தந்திரம்




‘‘மஞ்சு... என்னை இன்னிக்கு கோயிலுக்குக் கூட்டிட்டுப் போறியா..?’’


சேகரின் தாய், தன் மருமகளிடம் பரிதாபமாய்க் கேட்டாள்.
உடனே சேகரின் குரல்... ‘‘கோயிலா? அதெல்லாம் வேணாம். மஞ்சு, நீ கூட்டிட்டுப் போகாதே!’’

‘‘என்னங்க நீங்க... வயசான காலத்துல கோயில், குளம்னு போக ஆசைப்படுறாங்க. அதில் என்ன தப்பு? நான் கூட்டிட்டுப் போறேம்மா... இவர் கிடக்கிறார்...’’ என்றாள் மஞ்சு.
இரண்டு நாள் கழித்து, சேகரின் அம்மா மீண்டும் மருமகளைக் கேட்டாள்...
‘‘இன்னிக்கு ரவா உப்புமா செய்து தர்றியா? சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு...’’
உடனே சேகரின் குறுக்கீடு...

‘‘அதெல்லாம் செய்யாதே... சோறு மீந்து கிடக்கு... அதைச் சாப்பிடட்டும்!’’
‘‘சே... அம்மா ஆசைப்படுறாங்க... நான் செஞ்சு தர்றேன்மா!’’

பக்கத்து வீட்டிலிருந்து இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த நான், சேகரை ஒருநாள் வழிமறித்து கேட்டே விட்டேன்...
‘‘ஏன் சார்... மருமகளே மாமியாரை இவ்வளவு மதிக்கிறாங்க... நீங்க ஏன் குறுக்கே நிக்கறீங்க?’’
‘‘அய்யோ, உங்களுக்கு என் மனைவியைப் பத்தி தெரியாது சார். நான் செய்யாதேன்னு சொல்றதைத்தான் அவ செய்வா’’ என்றார் அவர்.
சேகரின் ராஜதந்திரத்தைக் கண்டு நான் வியந்தேன்!

முகவை ராஜா