காணாமல் போன கரிசல்காட்டுப் பறவைகள்!



நம் உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும் மாறும்போது, கண்ணுக்குத் தெரியாமல் அவை பறவைகளை அழித்து விடுகின்றன. சின்ன வயதில் நாம் பார்த்த பல பறவைகள் இப்போது இல்லை. அவை எங்கே போயின? ஏன் காணாமல் போயின? 

‘‘ஒரு காலத்துல நூற்றுக்கணக்கான பறவைகள் இந்தக் கரிசல் மண்ணில் சுற்றி திரிஞ்சது. ஆனா, இன்னைக்கு எதையும் பார்க்க முடியல. விளைநிலத்தை அழிச்சு, விவசாயத்துக்கு பாடை கட்டிட்டோம். மழையும் இல்லாம போயிருச்சு. மனுஷன் வாழ்க்க மாறும்போது பறவைகள் வாழ்க்கையும் மாறத்தானே செய்யும்!’’  ஆதங்கத்தோடும் வருத்தத்தோடும் மீசை தடவிப் பேசுகிறார் சோ.தர்மன். கரிசல் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர். ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு நாவல்கள், ஒரு ஆய்வு நூல் என எழுதியிருக்கும் இவர், ‘காணாமல் போன கரிசல் காட்டுப் பறவைகள்’ என்கிற நூலை இப்போது எழுதியிருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் இந்த நூலில், தான் பார்த்த 68 பறவைகளின் முழு விவரணைகளை விளக்கமாகப் பதிவு செய்துள்ளார்.

‘‘முன்னாடி இந்தக் கரிசல் காட்டு பூமியில கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை, வரகு, காடைக்கன்னின்னு நவதானியங்கள் எல்லாத்தையும் பயிர் செய்ஞ்சாங்க. நெற்கதிரும் அருமையா விளையும். விவசாயம் செழிப்பா இருந்த காலம். இதனால, இங்க நிறைய பறவையினங்கள் வாழ்ந்துச்சு. இந்தத் தானியங்களை சாப்பிட அவ்வளவு ஆர்வமா வரும். ஆனா, இப்ப எல்லாம் திசைமாறி போயிருச்சு. சின்ன வயசுல நாம அன்றாடம் பார்த்துப் பார்த்து சந்தோஷப்பட்ட இந்த பறவைகளைப் பதிவு பண்ணணும்னுதான் இந்த நூலை எழுத ஆரம்பிச்சேன். ஒவ்வொரு பறவை பத்தியும் தேடும்போது பல்வேறு அரிய தகவல்கள் கிடைச்சது. அதுக்கு மற்ற ஏரியாவுல என்ன பெயர்? சங்க இலக்கியத்துல இருந்துச்சான்னு பல குறிப்புகள் கூட தெரிஞ்சது. எல்லாத்தையும் தொகுத்திருக்கேன்’’ எனச் சிலாகிக்கிறார் தர்மன்.

தான் பார்த்த பறவைகளை இவர், நீர் வாழ் பறவைகள், நில வாழ் பறவைகள், இருவாழ்விகள், இரவுப் பறவைகள், சீசனுக்கு வரும் பறவைகள் என வகைப்படுத்தியிருக்கிறார். அவை இன்று இருக்கிறதா? இல்லையா? அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன? நம் பண்பாட்டுக்கும் அவற் றுக்கும் உள்ள தொடர்பு என்ன என்றெல்லாம் ஓர் உயிரியலாளர் போல் ஆய்வு செய்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார் இவர்.

‘‘ஒரு குருவி இனத்தைப் படைக்குருவிகள்னு நாங்க சொல்வோம். மேகம் மிதந்து வர்ற மாதிரி இது ஆயிரக்கணக்கில் மொத்தமா வரும். நெல் வயல்ல உக்காந்து கொறிக்கும். விரட்டும்போது அதே மாதிரி மொத்தமா போகும். அதே மாதிரி, நாமக்கோழின்னு பதுங்கி வாழும் அரிய வகை பறவையினம் ஒண்ணு இருந்துச்சு. அதோட நெத்தியில நாமம் மாதிரியே கோடுகள் இருக்கும். கால்கள் நீண்டு, வாத்து மாதிரி சவ்வோட இருக்கும். இது குளத்துல இருக்கிற சம்பு கோரை மேல நடந்தே போகும். இப்படி நீர்ல நடக்கிற பறவையை யாரும் பார்த்திருக்கவே முடியாது. இப்ப அது இந்தப் பகுதியில சுத்தமா இல்லாம போச்சு. அப்பறம், கழுகுகள் இந்தப் பகுதிகள்ல அதிகம். கால்நடைகள் இறந்துட்டா ஒரு ஒதுக்குப்புறத்துல தூக்கிப் போட்டுருவாங்க. அதை சாப்பிட இந்தக் கழுகுகள் அலையும்.

