குட்டிச் சுவர் சிந்தனைகள்



எல்லாருமே அதை பெங்களூரு என்கிறார்கள், என்னைக் கேட்டால் அது பெண்களூரு! ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் அழகான பெண்களில் பாதியை எடுத்து கொண்டு வந்து கொட்டி, செய்த ஊர்தான் பெங்களூரு. ஒண்ணுமில்லங்க, நம்ம கண்ண மூடிக்கிட்டு ரோட்டுல நடந்து போறப்ப, மொதல்ல எந்தப் பொண்ணை இடிக்கிறோமா, அந்தப் பொண்ணையே தைரியமா லவ் பண்ணலாம். அந்தளவுக்கு கண்ணுல படுற அம்புட்டு பொண்ணும் அம்சமா இருக்குங்க.

நாட்டுல முகத்தை மூடிக்கிட்டு பணத்தைக் கொள்ளையடிப்பவர்களுக்கு மத்தியில், வண்டியோட்டுறப்ப துப்பட்டாவுல முகத்தை மூடிக்கிட்டு நம்ம மனதைக் கொள்ளையடிக்கிறார்கள் இந்த பெங்களூரு பெண்கள். பெங்களூரில் இருக்கும் ஒவ்வொரு தெருவும் இந்த பெண்கள் நடமாடும்போது பூந்தோட்டமாக காட்சியளிக்கின்றன என்று சொல்வது மிகையே இல்ல. நல்லவேளை, நான் பெங்களூருல பொறக்கல. இல்லன்னா எந்த பொண்ண லவ் பண்ணலாம்னு யோசனை பண்ணி யோசனை பண்ணி குழப்பத்துலயே வயசாகியிருக்கும்.

இந்த ஒரு மாசமா ரஜினி சாரை போய்ப் பார்க்கிற கும்பல்ல பாதி கும்பல், ‘கோச்சடையான்’ படத்தைப் பார்த்தாலே ‘படம் 500 நாள் ஓடும்’னு கருத்துக் கணிப்பு சொல்லுதுப்பா. ரஜினி சார் வீட்டுக்கு வெளியே செருப்பு டோக்கன் போட்டாக்கூட, இந்த ஒரு மாசத்துல லட்சாதிபதி ஆகியிருக்கலாம். எத்தனை விசிட்டர்ஸ்! இல்ல, தெரியாமத்தான் கேட்கிறேன்... ரஜினி சார் என்ன பால் குடிக்கிற புள்ளையாராய்யா? அவரு பாட்டுக்கு சிவனேன்னு இருக்காரு... இங்க நண்டு, சிண்டுல இருந்து சந்து பொந்துல இருக்கிறவங்க வரை ஆளாளுக்கு ஆர்வமாவும் ஆச்சரியமாகவும் போயி பார்க்கறீங்க. நீங்கல்லாம் தேர்தல் வந்தா அரசியல் காரணத்தோட பார்க்கப் போறீங்க.

ஆனா, நாங்கல்லாம் அன்பு என்ற ஒரே காரணம் இருப்பதால், அவர தியேட்டர் ஸ்கிரீன்ல பார்த்தாலே போதும்னு நினைக்கிறோம். இதுல ரஜினி சாரைப் பார்க்க போட்டியும் பொறாமையும் வேற. மோடி வேட்டி கட்டி வந்து ரஜினி சார பார்த்தா, அண்ணன் மைக்கோ வேற ‘‘நான் போன வாரமே பார்த்துட்டேன்’’னு போட்டோ விடுறாப்ல. அடேங்கப்பா, இந்த வாரம் ரஜினிய பார்த்த மோடியே இந்தியப் பிரதமராக வாய்ப்பு இருக்குன்னா, போனா வாரமே போய்ப் பார்த்த மைக்கோ அண்ணன் நிச்சயம் அமெரிக்க ஜனாதிபதிதான்.

அய்யா அரசியல்வாதிகளே, எதுக்கு வம்பு? இன்றைய சூப்பர்ஸ்டார் ரஜினியை பார்த்த கையோடு, அடுத்த சூப்பர்ஸ்டார்னு பலரும் சொல்ற சிவகார்த்திகேயனையும் நம்ம லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவையும் அப்படியே காமெடி சூப்பர்ஸ்டார் சந்தானத்தையும் கூட ஒரு எட்டு போயி பார்த்துட்டு வந்திடுங்க... பின்னால யூஸ் ஆகும்!

