நடைவெளிப் பயணம்



அசோகமித்திரன்

அதென்ன பழைய மாம்பலம்?                
நாங்கள் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் குடியேறி ஒரு வருடத்திற்குள் மூன்று வீடு மாறி விட்டோம். அதில் இரண்டு பழைய மாம்பலத்தில். ‘‘அதென்ன பழைய மாம்பலம்’’ என்று கேட்கக் கூடியவர்கள் இன்று நிறையப் பேர் இருக்கக்கூடும். ஆனால் தமிழ்நாட்டில் இப்படி நிறைய இடங்கள் உண்டு. கடலூர், வண்ணாரப்பேட்டை,
தண்டையார்பேட்டை என நிறைய எடுத்துக்காட்டுகள்.

அந்த நாளில் ரயில் பாதைக்குக் கிழக்கே இருக்கும் குடியிருப்பு புது மாம்பலம் என்றும், மேற்கே இருக்கும் குடியிருப்பு பழைய மாம்பலம் என்றும் அறியப்பட்டது. உண்மையில் பழைய மாம்பலத்தைப் ‘புராதன மாம்பலம்’ என்றும் அழைத்திருக்கலாம். அது சென்னையின் மிகப் பழைய ஏழெட்டுக் குடியிருப்புகளில் ஒன்று.
ஊர் விட்டுக் கிளம்புவதற்கு முன்பு, நான் படித்த பள்ளித் தலைமையாசிரியரிடம் விடைபெறச் சென்றேன். இன்றும் அவர் என் ஆதர்ச ஆசான்.
அவர் என்னைக் கேட்டார்: ‘‘எங்கே வீடு பாத்திருக்கே?’’
‘‘பழைய மாம்பலம்.’’

‘‘ஐயய்யோ, அங்கே ஏம்ப்பா பாத்தே?’’
‘‘ரொம்ப சௌகரியம், சார்.’’
‘‘அங்கே ஒரே யானைக்கால்ப்பா. அங்கே போனவுடனே முதல் காரியமா வேறே வீடு பாரு...’’
‘‘சைதாப்பேட்டை...’’

‘‘ஐயய்யோ, அது இன்னும் மோசம். யானைக்காலோட மலேரியாவும் வந்துடும்.’’
அவர் மணிமங்கலம் முதலியார். ஆழ்ந்த படிப்பு. அந்த நாளில் அமெரிக்கக் கொலம்பியா பல்கலைக்கழகம் அவரை அழைத்து எம்.ஏ. பட்டம் கொடுத்தது. நான் தாகூரையும் ஷேக்ஸ்பியரையும் அவர் மூலம்தான் அறிந்தேன்.

சென்னை வந்தவுடன் நான் பார்த்திருந்த வீட்டுக்கருகில் உள்ளவர்களைப் பார்தேன். அவ்வளவு பேருக்கும் யானைக்கால் அல்லது யானைக்கை. அன்று அந்தப்பகுதியில் ஒழுங்கான தெருக்கள் மிகக்குறைவு. ஏரிக்கரைத் தெரு, பரோடாத் தெரு. (என்ன என்று நினைத்து அந்தத் தெருவுக்குப் பரோடாத் தெரு என்று என்று பேர் வைத்தார்கள்?) ஏரிக்கரைத் தெருவின் தொடக்கத்தில் நிஜமாகவே ஒரு மிகப் பெரிய குட்டை இருந்தது. அப்போது சுரங்கப்பாதை கிடையாது. ரயில் கேட் தாண்டியவுடனேயே இடது அல்லது வலது பக்கம் தாண்ட வேண்டும். இல்லாது போனால் நேரே குட்டையில் விழ வேண்டியதுதான். குட்டையில் பகல் நேரமெல்லாம் எருமை மாடுகள் முங்கிக் கிடக்கும். அந்த இடத்திற்குப் பெயர் சத்தியபுரி! இன்று அது இல்லை.