வாலாட்டிக் குருவின்னு ஒரு குருவி. பூமி தன்னைத் தாங்குமா? தாங்காதான்னு சோதனை பண்ண அது எப்பவும் வாலாட்டிக்கிட்டே இருக்குறதா கிராமத்துல கதை கூடச் சொல்வாங்க. அப்பறம் கல்பொறுக்கின்னு ஒரு பறவை. சின்னச் சின்னக் கற்களைப் பொறுக்கி வந்து கூடு கட்டும். ஆட்கள் நடமாடுற இடத்துல கூடு கட்டி முட்டையிட்டா வேற ஜந்துகள் வராதுங்கிற எண்ணத்துல அது மனுஷங்க பக்கத்துலயே அலையும். அடுத்ததா கூகை. ஆந்தையை விட பெரிசா இருக்கும். இதுக்கும் பகல்ல கண் தெரியாது. இரவு நேரத்துல எலி பொந்துகள் பக்கத்துல போய் தன்னோட சிறகை விரிச்சு ஒரு வாடையை வீசச் செய்யும். அந்த வாடைக்கு வெளியே வரும் எலிகளை பிடிச்சுத் தின்னுட்டுப் போகும்.

இப்படி நிறைய பறவைகள் இங்கிருந்து காணாம போயிருச்சு. சீசனுக்கு வரக்கூடிய பறவைகள்ல காசு காட்டி, மாம்பழத்தான்னு வகைகள் உண்டு. அதுகளும் இப்ப வர்றதில்லை. ஏரிகள் சுருங்கியிருச்சு. மழை கிடையாது. முன்னாடி இங்க பெய்யிற மழைக்கு அளவே கிடையாது. ஒரு கட்டத்துல மழை போதும்னு வலியுறுத்துற சடங்கெல்லாம் கரிசல் மண்ல நடக்கும். ஆனா, இன்னைக்கு மழை வேண்டி பூஜைகள் செய்யறாங்க. அதுதான் வர்றதில்லை’’ என்கிறவர், ‘‘இன்னைக்கு கரிசல் காட்டுல மக்காச்சோளம், சூரியகாந்தி, நித்ய கல்யாணின்னு மூன்று பயிர்களை மட்டுமே பயிரிடுறாங்க. இது எதையும் பறவைகள் சாப்பிடாது’’ என்கிறார் வேதனையாக.

‘‘நாம பறவைகளை மட்டுமல்ல... விவசாயத்தையே அழிச்சிட்டோம். இப்ப எல்லாரும் இயற்கை உரம்னு குரல் கொடுக்குறாங்க. முதன்முதல்ல டிராக்டர் வரும்போது, வினோபா பாவே, ‘டிராக்டர் சாணம் போடும்னா அனுமதிக்கலாம்’னு சொன்னாரு. அன்னைக்கு யாரும் கேட்கல. அரசியல்வாதிகளுக்கு விவசாயம் பத்தி தெரிய வேண்டாம். ஆனா, நம்மாழ்வார், நாராயணசாமி நாயுடு மாதிரி விவசாயிகள் சொன்ன விஷயத்தையாவது கேட்டிருக்கலாம். எதையும் செய்யாம விட்டுட்டு, இன்னைக்கு கூப்பாடு போட்டுத் திரிறோம். ஜப்பான்ல ஒரு பழமொழி சொல்வாங்க. ‘இயற்கையை ஜன்னல் வழியா விரட்டுனா, அது தலைவாசல் வழியா வந்து கதவை தட்டும்’னு. இதுதான் இப்ப இங்க நடந்துட்டு இருக்கு’’  ஆதங்கத்தோடு அழுத்தமாக முடிக்கிறார் சோ.தர்மன்.  

கல்பொறுக்கின்னு ஒரு பறவை. சின்னச் சின்னக் கற்களைப் பொறுக்கி வந்து கூடு கட்டும். ஆட்கள் நடமாடுற இடத்துல கூடு கட்டி முட்டையிடும்!

பேராச்சி கண்ணன்
படங்கள்: எஸ்.பி.பாண்டியன்