அவன் அவள் unlimited



பெண்களுக்குப் பிடித்த சிறந்த ஆண் என்பவன், அவர்களின் பிறந்த நாளை சரியாக நினைவில் வைத்திருக்க வேண்டும். ஆனால் வயதை மறந்துவிட வேண்டும்!
 ராபர்ட் ஃப்ராஸ்ட்

‘கடுகடு முகம்...
காதலுக்குரியது!’
 அடடா நீங்கள் நினைப்பது போல் ராஜ்கிரண் ரசிகர் மன்றத்திலிருந்து வந்த அறிக்கை இல்லைங்க இது. வடிகட்டிய அறிவியல். ‘காலம் காலமாக, குட் ஃபிகருக்கு அட்டு பாயும்... அட்டு ஃபிகருக்கு குட் பாயும் அமைவது ஏன்’ என்றால், விஞ்ஞானம் தரும் விளக்கம் இதுதான்! ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராப் ப்ரூக்ஸ் என்ற உளவியலாளர் தான் செய்த ஆராய்ச்சிகளின் முடிவாகவும் இதைத்தான் சொல்கிறார்... கடுகடு முகம் காதலுக்குரியது!

‘‘அட, சூப்பர் பொண்ணு! ஆனா, இவளுக்கு இப்படி ஒரு சுமார் மூஞ்சி குமாரா?’’  நாம் எல்லோருமே வாழ்வில் ஒரு முறையாவது இப்படி ஒரு ஜோடியைப் பார்த்து, ஆதங்கம்/ வயித்தெரிச்சல்/ பொறாமைப் பட்டிருப்போம். அட்லீஸ்ட், ‘தேனிலவு’ சீரியல் பார்த்தாவது ஃபீல் பண்ணியிருப்போம். இதில் அந்த ‘சுமார் மூஞ்சி குமார்’ என்ற வார்த்தையை கொஞ்சம் கவனியுங்களேன். ஓர் ஆண்மகனை ‘சுமார்’ என வகைப்படுத்த ஆதாரமாய் இருப்பது அவன் ‘மூஞ்சி’ மட்டும்தானா?  டாக்டர் ப்ரூக்ஸ் செய்த ஆராய்ச்சியில் இதற்கு விடை இருக்கிறது.

உங்களைப் பொறுத்தவரை அழகான விலங்கு என்று எதைச் சொல்வீர்கள்? தோகை விரித்தாடும் ஆண் மயில்? அழகான திமிலோடு வலிமைக்கு ஐகானாக தெரியும் ஒரு காளை மாடு? இரண்டுமே பர்ஃபெக்ட்! மயில் என்றாலே அதன் தோகை, கொண்டை என சில வஸ்துக்களை மட்டும் பார்த்துவிட்டு வர்ணிக்க ரெடியாகி விடும் நாம், என்றைக்காவது அதன் முகத்தை உற்றுப் பார்த்திருக்கிறோமா? கருகருவென, சற்றும் சாந்தம் இல்லாதிருக்கும் அந்த முகத்தையும் முரட்டுத்தனமான கண்களையும் தரிசித்திருக்கிறோமா?

காளைக்கும் இதே கதைதான். ‘வருது பார்...’ என ஜல்லிக்கட்டுகளில் இன்ச் இன்ச்சாக வர்ணிக்கப்படும் காளைகளிடம் நாம் கவனிப்பது அதன் கட்டுடலையும் கொம்புகளையும்தான். அதன் முகம்..? கொலை வெறியோடு, கர்ண கொடூரமாக முறைத்துப் பார்க்கும் அதன் முகம்..? ஆனால், அந்தக் குரூரம்தான்... அந்தக் கொடூரம்தான் அதற்குத் துணை தேடித் தருகிறது. பொதுவாக, எந்த விலங்கிலும் பெண்ணினம் தனது அடுத்த தலைமுறையை உருவாக்க வலிமையானதொரு மரபணுவையே தேடுகிறது. தன் தந்தையை விட, தன் மகன் வலிமையானவனாக இருக்க வேண்டும் என்பது பரிணாமம் அதற்குத் தந்திருக்கும் முழுநேரப் பணி.

