ஓகே



‘‘நாம கஷ்டப்பட்டு மகன்களை படிக்க வச்சோம். வேலைக்குப் போயிட்டானுக! ஆனா, நம்ம இஷ்டப்படி நல்ல வசதியான இடமா பொண்ணு பார்த்து அவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது போலிருக்கு. பையனுக்கு பெண் பார்க்கலாமான்னு கேட்டேன். நான் ஒரு பெண்ணை லவ் பண்றேன்ங்கறான்!’’ - பக்கத்து விட்டு ராமசாமியிடம் கவலையோடு பேசினார் நடராஜன்.

‘‘என்ன சார்... இதுக்குப் போய் ஃபீல் பண்றீங்க? இந்தக் காலத்துல இதெல்லாம் சகஜம். வேலைக்குப் போய் வர்ற இடத்துல, ஆணும் பெண்ணும் சந்திச்சுப் பேசி காதல் பண்றாங்க. இதுல என்ன தப்பு? அதுக இஷ்டப்படி கல்யாணத்தப் பண்ணி வச்சிட வேண்டியதுதானே! இது அந்தக் காலம் மாதிரி இல்ல சார்... 2014ம் வருஷம்!’’ - தெளிவான அறிவுரைகளை தயங்காமல் அளித்தார் ராமசாமி.

நடராஜன் முகத்தில் புன்னகை...‘‘அப்படியா சொல்றீங்க? விஷயம் இவ்வளவு சீக்கிரமா ஃபைனல் ஆகும்னு நான் நினைக்கல! நான் சொல்ல வந்தது உங்க மகன் குமார் பற்றித்தான். அவன்தான், ‘என் காதல் விஷயத்தை அப்பாகிட்ட பக்குவமா சொல்லி சம்மதிக்க வையுங்க அங்கிள்’னு வந்து சொன்னான். நீங்க உடனே ஓகே பண்ணிட்டீங்களே!’’ - நடராஜன் சொன்னதும் ராமசாமிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.    

கு.அருணாசலம்