எடுத்த முடிவு எடுத்ததுதான்! முறுக்கேற்றும் அஜித்



வீரம்’ வெற்றியில் ரொம்பவும் குளிர்ந்து போகாமல் வியர்க்க வியர்க்க ஜிம்மில் உடல்கட்டை இறுக்கிக்கொண்டிருக்கிறார் அஜித். கௌதம் மேனனுடன் கை கோர்க்கும் அடுத்த படத்திற்கான ஆயத்தம் மட்டுமே இப்போது ‘தல’யாய பணி. அடுத்த வாரம் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருக்க, இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரம் அநேகமாக கௌதம் மேனன் படத்தின் தலைப்பு வெளியாகியிருக்கலாம்.

முந்தைய படங்களில் பார்த்த பெப்பர் அண்ட் சால்ட் தோற்றத்திலிருந்து அஜித்தை மாற்ற கௌதம் மேனன் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள். ஹேர் ஸ்டைல் தவிர, 8 பேக்கிலும் வந்து அசத்தப் போகிறார், வெளிநாட்டு தொழில்நுட்பக் கலைஞர்கள், வடநாட்டு ஹீரோயின் என்றெல்லாம் பூஜைக்கு முன்பே புகைகின்றன தகவல்கள். அஜித் ரசிகர்களிடம் வழக்கத்துக்கு அதிகமாகவே எகிறிக் கொண்டிருக்கிறது எதிர்பார்ப்பு.

இது போதாதென்று மூன்று வருடங்களுக்கு முன்பு கலைத்தெறிந்த தனது ரசிகர் மன்றத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போகிறார் அஜித் என்ற செய்தியும் அவரது ரசிகர்களிடையே புதிய அலையை வீச வைத்துள்ளது. அஜித் அலுவலக தொலைபேசி ஓய்வின்றி ஒலிக்க, தமிழ்நாடு முழுவதிலும் இருந்து எக்கச்சக்க விசாரிப்புகள் ஆர்வம் பொங்க வருகிறதாம்.  இந்த இடத்தில், ரசிகர் மன்றத்தை அஜித் கலைத்ததற்கான காரணம் சின்ன பிளாஷ்பேக்கில்...

நடிகர்களுக்கு ரசிகர்கள்தான் பெரும் பலம் என்பதை நன்கு அறிந்தவர்தான் அஜித். ஒரு படம் வரும்போது அதனை ரசிப்பது, வரவேற்பது, பிடித்த நடிகர் மீது அன்பு பாராட்டுவது எல்லாமே அஜித்துக்குப் பிடித்த விஷயம்தான். ஆனால், அது எல்லை மீறியும் வண்ணம் மாறியும் போவதை அவர் ரசிப்பதில்லை. பொதுவாகத் தன்னைச் சுற்றி கூட்டம் இருப்பதையோ வாழ்க கோஷமிட்டு கொடி பிடிப்பதையோ விரும்பாதவர் அவர். அஜித் அலுவலகத்தில் கூட தேவைக்கு மீறிய ஊழியர்கள் தென்பட மாட்டார்கள். அப்படிப்பட்டவர், ரசிகர்கள் எனும் பெயரில் எல்லை மீறிய செயல்களை சந்திக்க நேர்ந்தபோதுதான் மன்றத்தைக் கலைப்பது என்ற முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வெளியூரிலிருந்து அடிக்கடி அஜித்தை சந்திப்பதற்காக வரும் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள்ளேயே அரசியல் எண்ணத்தை வளர்த்துக்கொண்டார்களாம். ஒருவருக்கொருவர் பெயர் சொல்லி அழைப்பதைத் தவிர்த்து ‘மாவட்டம்’, ‘நகரம்’ என்று தங்களுக்குள்ளேயே பதவி வைத்து அழைத்துக் கொண்டார்களாம். அஜித்தின் நேரடி உதவியாளராக இருப்பவர்களிடம், ‘எனக்கு ஊர்ல நல்ல மவுசு இருக்குங்க. நமக்குதான் பவர் அதிகம்’ என்று பெருமிதமும் கற்பனையும் பொங்க மிதந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போய்த்தான் அவர் ரசிகர் மன்றத்தைக் கலைத்தார்.

கலைத்த மன்றத்தை மீண்டும் திறக்கும் முனைப்பில் இருக்கிறாரா அஜித்? நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தோம்.  ‘‘அஜித் எப்போதும் ஒரு முடிவு எடுப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிப்பார். அப்படி எடுக்கும் முடிவில் கடைசி வரை தெளிவாக இருப்பார். அவர் எடுத்த முடிவு எடுத்ததுதான். அதிலிருந்து பின் வாங்கமாட்டார். வெளியே கசியும் செய்திகளில் துளியும் உண்மையில்லை. மன்றம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கான ரசிகர்கள் நிரந்தமானவர்கள். அவரது ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். மன்றத்தில் இருந்தால்தான் ரசிகர்கள் என்றில்லாமல் எப்போதும் போலவே தன் படங்களை ரசிக்கும் ரசிகர்கள் மீது அஜித் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்’’ என்கிறார் அஜித்தின் நெருங்கிய நண்பர் ஒருவர்.

கௌதம் மேனன் படத்தில் ‘தல’க்கு கெட்டப் சேஞ்ச், 8 பேக் இருக்கா? ‘‘இனி வயதைக் குறைத்தோ, ஸ்டூடன்ட் கேரக்டரிலோ நடிப்பதில்லை என்பதும் அஜித் எடுத்த முடிவுதான். இந்த முடிவிலும் அஜித் உறுதியாக இருக்கிறார். ஹேர் ஸ்டைலில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. 8 பேக்கிலும் வரவில்லை. படத்துக்காக உடம்பைக் குறைக்க தீவிர உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவுதான்’’ என்கின்றனர் படக்குழுவினர்.

- அமலன்