இதற்காக பலசாலி கணவனைத் தேடி வரும் பெண் மயில், கடுகடுவென ஆக்ரோஷ ஆட்டம் போடும் ஆண் மயிலைப் பார்க்கிறது. இவன், தனது சக ஆண் மயில்களோடு அட்ஜஸ்ட் செய்து கொள்ளாதவன், சக ஆண்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்குகிறவன் என்றெல்லாம் அந்த முகக்கடுமையே இன்ட்ரோ கொடுக்கிறது. ‘இப்படியொரு வீரனைத்தானே எதிர்பார்த்தேன்’ என்ற மயக்கத்தில் அது உடனே ‘ஐ லவ் யூ’ சொல்கிறது.

கிட்டத்தட்ட மனிதனும் இப்படித்தான் இருந்தான். ஆதி காலத்தில், சிரிப்பு கொஞ்சமும் இல்லாத சீரியஸ் முகத்துக்கு செம கிராக்கி இருந்திருக்கிறது. ‘பகைவர்கள் தலையை உருட்டி விளையாடுபவன்...’‘பேய்களுக்கு பிணங்களை உணவாய்க் கொடுப்பவன்...’ என்றெல்லாம் நாமே நம் தமிழ் மன்னர்களை ஒரு காலத்தில் புகழ்ந்திருக்கிறோம். ‘சிரித்த முகம் கொண்டவன், எல்லோருக்கும் பணிந்து போவான். பலமற்றிருப்பான். அவனை வீழ்த்துவதும் ஏமாற்றுவதும் சுலபம்’ என்ற எண்ணம் சமீப காலம் வரை பரவியிருந்திருக்கிறது. அந்த மனோபாவத்தின் மிச்சமாகத்தான், இன்றும் ஏமாற்ற நினைப்பவர்களிடம், ‘என்னைப் பார்த்தா இளிச்சவாயன் மாதிரி தெரியுதா?’ என்கிறோமோ என்னவோ!

ஆனால், நவீன காலம் மனிதனைத் தலைகீழாய் மாற்றியிருக்கிறது. செல்வாக்குடன் வாழ, மனிதனுக்கு உடல் வலிமையை விட, புத்திக் கூர்மைதான் தேவை என்ற நிலை வந்துவிட்டது. முகம் முழுவதையும் மழித்து, பெண் முகத்துக்கும் தன் முகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ஆண் களைந்தபோதே கடுகடு முகம் தன் செல்வாக்கை இழந்திருக்க வேண்டும். அறிவுக்கு முக்கியத்துவம் பெருகியிருக்க வேண்டும். ஆனால், முழுமையாக உலகத்தை அறிவு ஆட்சி செய்துவிட முடியாது. ‘‘அண்ணே... உங்களைப் பார்த்தா டெர்ரரா இருக்கு... நீங்க வட்டி பிசினஸ் பண்ணலாம்!’’ என வடிவேலுவை உசுப்பேற்றுவார்களே... அப்படிப்பட்ட பிசினஸ்கள் இன்னமும் கொஞ்சம் இருக்கின்றன. கடுமையான முகத்துக்கும் உடல் வலிமைக்கும் இருந்த மரியாதை மைனாரிட்டியாகிவிட்டது... அவ்வளவே!

இப்போதெல்லாம் பையன் கொஞ்சம் கறுப்பாக, சிடுசிடுவென, கண்களில் கருணையற்று இருந்தால், உடனே அவனை ‘சுமார் மூஞ்சி’ என்கிறோம். நிஜத்தில் சக ஆண்களுக்கு அவனைப் பார்த்தால் பயம் வருகிறது. அந்த பயத்துக்கு நாம் வைத்த பெயர்தான் அவலட்சணம். சக ஆண்களை பயமுறுத்துகிற முகம், பெண்களுக்குப் பிடிக்கும். ஆனால், நவீன கால அறிவுலகப் பெண்கள் வலிமையின் அடையாளமான அந்த முகங்களை வெறுக்கப் பழகியிருக்கிறார்கள்.

