பெண்களை கிண்டல் செய்கிற படங்களைப் பார்ப்பதில்லை!



(தொடரும்...)

பளீர் பிரகாஷ்ராஜ்

தமிழ் சினிமாவின் தனிக்குரல் பிரகாஷ்ராஜ். ‘உன் சமையலறையில்’ முடித்து விட்டு புன்னகையும், நிதானமுமாக நிற்கிறார். எப்போதும் போல் இனிமையாகப் பேசுகிறார். பேட்டி என்கிற வார்த்தை, ‘செல்லம்’ பிரகாஷ்ராஜுக்கு எப்போதுமே பொருந்தாது. அருமையும், அழகுமாய் பொங்குகிற பிரவாகம்! ‘‘என் வரையில், ‘உன் சமையலறையில்’ ஒரு புது அனுபவம். மூணு மொழியும் என் கையிலிருந்த காரணத்தால், யுனிவர்சல் கதையாக இருந்தால் நல்லாயிருக்கும்னு நினைச்சேன். டப்பிங் மாதிரியில்லாமல், அசலா அந்தந்த மொழி நடிகர்களைப் போட்டு ஒரே படத்தை எடுத்திருப்பாங்களா... தெரியலை.

புது முயற்சி. ‘சால்ட் அண்ட் பெப்பர்’னு மலையாளத்தில் வந்த கதை. காதலும், பசியும் மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள்னு சொல்ல வரும். உணவோட பின்னணியில் ஒரு காதல் கதை. ‘மனிதனுக்கு துணை எதற்குத் தேவை, துணை இல்லாமலேயே வாழ்ந்திட முடியும்’னு நினைச்ச இரண்டு பேர், அது இல்லாமல் வாழ முடியாதுன்னு முடிவுக்கு வருவாங்க. தமிழில் இன்னும் பிரமாதமா ரசிக்க முடியும்னு தோன்றியது. அதுதான் உடனே எடுத்து முடிச்சிட்டு  உங்ககிட்டே நிற்கிறேன்!’’

‘‘மறுபடியும் டைரக்ஷன் ஏன்? நடிக்கவே உங்களுக்கு நேரம் போதாமல் இருக்கே..?’’ ‘‘நடிப்பு ஒரு பக்கம்தான் இருக்கே. அனுபவமும் சேர்ந்துக்கிட்டு இருக்கு. ‘நீ நல்லா நடிக்கிறே’ன்னு சொல்றதை மட்டுமே எத்தனை நாள் கேட்டுக்கிட்டே இருக்கிறது? ஒவ்வொரு நாள் காலையிலும் எழுந்திருச்சுப் பார்த்தா, இன்னொருத்தர் கனவுக்கே வடிவம் கொடுத்திட்டு இருக்கோம்.

எனக்கு நானே நேரம் தர முடியாத சூழ்நிலை வந்தது. இயக்கும்போது நான் படிக்க, தேட, சிந்திக்க முடியுது. இதுவரைக்கும் கத்துக்கிட்டதை மறந்து மீண்டும் கத்துக்க முடியுது. கேரக்டருக்காக டயலாக் யோசிக்கிறதும், பல மொழி சார்ந்த நடிகர்களோடு பேசுவதும் நல்லாயிருக்கு. நான் நடிகன் என்பதை மறந்து சொல்லிக்கொடுக்கப் போய், அதிலும் கத்துக்கிறேன். ஊர்வசி, தம்பி ராமையா மாதிரி நடிகர்களோடு வேலை பார்க்கிறது இன்னும் சந்தோஷம்.

மேலும், அடக்கமுள்ளவனா என்னை ஆக்கியிருக்கு. பல மொழிகளின் கலாசாரம் எனக்குப் புரிஞ்சுருக்கு. தமிழில் பழநிபாரதி, கன்னடத்தில் ஜெயந்த் கெய்கனி, தெலுங்கில் சந்திரபோஸ்னு மூணு கவிஞர்களோடு என்னுடைய பயணம். ஒரே விஷயத்தை மூன்று கவிஞர்கள் வேற வேற மாதிரி யோசிக்கிறதே அழகு. இதுவரைக்கும் படிச்சதை, புரிஞ்சிக்கிட்டதை, அனுபவங்களோடு பயன்படுத்திப் பார்க்க வாய்ப்பு வந்திருக்கு. சின்னக் குழந்தை மாதிரி சந்தோஷமா இருக்கேன்...’’

‘‘கல்யாணத்துக்குப் பின்னாடி சினேகா நடிச்சிருக்காங்களே...’’‘‘இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை ‘டூயட் மூவீஸ்’க்கு கேட்டிருக்கேன். நியாயமான காரணங்களால் அவங்களால நடிக்க முடியலை. புன்னகை அரசி, அழகின்னு சொல்வாங்க. அந்த முகத்துல வலி கூட அவ்வளவு அழகா இருக்கு. இதுவரைக்கும் சினேகா நடிச்ச படங்கள் வேற, அவ்வளவு படங்களின் அனுபவங்களும் சேர்ந்து இந்தப் படத்தில் சினேகா வேறு பாணி. கல்யாணத்திற்குப் பின்னாடி ஒரு வேகத்தோடு வந்திருக்காங்க. அதற்கான சுதந்திரத்தை படத்தில் நான் கொடுத்தேன். ‘இந்தப் படத்தில் நான் அழகா இருக்கேன்ல’ என அவங்களே சொன்னாங்க. தேஜஸ்னு ஹைதராபாத் பையன், சம்யுக்தா என என் நண்பனின் மகளை அறிமுகப்படுத்துறேன். ஆறே மாதம்... மூணு மொழியும் கத்துக்கிட்டு நடிச்சாங்க...’’

