சிம்பு நயன்தாரா இணைந்த ரகசியம்!



தமிழ் மக்கள் மூணு வேளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ... இந்த வாரம் முழுக்க நொறுக்குத் தீனி சிம்பு-நயன்தாரா மறுபடி சேர்ந்து நடிக்கும் சேதிதான். ‘எப்படி... எப்படி?’ எனக் கேட்டுக் கொண்டிருக்கிற மகா ஜனங்களுக்காக நாலா பக்கமும் நிஜம் தேடினோம்...


டைரக்டர் பாண்டிராஜ் சொன்ன கதையைக் கேட்டதும் சிம்புவுக்கு ரொம்பவும் பிடித்துவிட்டது. ‘‘இதை நானே தயாரிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு உற்சாகமாகக் கிளம்பினார். நெடுநாள் கழித்து சொந்த பேனரில் படம் என்பதில் டி.ஆருக்கும் சந்தோஷம். அடுத்த நிமிடமே ஸ்டார்ட் சொல்லி ஆரம்பித்த தேடல், கதாநாயகிக்கானது. மும்பைக்கு ஃப்ளைட் புக் பண்ணி பரிணீதி சோப்ரா, சோனம் கபூரிடம் எல்லாம் பேசினார்கள். அவர்களின் கால்ஷீட் டைரி முழுக்க ஹவுஸ்ஃபுல். உடனே ஸ்ருதி ஹாசன், சமந்தா, காஜல் அகர்வால் என விசாரித்துப் பார்த்தார்கள். ‘‘அடடா, ஸாரி... ஒரு வருஷத்திற்கு ஒண்ணுமே முடியாது’’ என இட வலமாகத் தலையாட்டி விட்டார்கள்.



புதுமுகங்களைத் தேடலாமா என்ற யோசனையின்போதுதான், ‘‘நயன்தாரா நடித்தால் அள்ளுமே. முடியாதுதான்... இருந்தாலும் யோசிக்க நல்லா இருக்கு!’’ என உதவி இயக்குநர் ஒருவர் திரி கிள்ளிப் போட, சட்டென்று புகைய ஆரம்பித்தது ஐடியா. டைரக்டர் பாண்டிராஜ் உடனே ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்மிற்கு அலை பேச, ‘‘ஏன் சார் என்னை மாட்டி விடுறீங்க..? பயமாயிருக்கு!’’ என்று அவர் பதற, ‘‘பேசிப் பார்க்கிறது குத்தமாய்யா?’’ என பாண்டிராஜ் திரும்பக் கேட்டிருக்கிறார்.

‘இது கதிர்வேலன் காதல்’ படப்பிடிப்பில் இருந்த பாலசுப்பிரமணியெம் இதை உதயநிதியிடம் சொல்ல, அவரும், ‘‘சொல்லிப் பாருங்க... அப்புறம் அவங்க இஷ்டம்’’ என்றிருக்கிறார். அப்புறம் என்ன தடை? ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அலைபேசி நயன்தாராவிடம் கை மாற, முழுக் கதையையும் நயன்தாராவிடம் சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். யாருமே எதிர்பார்க்காத ரியாக்ஷன் நயனிடம் இருந்து! ‘‘நான் ரெடி... சிம்பு ரெடியா?’’ என உற்சாகமாக அவர் கேட்க, பாண்டிராஜ் கிட்டத்தட்ட மயங்கி விழாத குறைதான்.


சிம்புவுக்கு இன்னும் விஷயம் தெரியாதே! எதுவுமே நடக்காதது போல மெதுவாக, ‘‘நயன்தாரா நடித்தால்...’’ என காதில் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ‘‘ப்ச்... இருக்கிற பிரச்னை போதாதா? இது வேறயா?’’ என அவர் சற்றே பின்வாங்க, அப்புறம்தான் நயன் ஓகே சொன்ன விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் பாண்டி. கொஞ்ச நேரம் யோசித்த சிம்பு, எதிர்பார்த்தபடியே பச்சைக் கொடி காட்டியிருக்கிறார். அடுத்த நொடியே பாண்டிராஜ் அதை ட்விட்டரில் பதிவு செய்ய, அதகளப்பட்டது தமிழ் சினிமா.

இதெல்லாம் நமக்குத்தான் புதுசு. வடக்கே நடந்திருக்கிறது. ரன்பீர் கபூர் அங்கே சாக்லெட் பாயாக வலம் வந்திருக்க, தீபிகா பார்வையில் விழுந்தார். இரண்டு பேரும் கை கோர்த்து பார்ட்டிகளில் போஸ் கொடுக்க, மும்பையே பொறாமையும் புகழுமாய் அவர்களைப் பார்த்தது. யார் கண் பட்டதோ... உடனே பிரிந்தார்கள். அப்புறம் நேருக்கு நேர் வரும்போது கூட முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். ரன்பீர் காலப்போக்கில் காத்ரீனா பக்கம் சாய, தீபிகா ரன்வீர் சிங்கிடம் சொக்கினார். அப்புறம் நடந்தது அந்த மாயம். ‘ஏ ஜவானி ஹே திவானி’ படத்தில் அவர்கள் மறுபடி ஜோடி சேர, அது 100 கோடி ரூபாய் கல்லா கட்டியது சினிமா வரலாறு. இப்போது அவர்களின் நட்பு, சினிமாவிற்கு மட்டும் ஃபீல்டு க்ளியர். மற்றபடி தனித்தனிப் பாதையில் ரன்பீரும், திபிகாவும்.

அதே டைப்பில்தான் திரும்பியிருக்கிறார்கள் நயன் - சிம்பு. ஏற்கனவே பாண்டிராஜ் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ சொற்ப பட்ஜெட்டில் வசூல் கொட்டிவிட்டது. ஸ்கிரிப்ட்டும், பேஸ்மென்ட்டும் ஸ்ட்ராங்காக இருப்பதால், இந்தப் படமும் வியாபாரத்தில் சூடு பறக்கிறது.

அசந்து இருந்தவர்கள் உரிமையை வாங்கிவிட ஆலாய்ப் பறக்கிறார்கள். சும்மாவா? சேனல்களின் இடைவிடாத அழைப்பில் திளைக்கிறார் டி.ஆர். பெரும் தொகை ஃபிக்ஸ் பண்ண கணக்குப் போடுகிறார் சிம்பு. ‘‘அட்வான்ஸ் வாங்கிக்கோங்க சார்...’’ என ப்ளாங்க் செக் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள். ‘அதெல்லாம் சரி... ஹன்சிகா - சிம்பு காதல் என்னாச்சு என்கிறீர்களா? அது வந்து... அது வந்து... ஒரு மாசத்திற்கு மேலாகியும் இன்னும் அபாயக் கட்டத்திலேயே இருக்கு!

- ஜேம்ஸ் பாண்டு