சிறுவர்களின் உலகம்



பேசும் சித்திரங்கள்


சிறுவர்களின் உலகம் என்றுமே தனித்துவம் வாய்ந்தது. சின்னச் சின்ன ஆசைகள், எல்லையற்ற கனவுகளின் வழியே தங்களுக்கென தனி உலகத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். பெரியவர்களின் மாய உலகில் இருக்கும் கோபம், குரோதம், பொறாமை போன்ற கசடுகளை நெருங்கவிடாமல், தங்களின் அற்புத ராஜ்யத்தை நடத்திக்கொண்டிருப்பார்கள்.

 லட்சுமணப் பெருமாளின் ‘கறிநாள்’ சிறுகதை, சிறுவர்களின் உலகத்தை விவரித்திருக்கும் விதமே அலாதியானது. கதையின் மைய கதாபாத்திரமான பஞ்சவர்ணத்தின் வீட்டருகே, புதிதாக ஒரு சிங்கப்பூர்காரர் குடிவருகிறார். அவரது பேத்தியும், பேரனும் தினசரி தங்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவின் ருசியை, சக சிறுவர்களுக்கு உணர்த்துவதில் பெரும் விருப்பம் கொண்டவர்கள். ‘‘எங்கள் வீட்டில் இன்று கறி சமைத்தார்கள்’’, ‘‘மதியம் மீன் வறுத்தார்கள்’’ என்றெல்லாம் சொல்வதோடு மட்டுமின்றி, தங்களின் உள்ளங்கைகளை கூட்டாளிகளின் மூக்கில் வைத்து முகர்ந்து பார்க்கச் சொல்வார்கள்.

எப்போதும் கஞ்சியைத் தவிர வேறெதுவும் கண்டிராத பஞ்சவர்ணத்திற்கு இந்த கவுச்சி ருசியின் மீது வாஞ்சை உருவாகிறது. என்றாவது ஒருநாள் தன் வீட்டு சமையலிலும் இப்படியான வாசனையை முகர்ந்துவிட முடியாதா? என ஏங்குகிறாள். இந்த ஏக்கத்தையும் அதன்பின் நிகழும் சம்பவங்களையும் லட்சுமணப் பெருமாள், குழந்தைகளின் உலகத்திற்கே சென்று எழுத்தில் வடித்திருப்பார்.
பலவிதமான பரிமாணங்கள் கொண்ட குழந்தைகளுக்கான உலகின் நுட்பத்தை, குழந்தையாகவே மாறாமல், பெரியவர்களின் மனநிலையில் இருந்துகொண்டு ஒருபோதும் அறிய இயலாது.
எப்போதும் ரேஷன் கடையிலிருந்து அரிசி வாங்கி சமைக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தின் சிறுவனுக்கு, ஒல்லியாக இருக்கும் பாஸ்மதி அரிசி சாதம் சாப்பிட ஆசை ஏற்பட்டு, அதன் பின்னணியில் நிகழும் சம்பவங்களை விவரிக்கும் ‘ஒல்லி அரிசி’ என்கிற குறும்படமும் சிறுவர்களின் உலகைப் பிரதிபலிக்கும் முக்கியமான படைப்பு. ஆனால் லட்சுமணப் பெருமாளின் சிறுகதையும், ‘ஒல்லி அரிசி’ குறும்படமும் உருவாவதற்கு முன்பே, குழந்தைகளின் அக உலகை மிக நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கின்ற படைப்பு தான் ‘ஆசை’...

சிறுவனாகிய செல்வம், குடும்ப வறுமையின் காரணமாக நகரத்தில் இருக்கின்ற ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து வருகிறான். அம்மாவின் கடிதம் அவ்வப்போது கிடைக்கப் பெற்றாலும், எப்படியாவது அவளுடன் ஒருமுறையாவது தொலைபேசியில் (அலைபேசி காலத்திற்கு முந்தையது இந்தக் குறும்படம்!) பேசி விட வேண்டும் என்பதே அவன் கனவு. கடையில் இருக்கும் தொலைபேசியையோ முதலாளி எப்போதும் பூட்டி வைத்து விடுவார். தவிர, எஸ்.டி.டி பூத்துக்குச் சென்று போன் பேசலாம் என்றால், அங்கு ஐந்து நிமிடங்கள் போனில் பேச இருபத்தைந்து ரூபாய் ஆகும் என்று செல்வத்திற்கு தெரிய வருகிறது.

