பசுமை பிசினஸ்!



சீக்கிரம் பணக்காரராக வேண்டுமா? சமூகத்தில் பெயரும், புகழும் வேண்டுமா? உடனே தொடங்குங்கள் ஒரு பசுமை இயக்கத்தை. மரம் நடுவிழா, ஏரி தூர் வாரும் விழா என்று எதையாவது நடத்தி கேமரா முன்பாக போஸ் கொடுங்கள். அந்தச் செய்தியை அனுப்பினால் போதும்... ‘கட்டிங்’ கைக்கு வந்துவிடும். அதற்கென்றே காத்திருக்கின்றன பன்னாட்டு நிறுவனங்களும், சில தரகு அமைப்புகளும்.

உண்மைதான் மக்களே! தமிழகத்தின் பல பசுமைப்பணிகள் இந்த லட்சணத்தில்தான் நடந்து கொண்டிருக்கின்றன. அக்கறையும், அர்ப்பணிப்புமாக சூழலியல் வேலைகளைச் செய்துவரும் நண்பர்கள் இங்கே நிறைய இருக்கிறார்கள். அவர்களைப் புண்படுத்துவதல்ல நம் நோக்கம். இந்திய சுற்றுச்சூழலையும், இந்தியர்களின் ஆரோக்கியத்தையும் சிதைத்து லாபத்தைக் குவிக்கும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி ‘சுற்றுச்சூழலை வளர்த்தெடுக்கும் சில சமூக ஆர்வலர்களை’ப் பற்றிய ஆதங்கமே இக்கட்டுரை.

ஒரு பக்கம் சாலைகளுக்காகவும், கட்டுமானங்களுக்காகவும் ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்படுகின்றன. ஒரு மரம் வெட்டினால் 3 மரம் நட வேண்டும் என்ற நோக்கில் அரசுகள் பல கோடிகளை அதற்காக ஒதுக்குகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள், தாங்கள் நிகழ்த்தும் சீரழிவுகளை மூடி மறைக்க ‘பெரு நிறுவன சமூகப் பொறுப்புணர்வு’  (Corporate social responsibility) என்ற பெயரில் சில கோடிகளை (லாபத்தில் 2%) கிள்ளிப் போடுகின்றன.

இவற்றையெல்லாம் கையகப்படுத்திக் கொண்டு ‘லட்சம் மரம் நடுகிறோம்; கோடி மரம் நடுகிறோம்’ என்று கணக்குகளை அள்ளி விட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறார்கள் சிலர். ஆனால் அத்தனை மரக்கன்றுகளை எங்கே நட்டார்கள்? எத்தனை கன்றுகள் மரமாகி தழைத்து நிற்கின்றன? ஒவ்வொரு மரக்கன்றின் பேரிலும் எவ்வளவு நிதி வசூலித்தார்கள்? என்ற எந்தக் கேள்விக்கும் விடையில்லை.

இன்னொரு பக்கம் ஜப்பானும், அமெரிக்காவும் காற்றில் கலந்துவிடும் கரியமில வாயுக்களுக்காக நம்மூரில் மரம் வளர்த்து ‘கார்பன் டிரேடிங்’ என்ற பெயரில் காசு பார்க்கிறார்கள் சிலர். ஆத்மார்த்தமாக செய்ய வேண்டிய பசுமைப்பணி இப்போது வளம் கொழிக்கும் வணிகமாக மாறிவிட்டதாக வருந்துகிறார்கள் உண்மையான சூழலியலாளர்கள்.

‘‘இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன்பு 60% காடுகள் இருந்தது. இப்போது 33% கூட இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் 22% கூட காடு இல்லை. காடுகள் அழிக்கப்பட்டது ஒருபுறம் என்றால், சமவெளிகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டி அழிக்கப்பட்டு விட்டன. இதேநிலை நீடித்தால் தமிழகம் பெரும் வறட்சியையும், பஞ்சத்தையும் எதிர்கொள்ள நேரிடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். மிகவும் வீரியத்தோடு சூழலியல் ஆர்வலர்கள் செயல்பட வேண்டிய காலகட்டம் இது. ஆனால் இதில் புரளும் பணத்தைக் குறி வைத்து பலர் சூழலியல் ஆர்வலர்களாக அவதரிக்கிறார்கள். மரங்கள் நடுவதாகச் சொல்லி நிதி வசூலிக்கிறார்கள்.

இன்று கன்றை நட்டால் நாளைக்கே அது மரமாகி விடாது. மரம் நடுவது என்பது குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்குவது போன்ற பணி. எத்தனை பேர் நட்ட மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் பசுமை சார்ந்த பணிகளுக்காக பல கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அவை ஏற்படுத்திய விளைவுகள் என்ன? நட்ட மரங்களில் எத்தனை இன்று உயிரோடு நிற்கின்றன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது’’ என்கிறார் சூழலியலாளர் ரமேஷ் கருப்பையா.

