லவ் கெமிஸ்ட்ரி... வேதிகா ஜிலீர்



கடன் வாங்கி கழித்திருக்கும் இடையழகில் கிரயான்ஸ் வார்த்தெடுத்த ஓவியமாய் இதயம் ஈர்க்கிறார் வேதிகா. 'பரதேசி’யில் அவரது நடிப்புக்காகக் கிடைத்த அங்கீகாரம், கவனமாக படங்களை தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துடன் தோளுரசி தூய தமிழ் வசனம் பேசிக்கொண்டிருந்த கன்னடத்துக் கிளியை ஷாட் பிரேக்கில் சந்தித்தோம். தாய்மொழி கன்னடம், வசிப்பது மும்பையில், ஆனால் செந்தமிழில் பின்றீங்களே?‘‘நன்றி... தமிழ் மீதுள்ள ஈடுபாடுதான் காரணம்.

எனக்குள் தமிழ் ஆர்வத்தைத் தூண்டியதில் மிகப்பெரிய பங்கு இளையராஜா சாருக்குத்தான் உண்டு. அவருடைய மெலடி பாடல்கள் என்றால் எனக்கு உயிர். ‘காவியத்தலைவன்’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் நான் தமிழில் பேசியதைப் பார்த்துட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சாரே ஆச்சர்யப்பட்டார். ‘உங்க தமிழ் நல்லாயிருக்கு, வெரிகுட்’ என்று பாராட்டினார். இசைப்புயல் வாயால் அப்படி ஒரு பாராட்டு கிடைச்சதை சந்தோஷமா ஏற்றுக்கொள்கிறேன். இங்கிலீஷ், தெலுங்கு, கன்னடம், பிரெஞ்ச், தமிழ், இந்தி என்று ஆறு மொழிகள் தெரிந்திருந்தாலும் தமிழில் பேசுற சுகமே தனிதான்!’’

‘காவியத்தலைவன்’ படத்தில் என்ன கேரக்டர்?‘‘எண்பது வருடங்களுக்கு முந்தைய கதை இது. நாடகக் குழுவில் நானும் ஒருத்தியா நடிக்கிறேன். மற்ற விஷயங்கள் பற்றி அதிகமா சொல்லக்கூடாது. சித்தார்த்துடன் சேர்ந்து நடிச்சதும், சுத்த தமிழ் பேசி நடித்ததும், புது அனுபவம். சித்தார்த் சினிமாவை எவ்வளவு அதிகமா நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லா விஷயமும் தெரிந்த அறிவாளியாக இருக்கார். இந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேச வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.’’
நடிக்கத் தெரிந்தவர் என்று நிரூபித்தும் நிறைய படங்கள் பண்ணலையே?

‘‘பத்து படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துட்டு, ‘நானும் பிஸியா இருக்கேன்’ என்று சொல்லிக்கொள்வதை பெருமையா நினைக்கல. நல்ல நல்ல கேரக்டர்கள் பண்ணணும் என்கிற எண்ணத்தில், ரொம்ப செலக்ட்டிவா இருக்கேன். இரண்டு மலையாளப் படங்களிலும் ஒரு தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கேன். எல்லாமே நல்ல படங்கள். ‘பரதேசி’ அங்கம்மா கதாபாத்திரம் போல என் திறமைக்கு தீனி போடும் கேரக்டர்களாக இருந்தால், டைரக்டர் யார், ஜோடி யார் என்பது பற்றிக் கவலைப்படாமல் கால்ஷீட் கொடுக்க ரெடி. இப்ப புதுப்புது சிந்தனையோட சினிமாவுக்கு வர்ற இளம் இயக்குனர்கள் கலக்குறாங்க. சூர்யா, அஜித், விஜய்னு பெரிய ஸ்டார்களுடன் ஜோடி சேரவும் ஆசை இருக்கு. இடையில் அஜய் தேவ்கானோட ஒரு இந்திப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஒரு சூழ்நிலை காரணமா, அதில் நடிக்க முடியாமல் போயிடுச்சு!’’

ஏற்கனவே சிம்பு ஜோடியா நடிச்சிருக்கீங்க. அதன்பிறகு அவர் சிபாரிசு பண்ணலையா?
‘‘நான் ஏன் அதை எதிர்பார்க்கணும்? ‘இந்தக் கதையில் எனக்கு ஜோடியா வேதிகா நடித்தால் கரெக்டா இருக்கும்’னு சிம்புவுக்குத் தோணினால் கூப்பிடப் போறார். ‘காளை’ படத்தில் ‘குட்டி பிசாசே...’ பாட்டுல ரெண்டு பேரோட டான்ஸ் கெமிஸ்ட்ரி சூப்பர்னு படம் பார்த்தவங்க எல்லாருமே பாராட்டினாங்க. செம வேகமா ஸ்டெப் போடுவார் சிம்பு. அவருக்கு ஈடு கொடுத்து ஆடி அப்ளாஸ் அள்ளுறது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன?’’

அவர்கூட நடிக்கும் நடிகைகளுக்கு லவ் கெமிஸ்ட்ரியும் வொர்க்கவுட் ஆகும்ல?
‘‘ஏன் சார்... வலிய வந்து என்னை வம்புல சிக்க வைக்கிறீங்க. ஆங்... நீங்க சொல்றதும் உண்மைதான். எங்களுக்குள்ள காதல் கெமிஸ்ட்ரியும் நல்லாதான் இருந்தது. ஆனால், சினிமாவில் மட்டும். ஹய்யா... தப்பிச்சிட்டேன் பார்த்தீங்களா?!‘’’

நிஜவாழ்க்கையில் காதலை கிராஸ் பண்ணியிருக்கீங்களா?
‘‘இந்த விஷயத்தில் யார் இல்லைன்னு சொன்னாலும் அது பொய்யாத்தான் இருக்கும். என்னதான் கோடிகளில் புரண்டாலும், புகழ் வெளிச்சத்தில் மிதந்தாலும் காதல் இல்லைன்னா அந்த வாழ்கையே வேஸ்ட்தான். காலேஜ் படிக்கும்போது எங்கிட்ட பசங்க லவ் சொல்லியிருக்காங்க. எனக்கும் ஒருத்தன் மீது காதல் வந்தது. பக்குவமில்லாத வயதில் வருவது காதலே இல்லை. அது வெறும் இனக் கவர்ச்சிதான் என்பதை ஒரு ஸ்டேஜுக்கு மேல் தெரிந்துகொண்டேன். காதலில் நான் கடந்துபோனது அவ்வளவு தான். நம்புங்க பிரதர்!’’

அமலன்
அட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்