கடையில் வேலை பார்த்தாலும், அவன் சம்பளம் அவனுக்கானது அல்ல; மாதா மாதம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுகிறது.  வேறு வழியின்றி, தினசரி வாடிக்கையாளர்களின் வீட்டிற்குச் சென்று மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும்போது கிடைக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாயைச் சேகரித்து வைக்கத் தொடங்குகிறான் செல்வம். கொஞ்சம் கொஞ்சமாக இருபத்தி ஐந்து ரூபாயைச் சேர்த்து வைத்து, மகிழ்ச்சியோடு ஊருக்குப் போன் செய்யக் கிளம்புகிறான். தன் அம்மா வேலை செய்யும் இடத்திற்குப் போன் செய்து, ‘‘அம்மாவிடம் பேச வேண்டும், கொஞ்சம் கூப்பிடுங்கள்’’ என்கிறான். போனில் பேசியவர்கள் அம்மாவை அழைத்து வருவதற்குள், ஐந்து நிமிடங்கள் முடிந்துவிடுகின்றன. ‘இத்தனை முயன்றும் அம்மாவுடன் பேச முடியவில்லையே!’ என்கிற ஏக்கத்தோடு கடைக்குத் திரும்புகிறான். கடையில் வேலை பார்க்கும் வேறொரு சிறுவன், ஒரு வாடிக்கையாளர் வீட்டிற்கு மளிகைப் பொருட்களைக் கொண்டு செல்ல தயாராகின்றான். அதற்குள்ளாக, ‘‘முதலாளி... நானே போறேன்’’ என்கிற செல்வத்தின் உற்சாகக் குரலோடு குறும்படம் முடிவடைகிறது.

சிறுவர்களின் சுயக் கழிவிரக்கத்தை பிரதானப்படுத்தாமல், அவர்களின் நம்பிக்கையையே இக்குறும்படத்தின் மையமாக இயக்குனர் ஷாம் பதிவு செய்துள்ளார். ‘‘உங்க அம்மாவுக்கு போன் பண்ண நான் வேணும்னா பணம் தரட்டுமா?’’ என்று எஸ்.டி.டி பூத்தில் வேலை செய்யும் பெண் கேட்கும்போது, அதை மறுத்து விட்டு, ‘‘நானே சேர்த்து வைத்த பணத்தில்தான் அம்மாவோடு பேசுவேன்’’ என்கிற சிறுவனின் பிடிவாதத்தை வசனங்கள் இன்றி காட்சிகளால் உணர்த்தியிருக்கும் இடம் பாராட்டுதலுக்குரியது.

சிறுவர்களுக்கே உரிய பிரச்னையான, நேரம் பார்க்கத் தெரியாமையை இந்தப் படத்தில் கையாண்ட விதமும் அதீத ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. பெரிய முள் எட்டிலிருந்து ஒன்பதுக்கு வருகிற ஐந்து நிமிடங்களுக்குள், அம்மாவிடம் என்னவெல்லாம் பேசவேண்டுமோ, அத்தனையும் பேசிப் பார்த்து வேகத்தை அதிகப்படுத்துவதும், மீண்டும் மீண்டும் பேசி பார்த்துக்கொள்வதும் சினிமாவிற்கே உரிய ஃபேண்டசி தான் என்றாலும், நம்மை ரசிக்க வைக்கிறது.

செல்வம் பணத்திற்காக ஓடியாடி வேலை செய்துகொண்டிருக்கையில், முதலாளியின் மகன் கடையில் தேமேவென உட்கார்ந்துகொண்டு போனில் அரட்டையடிப்பான். உழைப்பவர்களின் வாழ்வும், அவர்களை சுரண்டிப் பிழைப்பவர்களின் சொகுசும் இந்த இடத்தில் இருவிதமான கோணங்களின் வாயிலாக காட்சிப்படுத்தப் படுகின்றது. செல்வத்தின் இருபத்தைந்து ரூபாயின் மதிப்பை, போனில் பேசிக்கொண்டிருப்பவன் ஒருபோதும் உணர்ந்துவிட முடியாது.

