ஆரம்பம் அஜித்...ஒன் மேன் ஆர்மி!





‘‘‘ஆரம்பம்’ அருமையா வந்திருக்கு. நிஜமாவே மனசுக்கு அவ்வளவு சந்தோஷம். அஜித்தோட ஐந்து வருஷம் கழிச்சு சேர்ந்தது அற்புதம்னா, ‘ஆரம்பம்’ இனிதாக முடிந்திருப்பது இன்னும் பெருமிதம்.’’  

சோபாவில் ரிலாக்ஸாக சாய்ந்துகொள்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.



‘‘இப்போ இங்கே அஜித்தான் ஹாட்! அதில் ஒண்ணும் சந்தேகம் கிடையாது. அதற்கு முன்னாடி சில விஷயங்கள் இருக்கிறது. ஏ.எம்.ரத்னத்திற்காக ‘ஆரம்பம்’ பண்றோம். இத்தனை வருஷம் கழிச்சு அஜித்தோடு சேர்கிறோம். இந்த இரண்டுமே பரபரப்பு... படபடப்பு. அதையெல்லாம் அஜித் ஆரம்பத்திலேயே உடைச்சார்.

‘எனக்காக வலுக்கட்டாயமா ஸ்கிரிப்ட்ல பலம் சேர்க்காதீங்க. அந்த மாதிரி மைண்ட்செட்டை ஏத்திக்க வேண்டாம்’னு முதலிலேயே விடுதலை கொடுத்திட்டார். இந்தத் தடவை கேங்ஸ்டர் மூவி வேண்டாம்னு நினைச்சிட்டேன். நாம் தயாரிக்கிற ஸ்கிரிப்ட் அவருக்கு நியாயம் செய்யணும்னு தீர்மானிச்சேன்.



படு ஸ்பீடாக, ஸ்டைலாக, அமர்க்களமா இருக்கணும்னு எதையும் மனசில் வச்சுக்கலை. கதையைப் பற்றித்தான் அக்கறை யிருந்தது. கதையை செறிவுபடுத்திக்கிட்டே

இருந்ததால் இன்னொரு ஹீரோவும் தேவைப்பட்டார். அஜித் சார்கிட்டே தயக்கமே இல்லை. ‘நல்லா சேர்த்துக்கங்க, அது யார்’னு கேட்டார். ஆர்யான்னு சொன்னதும், ‘ரொம்ப நல்லாயிருக்கு’ன்னு சொல்லிட்டார். அப்புறம் கிஷோர், அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ரேக்கர், சுமன் ரங்கநாத், அக்ஷரா கௌடா, ராணான்னு நடிகர்கள் லிஸ்ட் பெரிசாகிட்டே போயிடுச்சி. எல்லாத்துக்கும் அஜித்கிட்ட புன்சிரிப்பு.



அவருடைய அசராத நம்பிக்கையை நான் சாதாரணமா நினைக்கலை. தமிழில் அரிய விஷயம் இது!’’

‘‘படம் எப்படியிருக்கும்னு எதிர்பார்ப்பு கிளம்பிக்கிட்டே இருக்கு...’’

‘‘ ‘ஆரம்பம்’ அஜித், நியாயத்திற்காக போராடுகிற மனுஷன். இது தனிப்பட்ட மனிதனின் போர். சமூகத்திற்கு நெருங்கிய தொடர்போட இருக்க நினைக்கிற மனுஷன். எல்லாரும் ‘இத்தனை பேருக்கு கதை

இருக்கா’ன்னு கேட்டாங்க. எல்லோருக்கும் ஆரம்பமும், முடிவும் இருக்கு. இவ்ளோ அழகான அஜித், இவ்ளோ கோபமான அஜித், இவ்ளோ வேகமான அஜித், இவ்ளோ ரொமான்டிக்கான அஜித்தை நீங்க

இதுக்கு முன்னே பார்த்திருக்க முடியாது. ஓப்பனிங் அள்ளுறதிலும் சரி, தமிழ் மக்களின் மனசை அள்ளுறதிலும் சரி... அஜித்துக்கு இந்தப் படம் நிச்சயம் பென்ச்மார்க்.

அஜித் அருமையா ஒரு நட்புணர்வை ஏற்படுத்தித் தந்தார். எல்லோருக்கும் இறுக்கம் விட்டுப் போச்சு. எல்லோருக்குள்ளேயும் வெளியே தெரியாத ஒரு போட்டி இருக்கணும்னு நினைச்சோம். இந்த

ஷாட்டில் ஹீரோ ஜெயிச்சாரா, ஒளிப்பதிவாளர் பிரமாதப்படுத்தினாரா, டைரக்டர் ஐடியா நல்லா வொர்க் அவுட் ஆச்சா, அதை எடிட்டர் எப்படி வகைப்படுத்தினார்னு விவாதம் பண்ணினோம். அப்படி யோசிச்சி

யோசிச்சி, அடுத்த லெவலுக்குப் போனோம். எங்களோட டிஸிப்ளின், ஈடுபாடு, கடின உழைப்பு எல்லாம் படம் ரிலீஸானதும் புரியும். ‘ஆரம்பம்’ ரொம்பவும் ஆக்ஷன் படம்தான். ஆனால், உங்களுக்கு என்ன

வேணும்னாலும் ‘ஆரம்பத்தில்’ கிடைக்கும். அதுதான் விசேஷம்!’’

‘‘எப்படி ஆர்யா சரின்னு சொன்னார்?’’

