மெசேஜ் சொல்லணும்! : சினிமான்னா





நல்ல படங்களை ஜனங்க என்னைக்கும் ஒதுக்கியதில்லை. ‘நல்ல படங்களை ரசிக்க மக்களுக்குத் தெரியலை’ன்னு சொல்றது நம்ம முட்டாள்தனம். அவங்க ஒரு படத்தை ரசிக்கிறதுக்கும், ரசிக்காததுக்கும் நியாயமான காரணங்கள் இருக்கும். நாமதான் அவங்களை பெரிய திறனாய்வாளர்கள் மாதிரி ஏ,பி,சின்னு பிரிச்சு வச்சிருக்கோம். என்னைப் பொறுத்தவரை சென்னையில் கை தட்டின சீனுக்குத்தான் திருநெல்வேலியிலும் கை தட்றாங்க. ஆக, ரசனை பொதுவானது. அந்த ரசனைக்கு பொருத்தமாத்தான் ‘இவன் வேற மாதிரி’ பண்றேன். ‘எங்கேயும் எப்போதும்’ பார்த்துட்டு என்னைக் கொண்டாடின மக்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன்’’ - நிதானமாகப் பேசுகிறார் டைரக்டர் எம்.
சரவணன். முதல் படத்திலேயே பெரும் கவனத்திற்குள்ளானவர்.

‘‘பயங்கரமான ஆக்ஷன் பக்கம் திரும்பிட்டீங்களா? தலைப்பிலேயே ஹீரோயிசம்..?’’
‘‘இது ஆக்ஷன், லவ், த்ரில்லர் கலந்தது. திரும்பவும், ‘எங்கேயும் எப்போதும்’ பார்ட்-2 எடுக்க மாட்டேன். பத்திரிகைகள்ல பாருங்க... ஒரு பக்கக் கதையில் கூட ஒரு மெசேஜ் இருக்கும். ஸோ, இரண்டரை மணி நேரப் படத்திற்கு நிச்சயம் ஒரு செய்தி சொல்லணும்னு நினைப்பேன். இன்னும் பத்து, இருபது வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் ‘அடடா... சரவணன் இதைச் சொல்ல விரும்பியிருக்கான்’னு மக்கள் நினைக்கணும். இந்த சமூகத்தில் எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும், அதைப் பற்றி ஒரு கருத்து இருக்கு. ஒரு செய்தியின் ஆரம்ப அதிர்ச்சி அடுத்த நாள் கூட நிக்க மாட்டேங்குது. நாம எந்த விஷயங்களையும் மனதில் ரொம்ப நாள் பாதிக்க விடுவதில்லை. மறந்துடுவோம். அது மாதிரி தவிர்க்கவும் மறக்கவும் முடியாத ஒருத்தனைத்தான் ‘இவன் வேற மாதிரி’ன்னு சொல்றேன். பி.எஸ்சி பாட்டனி படிச்சிட்டு, விவசாயம் பார்த்ததை விட்டுட்டு இங்கே வந்தேன். எனக்கு ஒரு இடம் கொடுத்த சினிமாவுக்கு என்னால முடிஞ்சதை செய்தாகணும். அப்படி ஒரு பதிவுதான் இந்த சினிமா. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் திரைக்கதையை மெச்சினார்கள். இப்ப திரும்பிப் பார்த்தால் இதிலும் அந்தப் பெயர் கிடைக்கும்.’’

