கடைசி பக்கம்



தன் குழந்தையை முதல்முறையாகப் புகைப்படம் எடுத்தார் அவர். ஒரு வயதில் எடுக்கப்படும் இந்தப் புகைப்படங்கள், தங்களது நிகழ்காலத்திலும், அவனது எதிர்காலத்திலும் மறக்க முடியாத பதிவுகளாக இருக்கும் என்பதால், செலவைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. நகரிலேயே புகழ்மிக்க ஒரு போட்டோகிராபரை அணுகினார்.

அவர் வந்து குழந்தையை பல மணி நேரம் பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார். ‘‘போட்டோக்கள்ல நான் கொஞ்சம் கம்ப்யூட்டர்ல ஒர்க் பண்ணணும். அப்போதுதான் ரிசல்ட் நன்றாக வரும். நீங்க அடுத்த வாரம் வந்து பாருங்க’’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

அடுத்த வாரம் போட்டோக்களைப் பார்க்க அவர் ஆசையோடு போனார். ‘‘வாங்க! உங்க பையன் போட்டோ அட்டகாசமா வந்திருக்கு’’ என்ற போட்டோகிராபர் தன் கம்ப்யூட்டரில் படங்களைப் பெரிதாக்கிக் காட்டியபடி பேச ஆரம்பித்தார்.‘‘இந்த போட்டோவைப் பாருங்க... தரையில தவழ்ந்து சிரமப்பட்டு எடுத்தேன். அந்த ஆங்கிள்ல பையன் செம அழகா தெரியறான். இது நான் படிக்கட்டுல சாய்ந்து நின்னு எடுத்தது. முதுகுவலியே வந்திடுச்சு. அடுத்த படத்தைப் பாருங்க... இப்படி டாப் ஆங்கிள்ல யாருமே எடுக்க முடியாது’’ என ஒவ்வொரு படத்துக்கும் தான் பட்ட சிரமங்களை அடுக்கினார். பார்க்கப் போனவர் முகம் மாறி, ‘‘ஆனா இது...’’ என ஆரம்பித்தார்.

‘‘உஷ்! எல்லாத்தையும் பார்த்துட்டு அப்புறம் சொல்லுங்க...’’ என அவரைப் பேசவே விடவில்லை. அரை மணி நேரம் எல்லா படங்களையும் காட்டி முடித்துவிட்டு, ‘‘ஏதோ சொல்ல வந்தீங்களே... இப்போ சொல்லுங்க’’ என்றார்.‘‘இதெல்லாம் என் பையனோட படமே இல்லை. வேற யார் படமோ!’’ என அவர் சொல்ல, போட்டோகிராபர் அசடு வழிந்தார்.
அடுத்தவர்களையும் பேச விடுங்கள்!