நல்லது!



‘‘ஆட்டோ வருமா... ஆட்டோ வருமா...’’ என்று கேட்டுக் கேட்டுத் தொண்டைத் தண்ணீர் வற்றியது பள்ளி ஆசிரியர் பத்மநாபனுக்கு. ‘‘சவாரி ஏத்தப் போறேன்...’’ ‘‘ரேட் கட்டுப்படியாகாது.’’ அடடா... எத்தனை சாக்குப் போக்குகள்! நாற்பது ரூபாய் வரை பேரம் பேச... கூசாமல் ஐம்பது கேட்டது ஒரு ஆட்டோ. ஒன்பது ஆட்டோக்களில் ஒன்றுகூட படியவில்லையே என்கிற எரிச்சல் பத்மநாபனுக்கு.

‘காலியா போனாலும் போவானுக... சவாரி ஏத்த மாட்டானுக போலிருக்கு!’ - பத்மநாபனின் மனம் குமுறியது. சட்டென்று அவருக்குள் ஒரு ஐடியா மின்னல்! ஒட்ட வெட்டிய தலையும்... பெரிய தொப்பையும்... அவரின் பெரிய ப்ளஸ் என்பது அவருக்கே புரிந்தது. அடுத்து வந்த ஆட்டோவை அதட்டலோடு நிறுத்தினார்.  ‘‘யூனிஃபார்ம் எங்கே?’’ - குரலில் கடுமை. ‘‘ஸாரி... சார். ஸ்டாண்ட்ல மறந்து வச்சிட்டேன்.’’ ‘‘இதெல்லாம் சொல்லக் கூடாது. சரி... வண்டி எந்த ரூட்ல போகுது..?’’ - கண்களால் மிரட்டினார்.

‘‘பட்டினப்பாக்கம் சார்...’’ ‘‘கச்சேரி ரோடு கடைசியில இறக்கி விட்டுட்டுப் போ...’’ - பதிலுக்குக் காத்திராமல் பத்மநாபன் ஏறி உட்கார, சீறிப் பாய்ந்த வண்டிக்குள் ‘நல்லதுக்கு காலமில்லை’ என்பது போல் குலுங் கியது அவரின் தொந்தி.         

கே.எம்.சம்சுதீன்