+2 உயிரியல் சென்டம் வாங்க டிப்ஸ்



உயிரியலில் சென்டம் வாங்குவதுதான் மாணவர்கள் பலரது கனவு. மருத்துவம் படிப்பதற்கு அதுதானே முக்கிய சப்ஜெக்ட்! தாவரவியல் பாதி, விலங்கியல் பாதி என சேர்ந்த கலவையான அதில்  சென்டம் எடுப்பது ரொம்பவே சிரமம். காரணம், பாடப் புத்தகத்தின் உள்ளிருந்து கேள்விகள் கேட்கப்படுவதுதான்.

டாப் டூ பாட்டம் தயார் செய்தால் மட்டுமே இதில் முழு மதிப்பெண்களையும் பெற முடியும் என்கிறார்கள் கடந்த முறை சென்டம் பெற்ற மாணவர்கள். ஆனால், திட்டமிட்டால் எதுவும் சாத்தியமே என நம்பிக்கை விதைக்கிறார்கள் ஆசிரியர்கள். தாவரவியல் மற்றும் விலங்கியலில் தலா 75 வீதம் இதில் மொத்த மதிப்பெண்கள் 150. முதலில் தாவரவியலில் முழு மதிப்பெண்களைப் பெறுவது எப்படி என டிப்ஸ் தருகிறார் அடரி அரசு மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் எஸ்.வேல்முருகன்.