நான் பார்த்திருந்த வீடு பரோடாத் தெருவில் எண் 13. நான் ஓர் இரவு கூடத் தூங்காமல் இருந்ததற்குக் கொசு, தேள், கீரி, பூரான் மட்டும் காரணமல்ல. மண்ணெண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் இவை கண்ணுக்குத் தெரியாது. கிணற்றுத் தண்ணீர் கலங்கியிருக்கும். குடிக்க, சமையல் செய்யவென எங்கிருந்தோ என் அம்மாவும் அக்காவும் படாதபாடு பட்டு இரு குடங்கள் தெளிவான தண்ணீர் எடுத்து வருவார்கள். இதெல்லாம் தெரிந்தால் என் பிரின்சிபால், ‘‘சென்னையும் வேண்டாம், மன்னையும் வேண்டாம், இங்கேயே கிட’’ என்று சொல்லியிருப்பார். அவருக்கு அந்த உரிமை உண்டு.

மூன்றே மாதங்களில் வேறிடம் பார்த்து மாறி விட்டோம். அதுவும் பரோடாத் தெருதான். ஆனால் மின்சாரம் உண்டு. நல்ல கிணறு உண்டு. முப்பத்தைந்து ரூபாய் வாடகை. முன்னூறு ரூபாய் முன்பணம். மாதம் இருபது ரூபாய் கழித்துக்கொள்ளலாம். ஒரு மாதம் கழித்து வாடகை கொடுக்க சௌகார்பேட்டையில் தேவராஜ முதலித் தெருவில் இருந்த கண்ணாடிக் கடைக்குப் போனேன். வீட்டுக்காரர் சிரித்துக்கொண்டே, ‘‘ஏம்ப்பா, இதைக் கொடுக்கறதுக்கா நீ பத்து மைல் சைக்கிள் ஓட்டிண்டு வந்திருக்கே? நாலு மாசத்துக்கு ஒரு வாட்டி வந்தாப் போதுமே?’’ என்றார். ஆனால் நான் மாதா மாதம் போய்ப் பதினைந்து ரூபாய் கொடுத்துவிட்டு வருவேன்.

திடீரென்று ஒரு நாள், ‘‘பையா... நீ அந்த வீட்டை வாங்கிக்கோயேன். உனக்கு மூவாயிரம் ரூபாய்க்குத் தர்றேன்’’ என்றார். என் அம்மா, ‘‘முன்னூறு ரூபாய்க்குக் கொடுத்தாலும் வேண்டாம்’’ என்றார். ஆனால் இன்று மத்திய தர மக்களுக்கு நகரத்தின் நடுவில் மேற்கு மாம்பலம் என்றாகிவிட்ட பழைய மாம்பலம் போல ஓர் இடம் கிடைக்காது. இன்று ஏரி இல்லை. ஏரிக்கரைத் தெரு இருக்கிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் இல்லாது போனாலும், இருப்பவை வீதிகளில் நேர்த்தியாக இருக்கும்.

மிக எளிய செலவில் உயர்ந்த மருத்துவம் கிடைக்க ‘பப்ளிக் ஹெல்த் சென்டர்’ இருக்கிறது. நகர வாழ்க்கையின் எல்லா சௌகரியங்களும் வந்து விட்டன. இதற்கெல்லாம் இரு காரணங்கள்... ஒன்று, வீட்டு வசதி வாரியம் அசோக் நகர், கே.கே நகர் திட்டங்கள் கொண்டு வந்தபோது நடுவில் இருக்கும் மேற்கு மாம்பலத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது. இன்னொரு மிக முக்கிய காரணம், ஒரு தனி மனிதனின் முயற்சி.

