e கடை



திருமணப் பதிவுக்கு உதவும் இணையதளம்

டிரஸ், ரிசப்ஷன், பாட்டுக் கச்சேரி, தாம்பூலப் பை, விருந்து, உபசரிப்பு
என எல்லாம் பார்த்துப் பார்த்து திருமணம் செய்யும் பலருக்கும், அந்தத் திருமணத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்கிற விஷயம்
தெரிவதில்லை. அதற்கு உதவும் இணையதளம் இது!

திருமணப்பதிவுக்கு ஒவ்வொரு பதிவாளர் அலுவலகத்திலும் ஒவ்வொரு ரூல்ஸ் சொல்றாங்க. எல்லா டாகுமென்ட்டு களையும் சேகரிச்சு, சாட்சிகளை அழைச்சுக்கிட்டுப் போய் பதிவு பண்ணி சான்றிதழ் வாங்குறது சவாலான வேலை. அதை எளிமையாக்குற நோக்கத்துல தொடங்கப்பட்டதுதான் www.register marriage.in  ’’  மென்மையாகப் பேசுகிறார் வழக்கறிஞர்
அமீர் பாஷா.

ரேஷன் கார்டு முதல் பாஸ்போர்ட் வரை எல்லாவற்றுக்கும் திருமணப் பதிவு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு விட்டது. ஆனாலும் மக்களிடம் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லை. தமிழகத்தில் வெறும் 25% பேர் மட்டுமே தங்கள் திருமணத்தைப் பதிவு செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்தை தகுந்த நேரத்தில் பதிவு செய்யாததால் பென்ஷன் போன்ற பலன்களையும், சில அரசு நலத்திட்டங்களையும் பெற முடியாமல் தவிப்பவர்கள் பலர். அண்மைக்காலத்தில் மண முறிவுகள் அதிகரித்து வரும் நிலையில் திருமணப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. 

ஆனால், திருமணத்தைப் பதிவு செய்ய விரும்புபவர்கள் கூட பதிவாளர் அலுவலகங்கள் தரும் கசப்பான அனுபவங்களால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார்கள். மதுரை, கோரிப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீர்பாஷா தொடங்கியுள்ள registermarriage.in  இந்த வேலையை சுலபமாக்கியிருக்கிறது. அது மட்டுமல்ல... காதலித்துத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த இணையதளம் ஏந்தலாக இருக்கிறது. உரிய ஆவணங்களை அனுப்பினால், சட்டபூர்வமாக சாட்சிகள் முன்னிலையில் திருமணம் செய்வித்து, திருமணப் பதிவையும் முடித்துத் தருகிறார்கள்.

‘‘2009ல ‘கம்பல்சரி மேரேஜ் ஆக்ட்’ கொண்டு வரப்பட்ட பிறகு திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கு. ஆனாலும் இந்த நடைமுறை பல பேருக்குத் தெரியல. ஒவ்வொரு பதிவாளர் அலுவலகத்திலயும் திருமணப் பதிவுக்கு வெவ்வேறு நடைமுறை இருக்கும். பொதுவா வயதுச்சான்று, முகவரிச்சான்று, திருமணப் பத்திரிகை, போட்டோக்கள், 2 சாட்சிகள் தேவை. ஆனா சில பதிவாளர் அலுவலகங்கள்ல வி.ஏ.ஓகிட்ட ‘சிங்கிள் ஸ்டேட்டஸ் சர்டிபிகேட்’ (இன்னும் திருமணமாகவில்லை என்பதற்கான சான்றிதழ்) வாங்கிட்டு வரச் சொல்லுவாங்க. கோயில்ல திருமணம் நடந்ததுன்னு சொன்னா, கோயில் ரசீது கேப்பாங்க. பதிவுத் திருமணம் பண்ணிக்க வர்றவங்களுக்கு இன்னும் சிக்கல்.  நோட்டீஸ் போட்டு ஒரு மாதம் கழிச்சுதான் திருமணம் பண்ணிக்க முடியும்.. 
 
என் மனைவியோட தோழிக்கும் இப்படி ஒரு அனுபவம்... அவங்க கணவர் வெளிநாட்டுல இருந்தார். மனைவியையும் அங்கே அழைக்க முயற்சி செஞ்சப்போ, திருமண சான்றிதழ் தேவைப்பட்டிருக்கு. அதுக்காக அவங்க அலைஞ்ச அலைச்சலைப் பத்தி சொன்னபோதுதான் இதை எளிமைப்படுத்துற மாதிரி ஒரு ஏற்பாட்டை செய்யத் தோணுச்சு.

