அழிந்துவரும் தமிழர் இசைக்கருவிகள் முகவீணை



இசையோடு இரண்டறக் கலந்தது தமிழர் வாழ்வு. கொண்டாட்டம், துக்கமென எல்லா நிகழ்வுகளுக்கும் இசையே அடையாளம். ஊருக்கு ஊர் கோயில்களை கட்டியவர்கள், அக்கோயில் நிறைய இசையையும், கலையையும் நிறைத்து வைத்தார்கள். நாட்டிய நங்கைகளும் நட்டுவனார்களும் இசைக் கலைஞர்களும் கலையாலும் இசையாலும் இறைவனை ஆராதித்தார்கள். இன்று, அப்பெருமைகள் வெறும் சரித்திரக் குப்பைகளாக ஏடுகளில் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. அவ்விதம் நாம் தொலைத்துவிட்ட அடையாளங்களில் ஒன்று முகவீணை.

பெயரை வைத்துப் பார்த்தால் இது, வீணையைப் போன்ற தந்தி வாத்தியமாகத் தெரியலாம். ஆனால், இது துளைக்கருவி. இன்று புழக்கத்தில் இருக்கும் பாரி நாதஸ்வரத்தின் ஆதிவடிவம். பொதுவாக இசைக்கருவிகளின் நீளம் கூடக்கூட, சுருதி குறைந்து போகும். அவ்வாறு, முகவீணையின் சுருதியைக் குறுக்கி, நீளத்தைப் பெருக்கி உருவாக்கப்பட்டதே திமிரி மற்றும் பாரி நாதஸ்வரங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 1.2 அடி நீளமே கொண்ட இந்த இசைக்கருவி வீணைக்கு இணையாக நாதம் பேசக்கூடியது. வீணையைப் போல நாதமுகம் கொண்டதால் இது முகவீணை.

பெருமாள் கோயில்களில் நள்ளிரவு வழிபாட்டின்போது, ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகௌளை, புன்னாகவராளி போன்ற ராகங்களை முகவீணை மூலம் இசைப்பார்கள். இதமான இசை, நித்திரையில் சொக்கிக்கிடக்கும் மக்களை காற்றாக வருடித் தாலாட்டும். சில சிவத்தலங்களிலும், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் இந்த இசைக்கருவி வாசிக்கப்பட்டது. நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களே இக்கருவியையும் வாசிப்பார்கள்.

நாதஸ்வரத்தை விட வாசிக்க சிரமமானது முகவீணை. பின்புறம் உள்ள அனசு மா, பலா, வேம்பு போன்ற மரங்களில் செய்யப்படுகிறது. நீளமான தண்டுப்பகுதி செய்ய ஆச்சா மரம் தேவை. ஆச்சா என்பது கருங்காலி மரத்தில் ஒருவகை. அம்மரத்தை வெட்டி, 50 ஆண்டுகள் கடந்த பிறகே பயன்படுத்த முடியும். நன்கு நீர்வற்றிப்போன மரங்களே முகவீணை செய்யத் தகுந்தவை. ஊதும் பகுதிக்கு சீவாளி என்று பெயர். இது காவிரிக்கரையில் விளையும் ஒருவித நாணல் மூலம் செய்யப்படுகிறது. பக்க சுரமற்ற இக்கருவிக்கு தண்டுப்பகுதியான உலவில் 8 துவாரங்கள் உண்டு.

உயர்ந்த சுருதியையும் லாவகமாக வளைக்க முடியும் என்பதால் முகவீணையை நாட்டிய நிகழ்வுகளில் பயன்படுத்தினார்கள். ஆனால், இன்று இதன் இடத்தை மேற்கத்திய இசைக் கருவியான கிளாரிநெட் பிடித்துக் கொண்டது. இதன் இசை தொலைதூர மக்களையும் கவர்ந்திழுக்கும் என்பதால் பாவைக்கூத்து, வடக்கத்தி பாணி தெருக்கூத்து, பொம்மலாட்டம், கட்டைக்கூத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தினார்கள். இன்று அக்கலைகளும் அழிவின் விளிம்பில் இருப்பதால், இதன் பயன்பாடு அருகிப்போனது.  

நாட்டுப்புற வழக்கில் இக்கருவிக்கு கட்டைக்குழல் என்று பெயர். நெட்டைக்குழல் என்பது நாதஸ்வரம். கிராமிய கச்சேரிகள், நையாண்டி மேள நிகழ்ச்சிகளில் கட்டைக்குழலுக்கும் நெட்டைக்குழலுக்கும் போட்டியே நடக்குமாம். ‘கட்டைக்குழல்’ என இக்கருவியின் பெயரிலேயே ஒரு நாட்டுப்புற ஆடற்கலை உண்டு. தூத்துக்குடி, விருதுநகர், மதுரை வட்டாரத்தில் அருந்ததியின சமூக மக்களால் இக்கலை நிகழ்த்தப்பட்டது. தவில், பம்பை, உருமி ஆகிய தோலிசைக் கருவிகளோடு முகவீணையும் இசைக்கப்படும். மக்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் ஆடற்கலை இது.  

இக்கலைஞர்கள் பயன்படுத்தும் முகவீணையின் அனசுப்பகுதி வெண்கலத்தால் ஆனது. சீவாளி பனை ஓலையால் செய்யப்பட்டிருக்கும். கோயில் திருவிழாக்கள், சடங்குகளில் இக்கலை நிகழ்த்தப்படும். இப்போது கருவியைப் போலவே கலையும் வழக்கொழிந்து விட்டது. கலைஞர்களும் அருகிப்போனார்கள்.கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நரசிங்கம்பேட்டைதான் முகவீணையின் உற்பத்தித்தலம். இங்கு ஐந்து குடும்பங்கள் பல தலைமுறைகளாக நாதஸ்வரம், முகவீணை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். இப்போது பலர் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டார்கள்.

‘‘நாலு தலைமுறையா முகவீணை செய்றதுதான் எங்க தொழில். எங்க தாத்தா காலத்தில வெளிமாநிலத்தில இருந்து எல்லாம் முகவீணை வாங்க வருவாங்க. இப்போ திருப்பதி மாதிரி சில பெரிய கோயில்கள்ல மட்டும்தான் வாசிக்கிறாங்க. ஷோகேஸ்ல வச்சுக்கிறதுக்காக அப்பப்ப யாராவது வந்து வாங்கிட்டுப் போறாங்க’’ என்று வருந்துகிறார் இந்தத் தொழிலில் இருக்கும் குணசேகரன்.

முகவீணையை ஒத்து உருவாக்கப்பட்ட இந்துஸ்தானி இசைக்கருவியான ஷெனாய், இசையுலகில் இன்று தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. பிஸ்மில்லாகான் போன்ற மேதைகள் அக்கருவிக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுத் தந்தார்கள். முகவீணை மரபோ சீண்டுவார் இல்லாமல் சிதைந்து விட்டது.
 வெ.நீலகண்டன்