ஹீரோயிசத்தில் நம்பிககை இல்லை அஜித்தின் வீரம்!



‘‘சிம்பு-ஹன்சிகா கல்யாணம் நடக்குமா, நடக்காதா?’’ மாதிரி, தமிழகத்தின் இன்னொரு எதிர்பார்ப்புக் கேள்வி, ‘‘எப்படி இருக்கும் ‘வீரம்’?’’ டைரக்டர் சிவாவிடம் பேசினால், ‘‘ஒரு படைப்பாளனோட மனசே எக்கச்சக்கமா ட்விஸ்ட் அடிக்கிற சுவாரஸ்ய திரைக்கதை போலத்தான். கொஞ்சம் விட்டுட்டோம்னா, மனசு வெளியே குதிச்சு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிடும். இங்கே உழைப்புதான் மந்திரம். ஒற்றைக் கால் கொக்கு மாதிரி நின்னு, சரியா ஒரு ஸ்கிரிப்ட் மாட்டும்போது ‘டக்’னு கொத்திட்டுப் பறந்துடணும். அப்படிப் பிடிச்ச ஸ்கிரிப்ட் ‘வீரம்’!’’ எனத் தித்திப்பாகப் பேசுகிறார்.


‘‘ ‘ஆரம்பம்’ மகா ஹிட். அடுத்து வர்ற ‘வீரம்’... எக்கச்சக்க ப்ரஷர் இருக்குமே..?’’ ‘‘நிஜம் சொல்லணும்னா அப்படி ஒரு பதற்றம் துளி கூட இல்லை. நான் ஆரம்பத்தில் பார்த்த அஜித் சார், இன்னிக்கு ‘ஆரம்பம்’ வரை அப்படியே இருக்கார். அவர் என்னிக்கும் நம்பர் விளையாட்டுகளில் நம்பிக்கை வைக்க மாட்டார். வித்தியாசம் காட்ட முயற்சி செய்வது மட்டும்தான் அவர் வேலை. அவருக்கு இப்போ ஹீரோயிசத்தில் நம்பிக்கை இல்லை. அவர்கிட்ட எப்பவும் பாசிட்டிவ் அப்ரோச் இருக்கு. பெரிய ஸ்டார்கிட்டே இருக்கோம்ங்கிற அவசரத்தை உணர வைக்க மாட்டார். லைட்மேன் வரைக்கும் சுமுகமான உறவு வச்சிருப்பார். நாலு பேர் எதிரே இருந்தாலும்,

எல்லோரும் உட்கார்ந்த பிறகுதான் உட்கார்றார். இன்னியோட ஷூட்டிங் ஆரம்பிச்சு 102 நாளாச்சு. திருப்தியை என் முகத்தில் பார்க்கலைன்னா, இடத்தை விட்டுப் போக மாட்டார். விடியற்காலையிலயா... ராத்திரி இரண்டு மணி வரைக்குமா... எதுக்கும் முகச் சுளிப்பே இல்லாமல் புன்னகையோடு நிற்பார். இந்த சாத்வீகத்தை எங்கே பிடிச்சார்னு தெரியலை. அவர்கிட்ட கத்துக்க எனக்கு நிறைய இருக்கு.’’ ‘‘எப்படி இருக்கும் ‘வீரம்?’ ’’

‘‘ஃபேமிலி சென்டிமென்ட், ஆக்ஷன். படம் முழுக்க தழையத் தழைய வேட்டி கட்டிக்கிட்டு அஜித்தை நீங்க பார்த்திருக்கவே முடியாது. நாம் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் கூட சாப்பிடலாம். கே.எப்.சியில கூட ஒரு சிக்கன் பீஸ் ருசி பார்க்கலாம். ஆனால், அம்மா கையில உருட்டித் தர்ற சோறுக்கு வேறு எதுவும் முன்னாடி நிற்க முடியாது. அப்படித்தான் இருக்கும் ‘வீரம்’. அதுக்காக சென்டிமென்ட்டில் பிழியாது.



 இந்தக் கதையை வேறு எந்த ஹீரோவிடம் சொன்னாலும் ரொம்பத் தயங்கி இருப்பாங்க. ஏன்னா, இதில் ஹீரோவுக்கு மட்டுமில்லை... எல்லாருக்கும் இடம் இருக்கு. கதையோட்டத்தை தன்மையா புரிஞ்சுக்கிற அழகு அஜித் சார் கிட்ட அவ்வளவு இருக்கு. பாசமான குடும்பம், அராத்தான தம்பிகள், அவங்க வாழ்க்கையில நடக்கிற விஷயங்கள்னு போகும். பொங்கல் அன்னிக்கு பொருத்தமான படம். கூட நடிக்கிறவங்க எல்லாமே அவருக்கு குடும்பம் மாதிரிதான். எனக்கு ஆச்சரியம் தாங்க முடியலை. ‘நீங்க எப்பவுமே இப்படித்தானா?’ன்னு கேட்டுக்கூட இருக்கேன். அதுக்கும் அந்த அழகு பெத்த சிரிப்புதான்...’’