‘‘5000 மாணவர்கள் படிக்கும் ஒரு கல்லூரிக்குப் போய் ஒரு மரக்கன்றை நட்டுவிட்டு மாணவர்களிடம் ஆளுக்கொரு கன்றை கொடுத்துவிட்டு தங்கள் கணக்கில் 5001 மரங்களைச் சேர்த்துக் கொள்கிறார்கள் சிலர். மாணவர்கள் அக்கன்றுகளை என்ன செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. சில நிறுவனங்கள் ஆங்காங்கே நர்சரிகள் வைத்து கன்றுகளை வளர்த்து விற்கிறார்கள். தனியாக அதற்கு நிதியும் வசூலிக்கிறார்கள். விற்ற கன்றுகளை தங்கள் கணக்கில் சேர்த்து பன்னாட்டு நிறுவனங்களிடம் பணமும் வாங்குகிறார்கள்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நம் அரசு தடையில்லா மின்சாரம், தடையில்லா தண்ணீர் என்று ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது. அந்நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அதற்கு பிரதியுபகாரமாக அவர்கள் தங்கள் லாபத்தில் கொஞ்சத்தை இறைக்கிறார்கள். அதையும் கூட முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் வேதனை. இது தேசத்தின் உயிரோடும் ஆன்மாவோடும் விளையாடும் செயல்’’ என்று குமுறுகிறார் ரமேஷ் கருப்பையா.

சூழலியல் செயற்பாட்டாளர் குக்கூ சிவராஜ் ரமேஷ் இந்தக் குரலோடு ஒன்றிணைகிறார். ‘‘தமிழகத்தில் மரம் நட்டால் ஜப்பானில் மழை பெய்யும் என்று ஒரு ஆய்வு இருக்கிறது. அதனால் தமிழக பசுமை அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து நிறைய நிதியுதவி கிடைக்கிறது. அந்த நிதியெல்லாம் விழலுக்கு இரைத்த நீராகிவிடுகிறது.

 இங்கே விதை சேகரிப்பைக் கூட பிசினஸ் மாதிரி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பசுமைப்பணிகள் செய்யும் தொண்டு நிறுவனங்கள் நிறைய உண்டு. எல்லா நிறுவனங்களும் அர்ப்பணிப்போடு செயலில் இறங்கியிருந்தால் இன்று தமிழ்நாடு பசுமைப் பூங்காவாக மாறியிருக்கும்’’ என்கிறார் சிவராஜ்.

‘‘தமிழக அரசு ஒதுக்கும் சுற்றுச்சூழல் மேம்பாடு தொடர்பான நிதியைக் கையாள்வது பொதுப்பணித்துறையின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் குழுமக்கோட்டம். பாசனம், விவசாயம், மரம் நடுதல், மூலிகைப்பண்ணை, கருத்தரங்கங்கள் நடத்துதல் என தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்நிறுவனம் பல பணிகளைச் செய்கிறது.

பசுமை மேம்பாட்டுக்கு உலக வங்கி வழங்கும் நிதியையும் இந்நிறுவனமே செலவு செய்யும். உண்மையான அர்ப்பணிப்போடு பணி செய்யும் பலருக்கும் இவர்கள் வாய்ப்பு தருவதில்லை’’ என வருந்துகிறார், சூழலியலாளரும் மரம் வளர்ப் பை தன் வாழ்வின் அங்கமாகக் கொண்டவருமான கோவை யோகநாதன்.

சூழலியல் அறிஞர் பாமயன் இந்த பசுமை பிசினஸின் பின்னணியைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்... ‘‘1992க்கு முன்பு பசுமை சார்ந்த பணிகளுக்கான நிதியை ஐ.நா.வின் சார்பு அமைப்புகளான உணவு மற்றும் வேளாண் நிறுவனம், யு.என்.டி.பி. ஆகியவை நிர்வகித்தன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்கள் வருமானத்தில் 3% முதல் 4% நிதியை இந்நிறுவனங்களுக்கு ஒதுக்கின. உலகமயமாக்கலுக்குப் பிறகு உலக வர்த்தக நிறுவனமும், உலக வங்கியும் இந்தப் பணிகளில் நுழைந்தன.

 அதன்பிறகு உலக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக பன்னாட்டு நிறுவனங்கள் தலையெடுத்தன. வளர்ச்சித் திட்டங்களையும் பன்னாட்டு நிறுவனங்களே முடிவுசெய்யும் நிலை ஏற்பட்டது. ஒருநாட்டில் காலூன்றி அந்நாட்டின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் அழித்துவிட்டு, அதற்கு ஈடாக தங்கள் லாபத்தில் ஒரு சின்னப் பகுதியைக் கொடுப்பதுதான் பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சித் திட்டம்;

கற்பழித்து விட்டு நஷ்ட ஈடு கொடுப்பதைப் போல. குளோபல் வார்மிங் பீதி கிளம்பிய பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் நிதியை பசுமைப் பணிக்காகத் திருப்பி விட்டன. இந்த நிதியைக் குறி வைத்து ஏராளமான தொண்டு நிறுவனங்கள் முளைத்திருக்கின்றன. ஆனால் அந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படவில்லை...’’ என்கிறார் பாமயன்.

