ஒலிம்பிக்கில் தங்கம் நிச்சயம்!



எத்தனையோ தடைகளைத் தாண்டி, தடகளத்தில் தகதகவென ஜொலித்த தங்க மங்கை சாந்தியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் வெள்ளிப்பதக்கம் வென்றபோது இந்தியாவே கைதட்டியது.

‘சொந்தமாக ஷூ வாங்கக் கூட வசதியில்லாத ஏழைப் பெண் சாதித்துவிட்டார்’ என அப்போது சாந்தியைக் கொண்டாடித் தீர்த்த அதே ஊடகங்கள்தான், பாலின சோதனை சர்ச்சையில் இவரை அடுத்த நாளே போட்டு உடைத்தது. வாழ்வில் எந்தப் பெண்ணும் சந்திக்கக் கூடாத அனைத்து பிரச்னைகளையும் கடந்தாயிற்று... மன உறுதியோடு இன்று தேசிய தடகளப் பயிற்சியாளராக மாறியிருக்கிறார் சாந்தி.

மயிலாடுதுறையிலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சியில் இருந்தவரிடம் பேசினோம். ‘‘ஃப்ளாஷ்பேக் எதுவும் வேண்டாம் சார்! அதனால நானும் என் குடும்பமும் பட்ட வேதனைகள் கொஞ்ச நஞ்சமில்லை. திரும்பத் திரும்ப அந்த ரணத்தைக் கீறிப் பார்க்க விரும்பலை, ப்ளீஸ்...’’ என வேண்டுகோளோடு பேசத் தொடங்கினார். 

‘‘புதுக்கோட்டை மாவட்டத்துல கத்தக்குறிச்சின்னு ஒரு சின்ன கிராமம். அப்பா சௌந்தர்ராஜனும் அம்மா மணிமேகலையும் செங்கல் சூளையில் வேலை பார்த்துதான் என்னையும் என்னோட மூணு தங்கச்சி, தம்பியையும் படிக்க வச்சாங்க. சின்ன வயசுலேயிருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ்னா உயிர். அதுலயும் ஓட்டப்பந்தயம்னா எப்பவும் நான்தான் ஃபர்ஸ்ட். அதுக்குக் காரணம் என்னோட தாத்தா முத்தையாதான். நாலு தலைமுறையா இலங்கையில வாழ்ந்த குடும்பம் எங்களோடது. தாத்தா அங்க தடகள வீரர். அப்புறம் இந்தியாவுக்கே வந்துட்டாங்க. அவரோட தூண்டுதலால ஏழாம் வகுப்பு படிக்கும்போதே ஸ்கூல் விளையாட்டுப் போட்டிகள்ல கலந்துக்கிட்டு நிறைய பரிசு வாங்க ஆரம்பிச்சேன். படிப்போடு விளையாட்டு ஆர்வமும் கூடவே வளர்ந்திருச்சு.

காலேஜ்ல பி.பி.ஏ படிக்கும்போதும் அத்லெட்டிக் ஆர்வம் தொடர்ந்துச்சு. அகில இந்தியப் பல்கலைக்கழகப் போட்டிகள்ல முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் நிறைய ரெக்கார்ட் வச்சிருந்தாங்க. நான் அதை பிரேக் பண்ணினேன். அவங்க 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 9 நொடியில கடந்தாங்க. நான் 2 நிமிடம் 7 நொடியிலயே வந்தேன். பிறகு அதேமாதிரி 1500 மீட்டர் ஓட்டத்துலயும் சாதனை செய்தேன். இதனால, தேசிய அளவுல பேர் கிடைச்சுது.

2003ல உலக விளையாட்டு தினத்தை முன்னிட்டு தென் கொரியாவுல போட்டிகள் நடந்துச்சு. அதுதான் என் முதல் சர்வதேசப் போட்டி. இந்தியா சார்பா கலந்துக்கிட்டேன். 5000 மீட்டர்ல தங்கம், 800 மீட்டர்ல வெள்ளி, 400 மீட்டர்ல வெண்கலம்னு வரிசையா பதக்கம் வாங்கிக் குவிச்சேன். பிறகு ஆசிய விளையாட்டுப் போட்டி... அங்க 800 மீட்டர்ல வெள்ளிப் பதக்கம் வாங்கினேன். அடுத்து இன்டோர் ஏஷியன் கேம்ஸ் போட்டியிலயும் 800 மீட்டர்ல தங்கம் வாங்கினேன். தொடர்ந்து இலங்கையில நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில ரெண்டு தங்கம், வெள்ளிப் பதக்கங்கள் கிடைச்சுது. அதுக்கு அப்புறம்தான் தோகாவில் நடந்த அந்த ஆசிய விளையாட்டுப் போட்டி’’ - அதுவரை உயர்ந்தபடியே இருந்த சாந்தியின் கிராஃப், அந்தப் போட்டியோடு முடங்கிப் போனதை அவரின் குரலே உணர்த்தியது.

‘‘அங்கேயும் பதக்கம் வாங்கினேன். அதுவே பிரச்னையாகி என்னை முடக்கிருச்சு. ஆனா, என் தன்னம்பிக்கை ஓயல. நல்லவேளை அரசாங்கங்கள் முழுசா என்னைக் கைவிடலை’’ எனும் சாந்தி, அரசு உதவியோடு பெங்களூரிலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் என்.ஐ.எஸ் கோர்ஸில் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார்.

‘‘இது ஒரு வருஷ டிப்ளமோ கோர்ஸ். போன வருஷம்தான் சேர்ந்தேன். இப்ப முடிஞ்சிருச்சு. இறுதிக் கட்டமா ரெண்டு மாசப் பயிற்சியில இருக்கேன். இது முடிஞ்சதும் தடகள வீரர், வீராங்கனைகளை உருவாக்குகிற பயிற்சியாளரா மாறியிடுவேன். அரசே வேலை தர்றோம்னு சொல்லியிருக்கு. தங்கம் ஜெயிச்சி வந்தப்பவே ‘உங்க லட்சியம் என்ன?’ன்னு கேட்டவங்ககிட்ட எல்லாம், ‘தடகள கோச்சா ஆகணும்’னுதான் சொன்னேன். அந்த லட்சியம் பலிச்சிருக்கு.

தடகளத்தைப் பொறுத்தவரை அது ஏழைகளோட விளையாட்டு. செலவு இல்லாதது. அவங்கவங்க தனித் திறமையை இதில் காட்டலாம். யாரையும் சார்ந்து இருக்க வேண்டியதில்ல. இப்ப என்னோட கனவெல்லாம், ஒலிம்பிக்கில் இந்தியாவை தங்கம் பெற வைக்கணும். அதுக்கான வீரர், வீராங்கனைகளை உருவாக்கணும். அதுதான் லட்சியம். சீக்கிரமே நாம தங்கம் பெறுவோம் பாருங்க!’’ - நம்பிக்கையோடு முடிக்கிறார் சாந்தி.இந்த நம்பிக்கைக்குப் பெயர்தான் சாந்தி!

சாந்தி இப்போ கோச்

-பேராச்சி கண்ணன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்