காப்பி அடிக்கிறியா? இளையராஜா கேட்ட கேள்வி



‘‘சினிமாவில் கதை சுவாசம் மாதிரின்னா, திரைக்கதை முதுகெலும்பு. சில கதைகள் சொல்லும்போது ரொம்ப நல்லாயிருக்கும். அதையே படமா எடுக்கும்போது ஏதோ கொஞ்சம் குறைஞ்சா மாதிரியிருக்கும். அப்படியில்லாமல் சொல்லும்போதும், எடுத்த பிறகும் அழகா நிறைவா வந்திருக்கிற படம், ‘என்னமோ நடக்குது’!’’  நிதானமாகப் பேசுகிறார் விஜய் வசந்த்.
‘‘‘என்னமோ நடக்குது’ படத்தில் என்ன நடக்கும்?’’

‘‘டைரக்டர் ராஜபாண்டி, திரைப்படக் கல்லூரி மாணவர். போஸ்டர் ஒட்டுகிற ஒரு சாதாரண பையனுக்கு காதல். விளைவாக, அந்தப் பொண்ணுக்கு உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம். அதற்காகக் கிளம்பி இரண்டு குரூப்கள் மத்தியில் சிக்கிக்கிட்டு அவன் பாடுபடுகிற அவஸ்தைகள்தான் கதை. எப்படி அதிலிருந்து, அழகாக வெளியே வந்து தப்பிக்கிறான் என்பது நல்ல சுவாரஸ்யம். ஆக்ஷன் த்ரில்லர். எந்த கேரக்டருக்கும் சரியாகப் பொருந்திப் போவதுதான் நல்ல நடிகனுக்குரிய அம்சம். நான் அதில் எப்பவும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது என விரும்புறேன்.’’ ‘‘‘சாட்டை’யில் நடிச்ச மகிமாவா உங்க ஜோடி?’’

‘‘ஆமாம்... ஏதோ வேடிக்கையா எடுத்துக்காமல் சீரியஸா நடிக்கிற பொண்ணு. நிச்சயம் அடுத்த செட் ஹீரோயின் வரிசையில் இருப்பாங்க. நானே கூத்துப்பட்டறைக்கு போய் என்னை நிறைய மாத்திக்கிட்டேன். தம்பி ராமய்யா இதில் சகுனியும், சாணக்கியனும் கலந்து வர்றார். ரகுமான் சார் அழகான அசத்தல் வில்லன். பண்பட்ட நடிப்பு பிரபு சாருடையது. ஒரு காட்சியில் பிரபு பாக்ஸிங்கில் ஜெயிப்பார். அதுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பரிசுக்கோப்பை தருவது மாதிரி காட்சி அமைச்சிருக்கோம். தியேட்டர் சும்மா கலகலக்கப் போற இடம் அது.’’
‘‘பிரேம்ஜி இசையமைப்பாளர்?’’

‘‘சார் பார்க்க, பேசத்தான் காமெடி. வேலையில் இறங்கிட்டால் அவ்வளவு சின்சியர். அவங்க பெரியப்பா இளையராஜா மாதிரி ஜிப்பா போட்டு ஆர்மோனியத்தோட போஸ்டர் போட்டோம். பிரேம்ஜிகிட்ட ராஜா சாரே, ‘என்னடா, என்னை காப்பி அடிக்கிறீயா?’ன்னு கேட்டாராம். ‘உங்களை மாதிரி மியூசிக் வேணும்னாங்க. அது எப்படி முடியும்? அதான் டிரஸ்ஸாவது உங்களை மாதிரி போடலாம்னு நினைச்சேன்’னு பதில் சொன்னாராம். ஆனால், பிரேம்ஜியின் இசை உண்மையிலேயே அருமையான தரத்தோட இருக்கு!’’

 நா.கதிர்வேலன்