‘‘கொடூரமான வில்லனாக் கூட நடிக்கிறீங்க. ஆனால், உங்க அக்கறை எப்பவும் நல்ல சினிமா சார்ந்தே இருக்கு... அதற்காக கையை சுட்டு இருக்கீங்க...’’‘‘எனக்கு சினிமாங்கிறது வாழ்க்கை. வாழறதை எப்படி நிறுத்த..? அது என்னுடைய அடையாளம். என்னுடைய சில படங்கள் மக்களுக்கு சேராமல் போயிருக்கலாம். அது தோற்றுப்போனதற்கான அர்த்தமில்லை. கொஞ்சம் பணம் கைவிட்டுப் போயிருக்கலாம். படத்திற்காக செலவழித்த நேரங்கள் அர்த்தமுள்ளதா ஆகியிருக்கு. நிம்மதி, மரியாதை கிடைச்சிருக்கு.

நான் ஆபாசமா படம் எடுத்து யாரும் என்னை திட்டினதில்லை. முட்டாள்தனமா ஒரு படமும் எடுத்ததில்லை. ‘அய்யோ பாவம், பிரகாஷ்ராஜ் படம் நல்லா இருந்தும் ஏன் ஓடலை’ன்னு மக்கள்கிட்டே ஆதங்கம் இருக்கு. என்னை ‘பிழைக்கத் தெரியாதவன்’னு எப்படியாவது பிழைக்கத் தெரிஞ்சவன் சொல்றான். எப்படியாவது பிழைக்கிறது என் பிழைப்பு இல்லை. அப்படி கரை சேர்றது எனக்குப் பிடிக்காது. காலத்தைக் கடந்து நின்னவங்க எல்லாரும் நம்பிக்கையா, நேர்மையா, ரசனையோடு தீவிரமா வாழ்ந்ததால்தான் நினைவில் நிற்கிறாங்க!’’
‘‘இளையராஜாவோட பாடல்கள் மறுபடியும் செழித்து அழகாயிருக்கு...’’

‘‘யாரையும் இம்ப்ரஸ் பண்ண வேண்டிய மனநிலையில் அவர் இல்லை. ‘ஐயா, எனக்கு பெரிய டைரக்டர், சின்ன டைரக்டர்னு எதுவும் கிடையாது நீ என்னை நம்புறே. அதனால் உனக்கு வேண்டியது கிடைக்குது. இசையே தெரியாதுன்னு வந்தால் எதையாவது கொடுக்க முடியும். ரொம்ப தெரிஞ்சுக்கிட்டேன்னு வந்தால் எப்படித் தர்றது?’ன்னு அழகா சொல்லுவார். யாரோ ஒருத்தர் என்கிட்ட ‘உங்களோட வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்ததுன்னு இளையராஜாகிட்டே கேட்கணும்’னு சொன்னாங்க. நான்தான், ‘அறிவிருக்கா உனக்கு’ன்னு சொன்னேன். இளையராஜா ஒரு ஜீவநதி. அது இருக்கிற இடத்தில்தான் இருக்கும். நமக்கு அதிகபட்சம் இரண்டு கையால் மட்டுமே அள்ள முடியும். அதுகூட இடுக்கில் பாதி வெளியே வந்திரும். லட்சக்கணக்கான மக்கள் அவர் இசையில் நிம்மதி பெற்ற வரலாறு இருக்கு.’’

‘‘இப்ப காமெடிப் படங்கள்தான் ஓடுது... பெண்களை சகட்டுமேனிக்கு கிண்டல் பண்றாங்க...’’‘‘நான் அது மாதிரி படங்களை பார்க்கிறதில்லை, ரசிக்கிறதில்லை, எடுக்கிறதும் இல்லை. அவங்க கேலி பண்றதை சகிக்க முடியலை. அதான் சொன்னேனே... எப்படியாவது பிழைக்கிறவங்க பிழைச்சிட்டுப் போகட்டும். நான் அவங்களோடு சம்பந்தப்படுவது இல்லை. ரிலீசாகிற படங்களை பார்க்கிறதில்லையான்னு கேட்டாங்க. அதை ரசிக்கப் போறதில்லை, எடுக்கப் போறதில்லை, அப்புறம் ஏன் பார்க்கணும்? ‘பத்து பேர் சொல்லட்டும், பார்க்கலாம்’னு விட்ருவேன். பெண்களோட தோலா, சதையா அழகு... மனசல்லவா அழகு!’’

‘‘இப்போ புதுசா நிறைய வந்திருக்காங்களே... கவனிக்கிறீங்களா?’’‘‘சில டைரக்டர்களும், நடிகர்களும் புதுசா வந்ததில் கவர்கிறார்கள். பெயர் சொல்ல யோசிக்கிறேன். யாரும் ரெண்டு படங்களோட காணாமல் போவதையும் தொலைந்து போவதையும் நான் விரும்புவதில்லை. நின்னு பார்த்து அதிசயப்படும்போது திசை தவறிப் போய் விடாமல் இருக்கணும். அப்புறம் கொஞ்ச காலம் கழிச்சு சொல்றது நல்லாயிருக்கும்!’’

 நா.கதிர்வேலன்