‘‘ஆர்யா என் நண்பன். ‘என்னடா சொல்றே மச்சான், அஜித்கூட கசக்குமா, அவர்கூட பழகுறதே பெருமைடா. உன்னை நம்பாமல் யாரை நம்பப் போறேன்’னு மூச்சுவிடாம சொல்லிட்டு, ‘டேட்ஸ் சொல்லு...

போதும்’னுட்டான். ஒண்ணு தெரியுமா? முதல் காப்பி பார்த்துட்டு அஜித் வெளியே வந்து ‘ஆர்யா பிரமாதப்படுத்தியிருக்கார். அவுட்ஸ்டாண்டிங் பர்ஃபாமன்ஸ்’ன்னு சொன்னார். அதுதான் அஜித்தோட மனசு.

படத்தில் ஒருவரின் இழப்பின்போது அஜித் அழுவார் பாருங்க... அது மாதிரி ஒரு அழுகையை நீங்க பார்த்திருக்க முடியாது. கதையை உள்வாங்கினா மட்டுமே இது சாத்தியம். செட்டில் அஜித்தும்,

ஆர்யாவும் சேர்ந்திட்டால் அங்கே சந்தோஷம் சொல்லி மாளாது. பரபரன்னு ஆக்ரோஷமா நடிச்சிட்டு இருந்தா, ‘நடிச்சிட்டாரு பாருங்கடா’ன்னு கேலி வரும்... மானிட்டர் பார்த்துட்டு, ‘வெரிகுட் ஜானி’ன்னு

பாராட்டும் உடனே கிடைக்கும். எனக்கு அஜித் எப்பவும் ஆச்சரியம்தான். மகா அழகா இருக்கார். ஜெயிச்சாச்சு... கொடி கட்டியாச்சு.... திணறத் திணற புகழ் அடைஞ்சாச்சு... ஆனால், இன்னமும் இதுதான்

முதல் படம்ங்கிற மாதிரி சின்ஸியர். எல்லாரும் புகழ்றாங்கன்னா அது சும்மா இல்ல!’’

‘‘அஜித், ஆர்யா, நயன்கூட சேர்ந்து டாப்ஸி நடிக்கும்போது பயப்படலையா?’’

‘‘ஆமாங்க... முதல் நாள் ஷூட்டிங்ல அஜித், ஆர்யா, நயன் மூணுபேரும் இருந்தாங்க. பயத்துல தடுமாறி... தத்தளிச்சு வந்த டாப்ஸியை அன்னிக்கு எல்லாரும் சேர்ந்து ராக்கிங் பண்ணி மொக்கிட்டாங்க.

அவ்வளவுதான்! அடுத்த அரை மணி நேரத்துல எங்க ஜோதியில கலந்தாச்சு டாப்ஸி. பொதுவா, ரெண்டு ஹீரோயின் நடிக்கிற ஷூட்டிங்ல ஆளாளுக்கு தனித்தனி இடத்தில் உட்கார்ந்திருப்பாங்க. இதில்

டாப்ஸி, நயன் ரெண்டு பேருக்கும் ஒரே இடம்தான். ஓயாத பேச்சு தான். கலகலக்கிற சிரிப்புதான். யூனிட்டே ஆச்சரியப்பட்டுப் போச்சு!’’

‘‘ராணாவை கொண்டு வந்துட்டிங்களே...’’

‘‘அருமையான நண்பன். சின்ன வயதிலிருந்தே தெரியும். குண்டா இருப்பார். ‘குடும்பமே சினிமாவில் இருக்கிறப்போ நீ நடிக்க வந்தால் என்ன’ன்னு கேட்டுக்கிட்டே இருப்பேன். இப்ப இளைச்சு, உழைச்சு,

பெரிய ஹீரோ ஆகிட்டார். எனக்கு இதில் 15 நிமிஷம் மனசை அள்ளிக்கிட்டுப் போற இடம் இருந்தது. தமிழுக்குப் புதுசா இருந்தா நல்லாயிருக்கும்னு யோசிச்சப்போ, ராணா மனசுக்குள் வந்தார். போன்

பண்ணினா, ‘எங்கட, எப்புடு, என்னி டேட்சுலு’ன்னு கேட்டுட்டு வந்திட்டார். அவர் நட்புக்கு மரியாதை செய்றவர்!’’

‘‘டிரெய்லரில் பிரமாண்டம் தாக்குதே?’’

‘‘யுவன் என்னை முதன்முதலில் பெரிசா கொண்டு வர உதவியா இருந்தவர். ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அவர்தான் ஹீரோ மாதிரி தெரிவார். எடிட்டர் ஸ்ரீகர்பிரசாத் என்னோட காட் ஃபாதர். நாம

கொண்டு போனதில் சிறந்த வைரங்களை சேகரிக்கிறவர். ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கூட முத்துக்களை தேடுகிறவர். எங்க படமே திருவிழா மாதிரிதான் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் படம்

பிடிக்கிறது மட்டுமில்லை, உச்சரிக்கிற வார்த்தைகளில் கூட திருத்தம் சொல்வார். நயன் சின்ன சிரிப்பில் கூட சும்மா தாக்கு தாக்குன்னு தாக்குறாங்க. யுவனின் பெஸ்ட் பாடல்கள். ஆர்யா, எல்லாத்துக்கும்

மேலே அஜித்... இதுக்கு மேல் வேற எதுவும் கேட்பீங்களா நீங்க?’’
 நா.கதிர்வேலன்