பட்டறிவு



‘‘சார்... தேங்கா பறிக்கணுமா?’’
‘‘வேணாம்ப்பா..! இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்!’’

‘‘சார்... தேங்கா நல்லா முத்தி இருக்கு! எந்நேரமும் ஒண்ணொண்ணா
உதிரும்!’’‘‘அத நாங்க பார்த்துக்கறோம்... நீ போப்பா!’’  சொல்லி அனுப்பினார் சதாசிவம். உடனே உள்ளிருந்து சதாசிவத்தின் மனைவி வந்தாள்.
‘‘என்னங்க... அந்தத் தென்னை மரம் பின் வீட்டுல நிக்குது. வளைஞ்சு நம்ம வீட்டுக்கு மேல தெரியிறதால தேங்கா பறிக்கிறவங்க எல்லாம் நம்மகிட்டயே வந்து கேக்குறாங்க. உண்மையைச் சொல்லி அந்த ஆளை பின் வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே?’’

‘‘ப்ச்... நீ சும்மா இரு! கொஞ்ச நாளா நாம கடையில தேங்கா வாங்குறதே இல்ல. எல்லாம் அந்த மரத்துல இருந்து உதிருற தேங்காய்தான். அதை ஏன் தடுக்கணும்?’’ என்றார் சதாசிவம்.
அடுத்த வாரம்... தேங்காய் பறிப்பவர் வீதியில் போக, ஓடோடிப் போய் அவரைப் பிடித்தார் சதாசிவம்.‘‘உடனடியா எல்லா தேங்காயையும் பறிக்கணும். பின் வீட்டுக்காரங்ககிட்ட நீயே பேசு!’’ என வந்தவரை அவர் இழுத்துப் போக, தலையில் கட்டோடு வாசலுக்கு வந்து நின்றாள் சதாசிவத்தின் மனைவி. நேற்று தேங்காய் ஒன்று தலையில் விழுந்த காயக்கட்டு அது!றீ

கு.அருணாசலம்