சூரியும் இப்ப ஒரு ஹீரோ!



‘‘இரண்டு ராஜாவுக்கும் ஒரு ராணிக்கும் இடையில் இருக்கிற சுவாரஸ்யங்கள்தான் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா.’ ஒரு ரயில் சந்திப்பில் இவங்க அறிமுகமாவாங்க. அந்தச் சந்திப்பு அவங்க வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டு போகும்னு அவர்களுக்கே தெரியாது. பயணங்கள் சுக மானது. நம்ம மனசை காத்து மாதிரி ஈஸியா வச்சிருக்கும்.

அதுவும் மழைக் கால ரயில் பயணங்கள் இன்னும் கூடுதல் வசீகரம். இது ஒரு வகையில் பார்த்தால், டிராவல் ஃபிலிம். ரயில், கார், பஸ்னு எங்கேயும் நிற்காமல் ஓடிக்கிட்டே இருக்கிற படம். சாதாரணமான மனிதர்களின் சுவாரஸ்யங்கள் எப்பவும் சுவை நிரம்பியது. அந்த வகையில் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’வும் ஒரு ஜாலி படம்தான்’’ - நிதானமாகப் பேசுகிறார் டைரக்டர் ஆர்.கண்ணன். மணிரத்னத்தின் பிரியமான சீடர்.

‘‘அதிகம் ரீமேக் படங்கள் செய்தீங்க. இப்ப மீண்டும் சொந்தக் கதையில்...’’‘‘நல்ல கதை எங்கேயிருந்தாலும் அதைத் தமிழ் மக்களிடம் வகையா கொண்டு போய்ச் சேர்க்கறது நம்ம கடமை. அந்த வகையில் நான் செய்த எல்லாமே ஹிட். ஹிட் கிடைக்குதுன்னு அப்படியேதான் படம் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறதில்லை நான்.

 கலகலன்னு ஒரு ஸ்கிரிப்ட் பிடிபடும்போது, அதுவே நம்மளை உற்சாகமா இறக்கி விட்டுரும் இல்லையா? அப்படி இறக்கிவிட்ட ஸ்கிரிப்ட் இது. விமல், சூரி... ரெண்டு பேருமே இதில் ஹீரோக்கள் மாதிரிதான். சூரியை வெறும் நகைச்சுவை நடிகரா மட்டும் ரசிக்கிறவங்களுக்கு இதில் நடக்கிற மாற்றங்கள் ஆச்சரியப்படுத்தும். சூரி அப்படியொரு மாற்றம் அடைஞ்சிருக்கார்.

 இதைப் பார்த்துட்டு இன்னும் கெட்டியான கேரக்டர்கள் அவருக்கும் வந்து சேரும் என்பது என் அபிப்பிராயம். அக்கறையோடு, ஆழ்ந்து நடிக்கிற அவர் இயல்பை பார்த்துட்டுத்தான் இதைச் சொல்றேன். நமக்கு சினிமா கொடுத்த இடத்தை நகாசு பண்ணி முன்னேறிக்கிட்டு இருக்கிற பாங்கும் சூரிக்கு அருமையா வருது. முதன்முதலா முழு நீளத்திற்கு ஒரு டான்ஸ் ஆடியிருக்கார் பாருங்க! சும்மா சொல்லக் கூடாது... ஸ்டெப்ஸ் அள்ளுது!’’

‘‘விமல் இப்போ இன்னும் சீராகப் போக வேண்டிய இடத்தில் இருக்காரே...’’‘‘அதை அவரே உணர்ந்திருக்கார். ஜிம் பாடி, வித்தியாசமான நடை, உடை, பாவனையோடு இதில் மாறியிருக்கார். ஏன்னா, கூட நடிக்கிற ப்ரியா ஆனந்தின் சௌந்தர்யம் நமக்குத் தெரிந்தது தான். கொஞ்சம் அசால்ட்டா இருந்தாலும், திரையில் அப்படியே தெரியும். கேமராவை ஏமாத்த முடியாது. அழகான ஹேர் ஸ்டைலில் முழு ஈடுபாட்டோடு இதில் விமல் வந்திருக்கார். காதல், துரத்தல், ஆக்ஷன் எல்லாவற்றிலும் புது விமல் இது!’’

‘‘இப்போ எல்லா படத்திலும் இருக்கார் ப்ரியா ஆனந்த்..?’’

‘‘ஆனா நம்ம படம் வேற இல்லையா! இதில் ஒரு டாக்டர் கேரக்டர். எனக்குப் பிடிச்சது என்னன்னா, அவங்களோட படங்களின் செலக்ஷன். இந்திப் படங்களில் ஆரம்பிச்சு தமிழ் வரைக்கும் சூப்பரா தேர்ந்தெடுத்து நடிக்கிறாங்க. ஸ்டாண்டர்டு கேர்ள். ‘மௌன ராக’த்தில் ரேவதி ரோல் எவ்வளவு முக்கியம்? அப்படி ஒரு முக்கியத்தில் ப்ரியா ஆனந்த் வர்றாங்க. பிகு எல்லாம் கிடையாது. ரொம்ப டவுன் டூ எர்த் ரோலில் அதற்கான நியாயத்தை துல்லியமா செய்திருக்காங்க.

‘தேவர் மகனு’க்கு பிறகு அதே கெட்டப்பில் பின்னுறார் நாசர். கேமராவுக்குப் பின்னாடி சாந்தமா இருக்கிற மனுஷன், கேமராக்கு முன்னாடி வந்திட்டா உறுமுற அழகே அழகு! தம்பி ராமய்யா இப்ப வேற இடத்துக்கு வந்துடுற பொஸிஷனில் இருக்கார். அவரை டைரக்ட் பண்ணாவே உற்சாகமா இருக்கு!’’ ‘‘பாடல்கள் இமான் இசையில் நல்லாவே இருக்கு..!’’

‘‘அவரது டியூன்கள் சூத்திரம் மாதிரி இல்லாமல், எளிமையா இருக்கு. இத்தனைக்கும் அவர் ரொம்பவும் பிஸி. படம் முடியும்னா பண்றார். எப்ப ஆரம்பம், ரிலீஸ் எனத் தேதிகளைக் கேட்டுட்டுத்தான் ஒப்புக்கறார். பாடல்களை ‘தர்றேன்.... தர்றேன்’னு காக்க வைக்கிற வேலையே கிடையாது. சீனை எடுத்திட்டு அவரை நம்பி அங்கேயே பாட்டும் எடுக்கலாம். அவர் இசையில் பண்பாடு இருக்கு. தமிழ் மண்ணோட அடையாளம் இருக்கு. ஒரு சுகம் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு இமான், இளையராஜா போன பாதையில் அடியெடுத்து வச்சு போய்க்கிட்டு இருக்கார்னு தோணுது.

முக்கியமா அவர் இசையில் இருக்கிறது உயிர். அதுதான் அழகு. என்னோட பி.ஜி.முத்தையாதான் இதிலும் கேமராமேன். நான் புரொடியூசரின் டைரக்டராக இருப்பதற்கும் அவர்தான் முழு முதல் காரணம். தார்க்குச்சியை வச்சுக்கிட்டு அதட்டிக்கிட்டே இருக்காத, ஷூட்டிங் ஸ்பாட் கூட வராத தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அவரும், நானும் சேர்ந்தே இந்தப் படம் தயாரிக்கிறோம்!’’

- நா.கதிர்வேலன்