‘‘உங்களுக்கும் ‘பிரியாணி’ கிடைச்சதா?’’ ‘‘இன்னிக்குக்கூட மதியம் மீன் குழம்பு, வறுவல். ‘குழம்பு போடட்டுமா சிவா?’ன்னு அஜித் சார் கேட்டால், ‘கொட்டுங்க சார்’னு சொல்லணும் போல இருக்கும். அப்படி ருசி. குழம்பில அன்பையும் சரிவிகிதமா போட்டு கலக்குவார் போல. பிரியாணி எல்லாம் சொல்லவே வேண்டாம்... வகைதொகை இல்லாம சாப்பிட்டு வச்சிடுவோம். எங்கேயிருந்து கத்துக்கிட்டார்னு யாருக்கும் தெரியலை!’’
‘‘சண்டைக் காட்சியில் பரபரப்பு கூடி நிக்குது. யு-டியூப் பரபரப்பானது..?’’

‘‘எப்படியோ... இரண்டு நிமிஷம் வந்துடுச்சு. எனக்கே ரொம்பவும் பயம். ஒரு ஸ்டன்ட் மாஸ்டர் கூட அப்படி ரிஸ்க் எடுக்க மாட்டாரு. இதுவரைக்கும் 14 படத்திற்கு கேமரா, அஞ்சு படம் டைரக்ஷன் செய்திருக்கேன். இது மாதிரி ரயில் ஃபைட்டை நான் பார்த்ததில்லை. ‘கரணம் தப்பினால் மரணம்’னு சொல்றதை அந்த ஷாட்லதான் நேரில் பார்த்தேன். கீழே அதலபாதாளம்...


எந்த பாதுகாப்புக்கும் இடம் கொடுக்காத லொகேஷன். ‘வேணாம்’னு சொல்லிப் பார்த்தும் கேட்கலை. ‘கதை சொன்னபோது எப்படிச் சொன்னே... அதே மாதிரி எடு சிவா’ன்னு பிடிவாதமா நின்னார். நான் என் வாழ்க்கையில ஒரு ஷாட்டுக்கு ‘ஸ்டார்ட் ஆக்ஷன்’ சொல்ல அன்னிக்குத்தான் பயந்து நடுங்கினேன்...’’

‘‘திரும்ப க்யூட் தமன்னாவை கொண்டு வந்திட்டீங்க..?’’
‘‘அவங்க எப்போதும் அழகு. எனக்கு அவங்களை ரொம்ப நாளாகவே தெரியும். தெலுங்கு, இந்திப் பக்கம் போனாலும் அவங்க தமிழுக்குத்தான் எப்பவும் முதலிடம் கொடுப்பாங்க. இதில் அழகான லவ் இருக்கு. ஓடித் துரத்துகிற வெறி இல்லாமல், மிக அழகான காதல் உணர்வுகளும், அன்பைப் பகிர்தலும் படம் முழுக்க தெளிந்த நீரோடை மாதிரி போய்க்கிட்டே இருக்கும். இதில் அஜித் தெரியமாட்டார். ‘விநாயகம்’தான் தெரிவார்.



அதுதான் அவர் பெயர். விதார்த், பாலா, சுகைல், முனிஷ் அத்தனை பேருக்கும் அண்ணனா மட்டுமே அவர் தெரிவார். சந்தானம் இதில் படத்தோட இணைஞ்சிருக்கார். ‘எந்த நேரம் வேணும்னாலும் வர்றேன்... எப்ப வேணும்னாலும் கூப்பிடுங்க... சொல்ற மாதிரியே எடுத்துக் கொடுத்திடுங்க’ன்னு மட்டும் சொல்லிட்டு நடிச்சார் அஜித். அந்த அன்புக்கு நான் கொடுக்கிற மரியாதைதான் ‘வீரம்’!’’

‘‘உங்களுக்கும் டி.எஸ்.பிக்கும் அப்படி என்ன ஒரு மேஜிக் அது?’’ ‘‘ஆரம்பத்திலேயே அமைஞ்சிருச்சு. ரெண்டு பேரும் எங்கேயாவது கண் காணாமல் போயிடுவோம். முழுக்கதையையும் ஒரு சம்பவம் விடாமல் சொல்லுவேன். பாட்டு ஆரம்பிக்கிற இடத்திற்கான சூழ்நிலையை வர்ணிப்பேன். ‘இதோ... இந்த இடம்தான்.... இந்த வார்த்தையைச் சொன்னதும் பாட்டு பறக்குது’ன்னு சொல்லிட்டு, என் அடுத்த வேலையைப் பார்க்கக் கிளம்பிடுவேன். திரும்பி வந்தா முத்து முத்தா டியூன் போட்டு வச்சிருப்பார். ‘வீர’த்திலும் அப்படிப்பட்ட பரவச கணங்கள் நிச்சயமா நிறைவே இருக்கு. ஒண்ணு ஞாபகம் வைங்க... இதில் அஜித் இறங்கி அடிக்கிறார்... ஆமா!’’ உற்சாகமாகிறார் சிவா.

- நா.கதிர்வேலன்