‘‘ ‘கும்கி’க்குப் பிறகு வந்தவரா விக்ரம் பிரபு?’’
‘‘அப்போதான் ‘கும்கி’யில விக்ரம் பிரபு ‘புக்’காகி இருந்த நேரம்... லிங்குசாமி பிரதர் போஸ், ‘சிவாஜி பேரனை பாருங்க... உங்க கதையோட கம்பீரத்திற்கு சரியா வருவார்னு தோணுது’ன்னு சொன்னார். போய்ப் பார்த்தேன். என்னை இழுத்துப் போட்டது அவரோட தோற்றம். நல்ல உயரத்தில் கம்பீரமும், கோபமும் பளிச்னு வர்ற முகம். எழுந்தால், நடந்தால், ஓடினால் பரபரன்னு அதிர வைக்கிற தேஜஸ். என்னைப் பொறுத்தவரை ஒரு காரியம் செய்தா நம்புற மாதிரி தோற்றம் முக்கியம். ஆக, ‘கும்கி’யின்போதே எங்களுக்கும் சேர்த்து ரெடியாகிட்டார் விக்ரம் பிரபு. இந்தப் படத்தில் எண்ணி ஐந்தே கேரக்டர்கள். விக்ரம் பிரபுவின் மீது பெரிய மரியாதை வரும். ஆச்சரியம்னா பிரபு சாரை சொல்லணும். மகனை நடிக்கக் கொடுத்திட்டு ஒரு தொந்தரவும் கிடையாது. ‘உங்களுக்கு வசதியாக இருந்தா, எப்படியும் வேலை வாங்கிக்குங்க’ன்னு கொடுக்கிற உத்தரவாதம்... எப்போவாவது படத்தின் ஸ்டேஜ் பற்றி யதேச்சையா விசாரிக்கிற அழகு. சும்மாயில்லை... இவ்வளவு பெரிய நடிப்பைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்திற்கு இதுதான் பெரிய பெருந்தன்மை...’’

‘‘போன தடவை அஞ்சலி, அனன்யான்னு களை கட்டினீங்க. இதில் சுரபி எப்படி?’’
‘‘இந்த முறை ஹீரோயினுக்கு மும்பையையும் தாண்டிட்டேன். சுரபி, டெல்லி பொண்ணு. இதில் க்ளைமாக்ஸ் ரொம்ப முக்கியம். அதைச் செய்ய ஒரு தைரியமான பொண்ணு வேணும். அந்த ஸ்கிரிப்ட் அந்த மாதிரி நிலைக்குக் கொண்டு போகும். அதைச் சொன்ன பிறகு அதிலிருக்கிற அவசியத்தையும், நியாயத்தையும் புரிஞ்சுக்கிட்டு நடிச்சிருக்கார். பெரிய பெயர் கிடைக்கும். ‘மணிமேகலை’யா அஞ்சலி வாழ்ந்ததை விட பெரிய இடம் இது. இந்த சினிமாவை மூன்று இடத்தில் நான் நம்பினேன். ஹீரோவுக்கும், வில்லனுக்கும் இருக்கிற பகையின் அளவு, அதனோட அவசியம்; இரண்டாவது லவ் ட்ராக்; மூணாவது, வில்லன் ஹீரோவை அப்ரோச் பண்ற விதம். படம் கோர்வையாக தடதடன்னு பாய்கிற பாய்ச்சல் எனக்கு நிம்மதி. புரொடியூசர் லிங்குசாமி சார் பக்கமும் பெரிய மகிழ்ச்சி. வேறென்ன வேணும்?’’
‘‘உங்க பாடல்களில் நேர்த்தி, கதையைக் கொண்டு போகிற விதம் எல்லாமே பேசப்பட்டது!’’
‘‘இதிலும் சத்யாதான். ஆறு பாடல்களில் உருக்கியிருக்கார். இதில் மெலடியில அவர் போயிருக்குற தூரம், இன்னும் அதிகம். வேல்ராஜ் சார் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் கொடுத்தது பதைபதைப்பு. என் மனசில் இருந்த ஃப்ரேமை அப்படியே திரையில் கொண்டு வந்த மனிதர். இதில் சக்திதான் கேமரா. ‘ரேணிகுண்டா’வில் மனசை அள்ளியவர். இனி, ‘இவன் வேற மாதிரி’ சக்தின்னு பேசப்படுவார்.’’
- நா.கதிர்வேலன்