‘நான் சிகப்பு மனிதன்’ படத்துல விஷாலுக்கு இருக்கும் நோயின் பெயர் நார்கோலெப்சி. அதாவது, ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவம் நடந்தாலோ, அதீத சந்தோஷமான விஷயம் கேள்விப்பட்டாலோ, உடனே மயங்கி தூக்கம் வந்திடும். படம் பார்க்கிற நமக்கு விஷாலுக்கு இருக்கிற இந்த நோய பார்த்தா புதுசாவும் வித்தியாசமாவும் தெரியும். ஆனா, உண்மையாலுமே இந்த நோய நாம சின்ன வயசுல கடந்து வந்திருக்கோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

இப்பவும் பாருங்க, ஒவ்வொரு குழந்தைக்கும் நார்கோலெப்சியின் தாக்கம் இருக்கிறது. ‘‘ஹோம்வொர்க் செய்’’, ‘‘படி...’’ன்னு சொல்றப்ப டக்குன்னு தூக்கம் வருதுன்னு சொல்லி அதை வெளிப்படுத்துவாங்க. 11 மணி வரை டி.வில ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கிட்டு இருக்கிற புருஷன்கிட்டே போயி, ‘‘ஏங்க... கேஸ் சிலிண்டர் ஆஃப் ஆயிருக்கான்னு பார்த்துட்டு வாங்க’’ன்னு மனைவிகள் சொல்றப்ப, பெரும்பாலான புருஷன்களுக்கு இந்த நோய் தாக்கிடும். மத்தியானம் சாப்பாட்டு டைம் முடிஞ்சு மொத பீரியடே கெமிஸ்ட்ரி வகுப்புன்னு வைங்க...

 வாத்தியார் சொல்ற ஃபார்முலா அதிர்ச்சியிலயே பாதி பேரு இந்த நோயின் தாக்கத்தால் தூங்கிடுவாங்க. இவ்வளவு ஏன்? கவர்மென்ட் பஸ்ஸோ, பிரைவேட் பஸ்ஸோ, பல பேரு ஏறுன உடனே தூங்குறதுக்குக் காரணம், அந்த டிக்கெட் விலை கொடுத்த அதிர்ச்சிதான். பல பேரு ஆஸ்பத்திரில மயங்கித் தூங்கறதுக்கு காரணம், டாக்டர் கொடுத்த மருந்துன்னு நினைக்கிறாங்க. உண்மை என்னன்னா, அடுத்து டாக்டர் கொடுக்கப் போற பில்லை நினைச்சு வந்த அதிர்ச்சிதான் அவங்களைத் தூங்க வைக்குது.

இந்திய நாட்டின் பிரதமரா ஆகறாரோ இல்லையோ... ஆனா, சாதாரண டீ ஊத்தி தந்த சிறுவனா ஆரம்பிச்சு இன்னைக்கு ஒரு கட்சியின் பிரதமர் வேட்பாளரா வர்ற அளவுக்கு நரேந்திர மோடி வளர்ந்திருக்கார். அதுக்குக் காரணம், அவரு கல்யாணம் பண்ணினாலும் மனைவியைப் பிரிஞ்சு வாழ்ந்து, சம்சாரம் மற்றும் தாம்பத்ய தொல்லையில்லாம சுதந்திரமா இருந்தது தான்.
அதனால இந்தியாவில் இருக்கும் அன்பான அருமையான மனைவி களே... உங்கள் கணவரும் நரேந்திர மோடி போல ஒரு மிகப்பெரும் ஆளுமையா உருவாகணும்னா, தயவுசெஞ்சு உங்கள் அற்புதமான கணவர்களுக்கு துன்பத்தொல்லையாகவோ... இல்ல அன்புத்தொல்லையாகவோ இருக்காதீங்கன்னு மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்! இவண்,
பொண்டாட்டிய கல்யாணம் பண்றோம்னு நினைச்சு பிரச்னைய கல்யாணம் பண்ணினவர்கள் சங்கம், பண்ருட்டி கிளை.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்...

அமர்க்களமா ஐ.பி.எல். மேட்ச் ஆரம்பிச்சாலும், அதைப் பார்க்க விடாம இம்சை பண்ணும் தொல்லையின் சம்சாரமாகிய தமிழ்நாட்டு மின்சாரம்!

சாலமன் பாப்பய்யா குரலில்:


மறதியாகப் போட்டி நடத்தினாலும் இறுதிப் போட்டிக்கு போய்விடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினரே... கொமட்டுல குத்து வாங்கினாலும் மீண்டும் முரட்டுத்தனமா விளையாட வரும் கொல்கத்தா அணியினரே... கெயிலையும் விராட் கோலி எனும் புயலையும் வைத்திருக்கும் பெங்களூரு அணியினரே... கில்லியாய் இருந்து ஒல்லியாய் போன டெல்லி டேர் டெவில்ஸ் அணியினரே...

வம்பை விலை கொடுத்து வாங்கும் மும்பை அணியினரே... புதிராய் இருந்து குதிரையாய் தாவிய ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியினரே... எல்லா அணியினரும் லெமன் ஜூஸாய் பிழிந்தெடுக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினரே... அவ்வவ்போது மாயங்கள் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரே... வாங்கய்யா, வாங்கய்யா! ஒரு மாசமா தேர்தல் காய்ச்சல்ல கஷ்டப்பட்ட எங்களுக்கு ஆறுதல் தாங்கய்யா!

ஆல்தோட்ட பூபதி