* தாவரவியலில் மொத்தம் ஆறு பாடங்கள் உள்ளன. இதிலிருந்து ஒரு மார்க் 14, மூன்று மார்க் 7, ஐந்து மார்க் 4, பத்து மார்க் 2 என மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு கேள்விகள்  கேட்கப்படுகின்றன. ஒரு மதிப்பெண் கேள்விகள் தான் பெரும் பாலும் மாணவர்களின் சென்டம் கனவைத் தகர்த்துவிடும். காரணம், இவை புத்தகத்தின் உள்ளிருந்து எடுக்கப்படுகின்றன. இதில் முழு  மதிப்பெண்களையும் பெற பழைய கேள்வித்தாள்களை ஒருமுறை புரட்டுவது மட்டுமே சிறந்த வழி. இதுவரை 24 கேள்வித்தாள் செட்கள் வந்துள்ளன. பெரும்பாலும் இதிலிருந்தே ஒரு மார்க் கேள்வி கள் வந்துவிடும். இதோடு, புத்தகத்தில் ஆங்காங்கே போல்டான எழுத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவியலாளர் பெயர்கள், வருடங்கள் இவற்றை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பு க்பேக்கில் உள்ள ஒருமார்க் கேள்விகளையும் படித்துக் கொண்டால் நிச்சயம் 14 மதிப்பெண்களும் வசமாகிவிடும். 
* மூன்று மார்க்கில் 10 கேள்விகள் கேட்கப்படும். ஏழுக்கு பதிலளிக்க வேண்டும். புத்தகத்தின் பின்பக்கத்திலிருந்து பெரும்பாலும் கேள்விகள் கேட்கப்படுவதால் எழுதுவது சுலபம். முதல்  ஐந்து பாடங்களை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம். ஆறாவது பாடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இந்தப் பாடம் அதிக தியரியாக இருப்பதால் சாய்ஸில் விடுவது நல்லது.
* முதல் பாடமான தாவர வகைப்பாட்டியல் கொஞ்சம் எளிமையானது. இதிலிருந்து மூன்று மதிப்பெண்ணில் இரண்டு கேள்விகள் கேட்கப்படும். இந்த இரண்டையும் சுலபமாக எழுதல £ம். மொத்தம் 48 கேள்விகள் இருக்கின்றன. அடுத்ததாக 2வது பாடத்திலிருந்தும் இரண்டு கேள்விகள். இதில் ஒரு கேள்வி தியரி, ஒரு கேள்வி வரைபடம் எனக் கேட்கப்படும். இந்தப் பாடத்தில் 20  வரைபடங்கள், 34 மூன்று மார்க் கேள்விகள் உள்ளன. இவற்றை படித்துக் கொண்டால் இந்த இரண்டிற்கும் எளிதாக விடையளித்து விடலாம். மூன்றாவது பாடத்திலிருந்து கேட்கப்படும் கேள்வி  பெரும்பாலும் வரைபடமாகத்தான் இருக்கும். இந்தப் பாடத்தில் ஆறே படங்கள்தான் உள்ளன. அதுவும் ‘குரோமோசோம் படம் வரைந்து பாகம் குறி’ என்ற கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறார்கள்.  நான்காவது பாடத்தில் 25 கேள்விகள் உள்ளன. சிறிய பாடமான இதில் ஒரு கேள்விக்கு சுலபமாக பதிலளிக்கலாம். ஐந்தாவது பாடம் கொஞ்சம் பெரியது. இதில் 36 கேள்விகள் இருக்கின்றன. இந்தப்  பாடத்திலிருந்து மூன்று கேள்விகள் கேட்கப்படும். ஒளிச்சுவாசம், இருட்சுவாசம் -வேறுபடுத்துக? என்ற கேள்வி ஒன்பது முறை கேட்டிருக்கிறார்கள். நீர் ஒளிபிளத்தல் என்றால் என்ன? என்ற கேள்வியை  ஆறு முறை கேட்டிருக்கிறார்கள். 
* அடுத்ததாக ஐந்து மார்க் கேள்வி பகுதியில் ஏழு வினாக்களில் நான்கிற்கு பதிலளிக்க வேண்டும். எல்லாப் பாடத்திலிருந்தும் தலா ஒரு கேள்வியும், ஐந்தாவது பாடத்தில் மட்டும்  இரண்டு கேள்விகளும் கேட்கப்படும். முதல் நான்கு பாடங்களை தெளிவாகப் படித்துக் கொண்டால் போதுமானது. இதில் முதல் கேள்வியான, கேள்வி எண் 25 கட்டாயக் கேள்வி. இது முதல் பாடத் தில் இருந்து கேட்கப்படும். பெரும்பாலும் ஹெர்பேரியத்தின் முக்கியத்துவம், மால்வேசி, சொலானேசி, யூஃபோர்பியேசி, மியூசேசி ஆகிய குடும்பங்களின் பொருளாதார பயன்கள் எனக் கேள்விகள் வரு கின்றன. 2வது பாடத்தில் 20 ஐந்து மார்க் கேள்விகளே இருக்கின்றன. இதில் வரைபடம் அல்லது தியரி எனக் கேட்பார்கள். மொத்தம் நான்கு வரைபடங்களே உள்ளன. உதாரணத்திற்கு, ‘சூரியகாந்தி  இலையின் உள்ளமைப்பை படம் வரைந்து பாகங்களைக் குறிக்கவும்’ என்ற கேள்வி நான்கு முறை கேட்கப்பட்டுள்ளது. தியரியில் ஆக்குத்திசு வகைகள் பற்றி கேள்வி இருக்கும். மூன்று மற்றும் ந £ன்காவது பாடங்கள் சேர்த்து மொத்தமே பயிற்சிக் கேள்விகள் 25தான் உள்ளன. இதில் நான்காவது பாடம் எளிதானது. இவற்றிலேயே 20 மதிப்பெண்களையும் பெற்றுவிடலாம். ஐந்தாவது பாடத்தில்  நான்கு சோதனைக் கேள்விகள் இருக்கின்றன. இவற்றை படித்துக் கொண்டால் கூடுதல் நம்பிக்கை கிடைக்கும்.
* பத்து மதிப்பெண்களைப் பொறுத்தவரை நான்கு கேள்விகளுக்கு இரண்டிற்கு பதிலளிக்க வேண்டும். இதில் 1, 2, 4, 5 ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இவற்றில் ஒன்று  மற்றும் நான்காவது பாடங்கள் நல்ல சாய்ஸ். ஏனெனில், 1வது பாடத்தில் பத்து மார்க் கேள்விகள் ஆறுதான் இருக்கின்றன. இதில் நான்கு தாவரக் குடும்பங்கள் மற்றும் ஒரு வகைப்பாடு கேள்வி  இருக்கிறது. இவற்றைப் படித்தாலே பத்து மதிப்பெண் நிச்சயம். அதேபோல் 4வது பாடத்தில் ஐந்தே கேள்விகள்தான் இருக்கின்றன. தாவரத் திசு வளர்ப்பு பற்றி கேள்வி வரலாம். இந்தப் பாடமும்  சிறியது. இவற்றைப் படித்தால் முழு மதிப்பெண்களை எடுத்துவிடலாம். 
* குடும்பத்தின் பெயர்கள், அறிவியல் பெயர்கள், பொருளாதாரப் பயன்கள், படங்கள் இருந்தால் தெளிவாக பாகத்தோடு வரைதல் ஆகியவற்றை சரியாகச் செய்தால் முழு மதிப்பெண்ணும் எளிதாகக்  கிடைக்கும். சென்டம் என்பது சுலபமாகிவிடும்.
இதனுடன் அடிக்கடி கேட்கப்பட்ட மூன்று, ஐந்து, பத்து மதிப்பெண் கேள்விகள் கொடுத்துள்ளோம். விலங்கியல் பாடத்தில் முழு மதிப்பெண்களை பெறுவது எப்படி? வரும் இதழில் பார்க்கலாம்...