இன்று, பெரும்பாலான பெண்கள் விரும்புவது புத்தியும் முக அழகும் கொண்ட மொழுமொழு ஆண்களைத்தான். இந்தப் பெரும்பான்மையிலிருந்து விலகி, சில பெண்கள் மட்டும் தங்களின் உயிரியல் அடிப்படைகளை இன்னும் மறக்கவில்லை. அதற்கு அடையாளமே சூப்பர் பொண்ணு சுமார் பையன் காம்பினேஷன். அறிவுலகம் என்பதெல்லாம் மிஞ்சிப் போனால், ஆயிரம் வருடங்களுக்கு முன் தோன்றியது. ஆனால், ஒரு பெண் ஆணைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமீபாவின் பெரியப்பா காலத்திலிருந்து தொன்று தொட்டு வருகிறது. அதை எப்படி ஒரேயடியாக மறக்க முடியும்? சரி, சுமார் பையனை அழகுப் பெண் தேர்ந்தெடுக்க இது மட்டும்தான் காரணமா? இல்லை. இன்னும் நிறைய இருக்கிறது. அட, சம்மந்தப்பட்ட பெண்ணின் அப்பா, அம்மா... அவர்களின் மரபணு கூட ஒரு காரணம் என்கிறது சயின்ஸ். அதெப்படி?தேடுவோம்...

நீங்கள் யார்?

‘2டி 4டி விகிதம்’ என்றழைக்கப்படும் பிரபல கான்செப்ட் இது. நம் சுட்டு விரல்  மோதிர விரல் நீளத்துக்கும் ஹார்மோன் அளவுகளுக்கும் தொடர்பு உண்டு என்கிறது இது. ஹார்மோன்களுக்கு ஏற்ப கேரக்டரும் மாறும். உங்கள் விரல்களின் நீளத்தை குறித்துக் கொள்ளுங்கள். பலன்கள் தலைகீழாக...

பெரும்பாலான பெண்களுக்கு சுட்டு விரலும் மோதிர விரலும் சம அளவில்தான் இருக்கும். ஆக, இப்படி சுட்டு விரல் நீண்டிருப்பது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கொஞ்சம் அப்நார்மல். இவர்களுக்கு பெண் தன்மை ரொம்பவே அதிகம் இருக்கும். சிறந்த நிர்வாகிகளான இவர்கள், பேச்சுத்
திறனில் பின்னி எடுப்பார்கள். ஆனால், அடிக்கடி தலைவலி, பயம், கவலை இவர்களை அலைக்கழிக்கும்.

பெரும்பாலான ஆண்களுக்கு இப்படித்தான் மோதிர விரல் நீண்டிருக்கும். இது டெஸ்டோஸ்டிரான் என்ற ஆண் ஹார்மோன் அதிகம் இருப்பதன் அடையாளம். வேகம், மோகம் ஆதிக்க குணம் எல்லாமே இவர்களுக்கு அதிகம். சுலபத்தில் சலனப்படக் கூடிய மனம் இவர்களின் மைனஸ். அரிதாக பெண்களில் சிலருக்கு இப்படி இருக்கலாம். அவர்களிடம் ஆண் குணங்கள் அதிகம் தென்படும்.

நீ காதலிச்சி கட்டிக்கிட்ட மாப்பிள்ளை இவர்தானா? எம்.ஜி.ஆர் மாதிரி சும்மா தகதகன்னுமின்னுறாரு!

கிண்டல் பண்ணலைங்க... எங்க தாத்தாவுக்கு சுமாராதான் கண்ணு தெரியும்!

கோகுலவாச நவநீதன்