பதிவாளர் அலுவலக நடைமுறைகள் ரொம்பவே எளிமையானவைதான். ஆவண சேகரிப்பு, விண்ணப்பம் தயாரிக்கிறதுன்னு முன்கட்ட வேலைகள்தான் அலைச்சலுக்குக் காரணம். கொஞ்சம் சட்டப்புரிதலோட, எல்லா ஆவணங்களையும் சரியா வச்சுக்கிட்டு அலுவலகத்துக்குப் போனா, அரை மணி நேரத்துல பதிவை முடிச்சிடலாம். இதுக்கு ஆன்லைனை பயன்படுத்தலாமேன்னு தோணுச்சு. ‘முயற்சி செய்வோம்... சக்சஸ் ஆனா தொடர்ந்து செய்யலாம்.

இல்லேன்னா அதை அனுபவமா எடுத்துக்கிட்டு இருக்கிற வேலையைச் செய்வோம்’னு முடிவு பண்ணி இணையதளத்தை வடிவமைச்சேன். சில நாட்கள்லயே அமெரிக்காவிலிருந்து ஒரு விண்ணப்பம். ‘என் மனைவிக்கு பாஸ்போர்ட் எடுக்கப் போகும்போது திருமணப் பதிவுச் சான்றிதழ் கேட்கறாங்க. அடுத்த வாரம் சென்னை வர்றேன். பதிவுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா?’ன்னு கேட்டார். ஒரே நாள்ல பதிவை முடிச்சு சான்றிதழ் வாங்கிக் கொடுத்தோம். ஆரம்பிச்சு 2 வருடமாச்சு. 600 பேருக்கு சான்றிதழ் வாங்கிக் கொடுத்திருக்கோம். இப்போ ஒரு நாளைக்கு குறைஞ்சது 2 விண்ணப்பங்களாவது வந்துக்கிட்டிருக்கு...’’ என்கிறார் அமீர் பாட்ஷா.

இப்போது சென்னைக்குள் மட்டுமே சேவையாற்றுகிறது registermarriage.in இணையத்தில் உள்ள விண்ணப்பத்தில் மணமக்கள் பற்றிய விபரங்களைப் பூர்த்தி செய்து, பதிவாளர் அலுவலகம் செல்வதற்கு நமக்கு வசதியான ஒருநாளை (அலுவலக வேலை நாள்) குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். என்னென்ன ஆவணங்கள் தேவை, எந்த நேரத்தில் அலுவலகம் வரவேண்டும் உள்ளிட்ட தகவல்களை இமெயிலில் அனுப்புவார்கள். அனைத்தையும் தயார் செய்து கொண்டு குறிப்பிட்ட பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்றால், registermarriage.in. பிரதிநிதி உங்களை அழைத்துச் சென்று பதிவு செய்ய உதவுவார். அடுத்த 24 மணி நேரத்தில், உங்கள் வீடு தேடி பதிவுச் சான்றிதழ் வந்து விடும்.

‘‘நாங்க பதிவு செஞ்சதுல 70% காதல் திருமணங்கள்தான். அதேநேரம், சின்னப் பசங்க, பொருத்தமில்லாத ஜோடிகள், சந்தேகத்துக்கு உரியவங்களா இருந்தா திருப்பி அனுப்பிடுவோம்’’ என்கிற அமீர், காதல் திருமணங்கள் செய்து வைப்பதால் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஒரு பெண் இணையதளத்துல அப்ளை பண்ணியிருந்தாங்க. திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சோம். வீட்டை விட்டுக் கிளம்பும்போது என் மொபைல் நம்பரை எழுதி வச்சுட்டு வந்திட்டாங்க. திருமணம் முடிச்சு அனுப்பின பிறகு, அந்தப் பகுதி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து போன் வருது. ‘பெண்ணைக் காணோம். உங்க நம்பரை எழுதி வச்சிருக்கு... அந்தப் பெண்ணுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்’னு விசாரிக்கறாங்க.

அவங்க திருமணம் பண்ணிக்கிட்ட செய்தியைச் சொல்லி, குறிப்பிட்ட அலுவலகத்துக்குப் போய் பதிவுச் சான்றிதழை எடுத்துக்குங்கன்னு சொன்னேன். அண்மையில 75 வயசு பெரியவர் ஒருத்தர் அப்ளை பண்ணியிருந்தார். அரசுத்துறையில இருந்தவர். மனைவி இறந்துட்டாங்க. 50 வயசு பெண் மேல காதல். அவங்களுக்கும் சட்டபூர்வமா பதிவுத்திருமணம் செஞ்சு வச்சோம்’’ என்று சிரிக்கிறார் அமீர். டெக்னாலஜியைத் தவிர்த்து விட்டு இனி எந்தத் துறையும் இயங்க முடியாது. திருமணத்தை தகுந்த நேரத்தில் பதிவு செய்யாததால் பென்ஷன் போன்ற பலன்களையும், சில அரசு நலத்திட்டங்களையும் பெற முடியாமல் தவிப்பவர்கள் பலர்.

படங்கள்: ஆர்.சந்திரசேகர்