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

3 மார்க் கேள்விகள்

1. டாட்டோனிம் வரையறு?
2. நாமென் ஆம்பிகுவம் என்றால் என்ன?
3. ஆசிரியர் பெயர் குறித்தல் என்றால் என்ன?
4. கிளாடோடு என்றால் என்ன?
5. புரோட்டோசைல இடைவெளி என்றால் என்ன?
6. யூஸ்டீல் என்றால் என்ன?
7. ஒருவித்திலைவேர், இருவித்திலைவேர், வேறுபடுத்துக?
8. குரோமோசோம் வகைகளை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
9. முழுத்திறன் பெற்றுள்ளமை - வரையறு?
10. தனிச்செல் புரத உற்பத்திக்கு பயன்படும் ஆல்காக்கள் யாவை?
11. ரெஸ்ட்ரிக்ஷன் என்டோநியூக்ளியஸ் என்றால் என்ன?
12. ஒளிச்சுவாசம், இருட்சுவாசம் - வேறுபடுத்துக?
13. நொதித்தல் என்றால் என்ன?
14. ஹிம்மிலின் என்றால் என்ன?
15. ஹெட்டிரோஸிஸ் என்றால் என்ன?
5 மார்க் கேள்விகள்
1. ஹெர்பேரியத்தின் முக்கியத்துவத்தை விளக்குக?
2. மால்வேசியின் ஏதேனும் ஐந்து பொருளாதார பயன்களை விளக்குக?
3. மியூஸா, ராவனெலா - வேறுபடுத்துக?
4. இருவித்திலை இலை உள்ளமைப்பை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்
5. ஆக்குத்திசு என்றால் என்ன? அதன் வகைகளை படத்துடன் விளக்குக?
6. கடத்து ஸிழிகி பற்றி குறிப்பு வரைக?
7. தாவரத் திசு வளர்ப்பின் பயன்களை விளக்குக?
8. சுழற்சி மற்றும் சுழற்சியிலா ஒளி பாஸ்பரிகரணம் - வேறுபடுத்துக?
9. தேக்கின் பொருளாதாரப் பயன்களை விளக்குக?

10 மார்க் கேள்விகள்

1. பெந்தம் -ஹூக்கர் வகைப்பாட்டை விளக்குக?
2. ஒரு வித்திலை தாவரத் தண்டு, இருவித்திலை தாவரத் தண்டு உள்ளமைப்பை வேறுபடுத்துக?
3. தாவரத் திசு வளர்ப்பின் செயல்நுட்பத்தை விவரி?
4. கிளைக்காலிசிஸ் என்றால் என்ன? அதன் படிநிலைகளை விவரி?
5. ஒளிச்சேர்க்கையின் ஒளிவினைகளை விவரி?
6. கால்வின் சுழற்சி - விவரி?

சென்டம் ரகசியம்!

உயிரியல் பாடத்தில் கடந்த ஆண்டு சென்டம் வாங்கியவர்களில் ஒருவர், ஊத்தங்கரை வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் கார்முகில். தற்போது சென்னை மருத்துவக் கல்லூரியில்  எம்.பி.பி.எஸ். படித்து வரும் இவர் கூறும் டிப்ஸ்கள்... ‘‘டைம் மேனேஜ்மென்ட் முக்கியம். தேர்வு நேரத்தை ஒவ்வொரு பாடத்துக்கும் ஒன்றரை மணி நேரம் என்று பிரித்துக்கொள்ள வேண்டும். தாவரவியலில் 3, 5, 10 மதிப்பெண் கேள்விகளில் சாய்ஸ் இருந்தாலும் கூட சில நேரங்களில் ட்விஸ்ட் பண்ணி கேள்விகளை கேட்பார்கள்.

புரிந்துகொண்டு விடையளிக்கத் தயாராக வேண்டும். பொட்டானிகல் பெயர்களெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ள நான் தனியாக எழுதி வைத்துப் படித்தேன். புத்தகத்தை முழுமையாகப் படித்ததோடு கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கும் விடை எழுதி பயிற்சி செய்தேன். 5 மார்க் கேள்வியில் வரும் கம்பல்சரி கொஸ்டின் பெரும்பாலும் முதல் பாடத்திலிருந்து கேட்பார்கள். பத்து மதிப்பெண் கேள்விகளில் ஃப்ளாரல் டயக்ரம், ஃப்ளாரல் ஃபார்முலா கட்டாயம் கேட்பார்கள். கிளைக்காலிசிஸ் பற்றிய கேள்வி நிச்சயம் வரும். கீவேர்டுகளை அண்டர்லைன் செய்து எழுதினால் திருத்துபவர்கள் சுலபமாக மதிப்பெண் போடுவார்கள்.’’

- பேராச்சி கண்ணன், எம்.நாகமணி
படம்: ஏ.டி.தமிழ்வாணன், இரா.ரெங்கப்பிள்ளை