நான் சிகப்பு மனிதன்



நார்கோலெப்சியில் தவிப்பவர் விஷால். காதலி லட்சுமி மேனனை தவிக்க தவிக்க உடல் சிதைத்தவர்களை, அடையாளம் கண்டு பிடித்து கூறு போடுகிற கதைதான் ‘நான் சிகப்பு மனிதன்’! படத்தை விட அதிகம் பேசப்பட்ட விஷால்  லட்சுமி முத்தத்தைக்கூட அவரின் வேறு வகைப்பட்ட நடிப்பிற்காக கொடுத்ததாக பாஸிட்டிவ்வாக எடுத்துக்கொள்வோம்.

முந்தைய வகை வெறுப்பு, கடுப்பு, பாய்ச்சல் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டது விஷாலின் நல்ல முடிவு. ‘பழி வாங்கும் கதை’ என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாதபடி விஷால் உழைத்திருப்பது படத்திற்கு பெரும் பலம். சமீபகாலமாக வேறு வடிவமெடுக்கவும், ஒரு சிறந்த நடிகராகவும் தனியே தெரிய முனைந்திருப்பது இதிலும் தொடர்கிறது. ஆக்ஷன் படம் என்றாலும், காரண காரியங்களை நிறுவியிருப்பதும், அதையே தொடர்ந்திருப்பதும் அழகு.

நார்கோலெப்சியின் அறிமுகமும், அது படுத்துகிற பாட்டையும் விஷால் காட்டியிருப்பது அவரது நடிப்பு அத்தியாயங்களில் ரொம்பவும் புதுசு. துக்கமோ, கோபமோ, துயரமோ, சப்தமோ உடனே துவண்டு தூங்கிவிடும் அழகில் அசல் நோயாளிக்கு இவரே அடையாளம் ஆகிறார். நெடிய உயரத்திலிருந்து அப்படியே துவண்டு சாயும்போது நமக்கு நிஜமாகவே வயிற்றில் பயம் புரட்டுகிறது. சும்மா பேச்சில் மட்டும் அதைச் சொல்லிவிடாமல், நம்மையும் உணரச் செய்வது ப்ளஸ். கடினமாக உழைத்திருக்கிற டைரக்டர் திருவுக்கு பாராட்டு.

இவ்வளவு சிக்கல்கள் கொண்ட விஷாலை காதலித்து மணக்கத் துடிக்கும் லட்சுமி மேனன், செம க்யூட். ஆனால், அந்தப் பெண்ணை இடைவெளிக்கு முன் வில்லன்கள் பாடுபடுத்துவதை விலாவாரியாக எடுத்திருக்க வேண்டுமா? விஷால்லட்சுமி மேனன் நெருக்கத்தைப் பார்க்கிறபோது, வெளியே பேசிக்கொள்வது உண்மையோ என நினைக்கத் தோன்றுகிறது. அண்டர்வாட்டர் காதல் காட்சியில் பாடலைப் பொருட்படுத்தாமல் நிச்சயம் ரசிக்கலாம். கோபப்படும்போதும், கயவர்களிடம் சிக்கித் தவிக்கும்போதும், காதலில் உருகும்போதும் வேறு வேறான உணர்ச்சிகளை வீசி அசத்துகிறார் லட்சுமி. விஷால் எழுதி வைத்த ஆசைகளை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவது ரசனை அத்தியாயங்கள்.

படம் முழுக்க சிரிசிரி மேளா நடத்துவது ஜெகன். விஷால் கூடவே இருந்துகொண்டு புலம்புவது சிரிப்பு ரகம். நண்பராக வரும் சுந்தர் ராமு கொடுத்திருப்பது அசத்தல் நடிப்பு. எந்த பிளானும் இல்லாமல், சர்வ சாதாரணமாக ஹீரோ திடீரென என்ட்ரி ஆகிற ஆச்சரியம் இந்தப் படத்தில்தான் நடக்கிறது. டைரக்டர் ஒவ்வொரு சீன் முடிவிலும் மெனக்கெடுவது நன்றாகத் தெரிகிறது. பாடல்களுக்கு அவசியமே இல்லாத படம். அதனாலோ என்னவோ, ஜி.வி.பிரகாஷ்குமார் கவனத்திற்கு உள்ளாகவில்லை.

ஆனாலும், பின்னணியில் உயிர்ப் பயம் காட்டுகிறார். இனியாவின் கேரக்டர் கலாசார அதிர்ச்சி போலத் தோன்றினாலும், இன்றைய உலகம் புரிபடுகிறது. கஷ்டமான, ஜீரணிக்க முடியாத கேரக்டராகத் தோன்றினாலும் அதிலும் அழுத்தம் காட்டியிருக்கிறார் இனியா.புத்திசாலித்தனமான ஸ்கிரிப்ட்டில் பொறுப்பை உணர்ந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன். மொத்தப் படத்திற்கும் சேர்த்து அவரது முழு உழைப்பு தெரிகிறது. கிளைமாக்ஸ் வன்முறையின் உச்சபட்சம்.

கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம். முதல் பாதியில் பார்த்து ரசிக்க முடிந்த கதை... இரண்டாம் பாதியில் ரத்தம் நம் மேல் தெறிக்கும் அளவுக்கு வன்முறை அமைந்திருப்பது வேதனை. இருந்தும் விஷாலின் திறமை... லட்சுமியின் இளமை... திருவின் புது ஸ்கிரிப்ட்... இந்த மூன்று விஷயங்கள் சிகப்பு மனிதனை ரசிக்க வைக்கிறது!

 குங்குமம் விமர்சனக் குழு