மலையே சிலையாகும் அதிசயம்! தடைகளைத் தாண்டி தயாராகுது 95 அடி உயர பெருமாள் சிலை!கல்லிலே கலைவண்ணம் காண்பதில் தமிழருக்கு தனித்தன்மை உண்டு. வானுயர்ந்து நிற்கும் கோயில் கோபுரங்கள், அவற்றில் நிறைந்துள்ள சிற்பங்கள், மாமல்லபுரம் கற்காவியங்கள் தொடங்கி, குமரியில் விண்நோக்கி நின்று நம் விழிகளை விரிய வைக்கும் அய்யன் திருவள்ளுவர் சிலை வரை அதற்கு எத்தனை சாட்சிகள்!இப்போது சிற்பக்கலை நுட்பத்தின் வலிமையை மீண்டும் உலகுக்கு உணர்த்தும் வாய்ப்பாக உருவாகி வருகிறது 95 அடி உயர ஸ்ரீநிவாசப் பெருமாள் சிலை.

கல்லை எடுத்துவந்து சிலை வடிப்பது வழக்கம். மலையில் இருந்தே சிலை வடிக்கும் அதிசயம் இங்கு நிகழ்ந்து வருகிறது. மலையே மகேசனாக வணங்கப்படும், கிரிவல புகழ் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் இந்த மாபெரும் சாதனைச் சிலை உருவாகி வருகிறது.

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ளது காங்கேயனூர். செய்யாற்றின் செழிப்பில் நிறைந்துள்ள வயல்களும் மலைகளும் சூழ எழிலோடு நம்மை வரவேற்கிறது இந்த கிராமம். தொடர்ச்சியாக அமைந்துள்ள மலைகளில் ‘கோபுர மலை’ எனப்படும் அரிய வகை மலையில்தான் 1998ல் இச்சிற்ப சாதனை முயற்சி தொடங்கியது.

காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், 95 அடி உயர சிவன் (சந்திரசேகரர்) சிலையை ஒரே கல்லில் உருவாக்கி, சென்னை  மகாபலிபுரம் சாலையில், முட்டுக்காட்டில் நிறுவ முயற்சி மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட மலைகளை ஆய்வு செய்ததில், இறுதியாகத் தேர்வானது இந்த காங்கேயனூர் கோபுர மலை. மலையில் இருந்து சிவன் சிலையை வடித்தெடுக்கும் பணிக்காக 22,550 கன அடி பருமன் மலைப்பகுதிக்கு குத்தகை உரிமம் அளித்தது தமிழக அரசு.

சிற்ப கலாமணி முத்தையா ஸ்தபதியின் உளியால் விறுவிறுவென உருவானது சிவன் சிலை. அடிப்படைப் பணிகள் தொடங்கிய சில மாதங்களில் திடீர் மாற்றம். சிவன் சிலையை பெருமாள் சிலையாக்க வேண்டும் என சங்கர மடம் முடிவெடுத்தது. அதைத் தொடர்ந்து, ஒரே கல்லில் 95 அடி உயரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் சிலை உருவானது. பீடத்துடன் சேர்த்து சிலையின் மொத்த உயரம் 120 அடி என நிர்மாணிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்தன.

பணிகள் 70 சதவிகிதம் நிறைவடைந்த நிலையில் மீண்டும் ஒரு தடை. ‘சுமார் ஆயிரம் டன் எடை கொண்ட பெருமாள் சிலையை, காங்கேயனூரில் இருந்து முட்டுக்காடு வரை கொண்டு செல்வதற்கு, வழியில் இருக்கும் சாலைகள், பாலங்கள் தாங்காது. எனவே, சிலையை சாலைவழி கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது’ என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்தது. இந்தத் தடைகளைத் தாண்டி அனுமதி பெற பகீரத முயற்சியில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சங்கர மடத்தில் ஏற்பட்ட சர்ச்சையால், பெருமாள் சிலை வடிக்கும் பணி முடங்கியது.

முழுமையாக நிறைவு பெறாமல் பெருமாள் சிலை நீண்டகாலமாக இருப்பது நல்லதல்ல என காங்கேயனூர் கிராமத்தினர் முடிவு செய்தனர். பணியை முழுமையாக்கி, காங்கேயனூர் கிராமத்திலேயே சிலையை நிறுவி வழிபாட்டுக்கு வழி செய்ய வேண்டும் என திருப்பதி தேவஸ்தானத்திடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனடி பலன் கிடைத்திருக்கிறது.தேவஸ்தான இணை செயல் அலுவலர் என்.யுவராஜ் தலைமையிலான குழுவினர் வந்து, 95 அடி உயர பெருமாள் சிலையை பார்த்து வியந்தனர். சிலை முழுமை பெற்றால், ஒரே கல்லில் உருவான மிக உயரமான பெருமாள் சிலை என்ற பெருமையை அடையும். சிலையை காங்கேயனூரிலேயே நிறுவுவதற்கான உதவிகளைச் செய்வதாக உறுதி அளித்துள்ளனர். மலையில் இருந்து முழுச்சிலையாக பெருமாள் எழுந்து நின்று காட்சிதரும் நாளை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர் நம்பிக்கையுடன்.

‘‘10 ஆண்டுகளுக்கும் மேலாக பெருமாள் சிலை முழுமை பெறாமல், மலையிலேயே இருப்பது எங்களுக்குக் கவலையை ஏற்படுத்தியது. திருப்பதி தேவஸ்தானத்திடம் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. அண்ணாமலையார் கோயில், படவேடு ரேணுகாம்பாள் கோயில், சித்தர்கள் வாழ்ந்த பருவதமலை கோயில் அமைந்துள்ள திருவண்ணாமலையில், 95 அடி உயர பெருமாள் சிலையும் அமைவதால் மாவட்டத்துக்கே பெருமை கிடைப்பதோடு சுற்றுலாவும் வளரும்’’ என்கிறார் காங்கேயனூர் கிராமத்தைச் சேர்ந்த கே.வி.ராஜ்குமார்.
 கி.வினோத்குமார்