அந்த மனிதர் பெயர் எம்.சி.சுப்பிரமணியன். பிரிட்டிஷ் அரசு காலத்தில் ஏராளமான இளைஞர்கள், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகே மண வாழ்க்கை’ என்ற உறுதி பூண்டார்கள். எம்.சி. அந்த இளைஞர்களில் ஒருவர். நாடு சுதந்திரம் அடைந்தபோது எம்.சி. வயது நாற்பதுக்கும் மேலாகிவிட்டது. மருத்துவரே இல்லாத மேற்கு மாம்பலத்தில் அவர் தினம் ஒரு மணி நேரம் வந்து போக ஒரு லட்சியவாதியான எம்.பி .பி.எஸ்ஸை ஏற்பாடு செய்தார். ஒரு மணி நேரம் என்பது பிறகு மூன்று மணி நேரமாயிற்று. அப்புறம் வாரம் ஒரு முறை சென்னையின் பெரிய பெரிய வைத்திய நிபுணர்கள் வரத் தொடங்கினார்கள். சாதாரண ரத்தப் பரிசோதனையில் தொடங்கி இன்று பெரிய அறுவை சிகிச்சை வரை செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. என் கண்ணெதிரே மேற்கு மாம்பலத்தில் குறைந்த செலவில் மருத்துவம் செய்து கொள்ள ஒரு பெரிய ஆஸ்பத்திரி உருவாயிற்று.

எம்.சி. மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறு வீட்டின் ஒரு பகுதியில் இருந்தார். தான் வாழ்ந்த இடத்தை மக்கள் வாழக்கூடிய இடமாக மாற்ற வேண்டும். இதுதான் அவர் மதம். பல ஆங்கிலப் பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். சென்னையில் சில ஆண்டுகள் ‘இந்தியன் ரெவ்யூ’ என்ற மாதப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். அப்போது ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலை மொழிபெயர்த்துத் தொடர்கதையாக வெளியிட்டார்.

இன்று ஆஸ்பத்திரி என்பது ஓர் வாணிபச் சாதனம். ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் அதைக் கலப்பட
மற்ற தொண்டாகச் செய்யலாம் என்பதை எம்.சி. நிரூபித்துக் காட்டினார். கடைசி வரை கதர் உடுத்தி முதிர்ந்த வயதில் தொண்டனாகவே உயிரைத் துறந்தார். என் அனுமானம், அவருடைய புகைப்படம் கூடக் கிடையாது. அவரைப் பார்த்து நானும் பல ஆண்டுகள் கதரே அணிந்தேன்.

இன்று மத்திய தர மக்களுக்கு நகரத்தின் நடுவில் மேற்கு மாம்பலம் என்றாகிவிட்ட பழைய மாம்பலம் போல ஓர் இடம் கிடைக்காது. இன்று ஏரி இல்லை. ஏரிக்கரைத் தெரு இருக்கிறது.

படிக்க...

எழுத்தாளர்களை நகைப்புக்கு இடமானவர்களாகச் சித்தரிக்கும் போக்கிலிருந்து தப்பிய எழுத்தாளர்கள் மிகக் குறைவு. பல அரிய சிறுகதைகளும் நாவல்களும் எழுதிய விட்டல் ராவ் ‘மூலவரும் உற்சவரும்’ என்றொரு நாவலை எழுதியிருக்கிறார். அம்ருதா வெளியீடு. முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா பற்றி ஒரு நாடகம் எழுத மாட்டார். ஆதித்ய பிர்லா, சுப்ரதோ ராய் பற்றிக் கவிதை எழுதமாட்டார். ஆனால் எழுத்தாளர்கள் அப்படி இல்லை. என் நினைவுக்குத் தெரிந்து இந்த வகையில் இரண்டே நூல்கள் காலத்தைக் கடந்தவை. ஒன்று, சாமர்சட் மாம் எழுதிய ‘கேக்ஸ் அண்ட் ஏல்.’ இரண்டாவது, சால் பெல்லோ எழுதிய ‘ஹம்போல்ட்ஸ் கிஃப்ட்’.

(பாதை நீளும்...)