ரஜினியின் முதல் நாயகி!



‘‘முப்பது வருஷங்களுக்கு முந்தைய நினைவுகளில் மூழ்கடிக்கும் இந்த புகைப்படம், மேட்டுப்பாளையத்தில் ‘பைரவி’ படப்பிடிப்பின்போது எடுத்தது. தொப்பி போட்டிருப்பவர் கதாசிரியர் கலைஞானத்தின் உதவியாளர் பனசை மணியன்!’’ என அந்தப் படம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ஸ்ரீப்ரியா.


‘பைரவி’ படத்துக்கு சில சிறப்புகள் உண்டு. வில்லனாக நடித்துக்கொண்டிருந்த ரஜினி கதாநாயகனாகவும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த ஸ்ரீகாந்த் வில்லனாகவும் நடித்த படம். இந்தப் படத்தில்தான் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது. ரஜினி ஹீரோவாக அறிமுகமான முதல் படத்தின் நாயகி நான்தான் என்பதும் ஒரு சிறப்பு. ஷூட்டிங் ஸ்பாட்டில் நான் ரொம்ப சுறுசுறு. எல்லோரையும் கலாட்டா பண்ணிக்கொண்டிருப்பேன். ஆனால், கேமரா முன்னால் வந்துவிட்டால் சைலன்ட்.

ரஜினி சாரும் ஜாலியான ஆள்தான். ஆனால், ஒரு காட்சி யில் நடிப்பதற்கு முன் அந்த கதாபாத்திரத்தை மனதில் நிறுத்தி கேரக்டரில் மூழ்கிடுவார். என்னிடம் சிரிப்பும் ஜாலி பேச்சும் ஓயாது. அதைப் பார்த்துட்டு, ‘என்ன நீங்க... சிரிச்சுக்கிட்டே இருக்கீங்க. கவனமா இருக்க வேண்டாமா?’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஆனால், இப்படிச் சொன்ன ரஜினியே என்னை கலாட்டாவும் செய்திருக்கிறார்.

‘பைரவி’யில் என்னை வைத்தே ஒரு பாடல் எழுதினார்கள். அதில் என் கன்னத்தில் குழி விழுவதையெல்லாம் சித்தரித்திருந்தார்கள். ‘கட்டப்புள்ள குட்டப்புள்ள கருகமணி போட்ட புள்ள... கன்னம் குழி விழுந்த செல்லம்மா...’ என்ற பாடலின் வரிகளை சொல்லிச் சொல்லி ரஜினி சார் கிண்டலடித்ததை மறக்கவே முடியாது. ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார், இன்னொரு பக்கம் உலக நாயகன் என இரு இமயங்களுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்துவிட்டேன். நான் இயக்குனராகவும் ஆன பிறகு, ‘ரஜினி, கமலை வச்சு நீங்கள் ஏன் படம் எடுக்கக்கூடாது’ என்பார்கள். அது நடக்குமோ நடக்காதோ... அது பற்றி நான் நினைத்ததே இல்லை.

அவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பள்ளிக்கூட நாட்களில் கிடைத்த நட்பு போலவே எங்களுக்குள் ஓர் அன்யோன்யமான நட்பு இன்றும் தொடர்கிறது. எனக்கு ஏதாவது பிரச்னை என்றால் இப்போதும் உடனிருந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். இந்த இரு துருவங்களின் சினிமா வரலாற்றை நான் இல்லாமல் எழுத முடியாது. எனக்குக் கிடைத்த மிகப்பெரும் பெருமையாகவே இதை நினைக்
கிறேன்!’’

அமலன்
படம் உதவி: ஞானம்