடங்கவும் திட்டம் வச்சிருக்கேன்’’ என்கிறார் எஹியா.

எஹியாவின் மனைவி மெஹ்ராஜ் பேகம். சமீரும், சமீராவும் இரட்டைக் குழந்தைகள். 10ம் வகுப்பு படிக்கிறார்கள். தான் படித்த திருவையாறு சீனிவாசராவ் உயர்நிலைப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தந்திருக்கிறார் எஹியா. அக்கட்டிடத்துக்கு அவரின் தந்தை பெயரை வைக்க எல்லோரும் வலியுறுத்தினார்கள். ஆனால், தனது தலைமைஆசிரியர் டி.என்.பட்டா பிஷேகத்தின் பெயரையே வைத் திருக்கிறார்.

‘‘அந்த வயதில் எது சரி, எது தவறுன்னு தெரியலை. நான் அப்படிச் செய்திருக்கக்கூடாது. ஒருநாள் அவரைப் பார்த்து மன்னிப்பு கேட்டேன். அவர் கட்டி அணைச்சுக்கிட்டார். நம்ம வாழ்க்கையில நடக்கிற ஒவ்வொரு செயலுக்குப் பின்னாடியும் ஏதோ ஒரு காரணம் இருக்கு.. எந்த செயலும் நாம விரும்பி நடக்கிறதில்லை...’’
சிரிக்கிறார் எஹியா. நமக்கு சிறகு முளைக்கிறது.
எஹியாவைத் தொடர்பு கொள்ள: ehiya@blacktulipflowers.ae
  - வெ.நீலகண்டன்
படம்: புதூர் சரவணன்