திரைப்படக் கல்லூரி மாணவரான சாம், தன்னுடைய இறுதி ஆண்டில் ‘ஆசை’ குறும்படத்தை இயக்கியுள்ளார். சக மாணவர்களுடனான கதை விவாதத்தின்போது, அவரது நண்பரான மனுஷ் நந்தன், தான் நேரில் பார்த்த சம்பவத்தை விவரிக்க, அதையே கொஞ்சம் மெருகேற்றி இந்தக் குறும்படத்தை இயக்கியதாகக் கூறுகிறார். படத்தில் செல்வம் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனை தேர்ந்தெடுத்த விதம்கூட மென் புன்னகையை வரவழைக்கக் கூடியது.

கதாபாத்திர தேர்வு நடந்து கொண்டிருக்கும்போது, மற்ற சிறுவர்கள் பயபக்தியோடு வந்து நின்றிருக்கின்றனர்; இந்த சிறுவன் மட்டும், தூக்கம் கலையாமல் ‘யாருங்க என்னுடைய தூக்கத்தைக் கலைத்தது’ என்பது போன்ற பாவனையோடு வந்து நின்றிருக்கிறான். தவிர, படத்தின் ஆரம்ப கட்டத்தில் பெரிதாக ஒத்துழைக்கவில்லை. ஆனால், கடிகாரத்தை பார்த்துக்கொண்டு, வசனங்களை மனப்பாடம் செய்கின்ற காட்சி படம் பிடிக்கின்றபொழுது மட்டும் மிகுந்த அக்கறையோடு நடித்துக் கொடுத்திருக்கிறான்.

நம்மைச் சுற்றி எத்தனையோ அழகான விஷயங்கள் இருக்கின்றன; நொடிக்கு நொடி நிகழவும் செய்கின்றன. ஆனால், இதையெல்லாம் நாம் தொலைத்துவிட்டு, வேறு எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் ரசிக்க மறந்துவிட்டு,  எந்திர மயமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் சிறுவர்கள் மட்டுமே,  தங்களுடைய அழகான உலகை இறுதிவரை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். அவர்கள் உலகத்தில் சுயக் கழிவிரக்கமோ, நம்பிக்கையின்மையோ ஒருபோதும் எட்டிப்பார்ப்பதே இல்லை.

(சித்திரங்கள் பேசும்...)

படம்: ஆசை
இயக்கம்: சாம்
நேரம்: 10.40 நிமிடங்கள்
ஒளிப்பதிவு: மனுஷ்நந்தன்
இசை: அனில் ழி.சி.
படத்தொகுப்பு: சிவமதி
பார்க்க: www.youtube.com/watch?v=5t7C5D2IyO4

அம்மாவின் கடிதம் அவ்வப்போது வந்தாலும், எப்படியாவது அவளுடன் ஒருமுறையாவது தொலைபேசியில் பேசி விட வேண்டும் என்பதே அவன் கனவு.

‘ஆசை’ குறும்படம் டிஜிட்டல் யுகத்திற்கு முன்பே எடுக்கப்பட்ட படம். ஆதலால் ஃபிலிமில்தான் எடுத்திருக்கிறார்கள். வண்ணங்களும், வார்த்தைகளும் அத்தனை நேர்த்தியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமாக 75 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. நிறைய இடங்களில் பகுதிநேர வேலை செய்து இதற்காக சம்பாதித்திருக்கிறார், இயக்குனர் சாம். அவரது பெற்றோரும், அக்கம்பக்க உறவினர்களும் கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார்கள். மீதியை நண்பர்கள் பார்த்துக் கொள்ள, படத்தை எடுத்து முடித்துள்ளார் சாம்.

பணத்தை திரட்டுவதிலிருந்து, ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை நடத்தி முடிப்பது வரை பட்ட அத்தனை துயரங்களையும் இந்தப் படைப்பு மறக்கடித்திருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, மெல்போர்ன் திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்திற்கான விருதையும் ‘ஆசை’ பெற்றுள்ளது.


தமிழ் ஸ்டுடியோ அருண்