உணவுக்கான விவசாயத்தை பணத்துக்கானதாக மாற்றியதைப் போலவே மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய மரம் வளர்ப்பையும் ‘கார்பன் டிரேடிங்’ என்ற பெயரில் வர்த்தகமாக மாற்றிவிட்டன மேலை நாடுகள். அதென்ன கார்பன் டிரேடிங்? அமெரிக்காவில் உள்ள ஒரு தொழிற்சாலை காற்றில் கலந்துவிடும் கரியமில வாயுக்காக ஆண்டிப் பட்டியிலும், அரசப்பட்டியிலும் மரம் வளர்ப்பது.

அதற்காக அந்த அமெரிக்க நிறுவனத்திடம் காசு வாங்குவது. ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட அளவே கரியமில வாயுக்களை வெளியிட வேண்டும் என்று ஜப்பானின் கியோட்டோ நகரத்தில் உலக நாடுகள் கூடி ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். அது ஒரு புதுத்தொழிலுக்கே வழி வகுத்து விட்டது.

நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மீறி கரியமில வாயுக்களை வெளியிடுகிற ஒரு நிறுவனம், அதை ஈடுகட்டும் விதமாக எங்காவது பசுமைப்பணிகளில் ஈடுபட வேண்டும். மரம் வளர்க்கலாம். இயற்கை வேளாண்மை செய்யலாம். கைத்தறி சுற்றலாம்.

அல்லது இதையெல்லாம் செய்பவர்களுக்குப் பணம் கொடுத்து அதற்கான கிரெடிட்டை வாங்கி சமர்ப்பிக்கலாம். இதற்குப் பெயர்தான் கார்பன் டிரேடிங். இத்தனை மரம் வளர்த்தால் இத்தனை கார்பன் கிரெடிட் என்று கணக்கு இருக்கிறது. ஒரு கார்பன் கிரெட்டின் விலை சுமார் 25 டாலர். இப்போது தமிழ்நாட்டில் பலர் இந்த கார்பன் கிரெடிட் பிசினசில் இறங்கி காசு பார்க்கிறார்கள்.

ஏதோ ஒரு விதத்தில் மரங்கள் வளர்க்கப்படுவது நல்ல விஷயம். ஆனால் மரம் வளர்ப்பதின் அடிப்படையே பல்லுயிர்ப் பெருக்கம்தான். கார்பன் கிரெடிட் விற்பனை செய்ய மரம் வளர்ப்பவர்கள் நம் மண்ணுக்குத் தொடர்பில்லாத குமிழ், தேக்கு, தீக்குச்சி போன்ற விரைவில் வெட்டத்தகுந்த மரங்களை மட்டுமே நட்டு வளர்க்கிறார்கள். இதனால் நம் சுற்றுச்சூழலுக்கு ஒரு பலனும் இல்லை. மேலும் இவர்கள் விளைநிலங்களிலேயே மரம் வளர்ப்பதால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படுகிறது.

‘‘திருவண்ணாமலையில் உள்ள கவுத்தி-வேடியப்பன் மலையில் இரும்புத்தாது வெட்டி எடுக்க முனைந்தபோது அங்குள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிவிட்டு அதற்குப் பதிலாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மரங்கள் நட்டு வளர்ப்போம் என்று சொன்னார்கள். இதனால் யாருக்கு லாபம்?  இதுவா வளர்ச்சி? எல்லா திட்டங்களிலும் உள்ளூர் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.

ஆனால் தொண்டு நிறுவனங்கள் மக்களிடமிருந்து ஒதுங்குகின்றன. தொழில் வளர்ச்சி கட்டாயம் தேவை. ஆனால் அது நீடித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும்’’ என்கிறார் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் சுந்தர்ராஜன்.

பசுமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்களின் செயல்பாடு பற்றி ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் காளிதாஸ் என்ன சொல்கிறார்? 

‘‘பசுமைப் பணி என்பது ‘பிசினஸ் செக்டார்’ மாதிரி ஆகிவிட்டது என்பது உண்மைதான். 90% பேர் இதனால் நமக்கென்ன பலன் என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால் 10% பேர் உண்மையான அர்ப்பணிப்போடு செயல்படுகிறார்கள். நமது விமர்சனம் இந்த 10% பேரை காயப்படுத்திவிடக்கூடாது. எந்த விளம்பரமும் இல்லாமல், எவரிடமும் கையேந்தாமல் பல அமைப்புகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. ஆனால் புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படும் சிலர் மரம் வளர்ப்பதாகச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள்.

தமிழக முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மரம் நடப்படும் என்று அறிவிக்கிறார்கள். அதில் எத்தனை மரங்கள் நட்டு வளர்த்தெடுக்கப்பட்டன? அவ்வளவு மரங்கள் நட எங்கே இடமிருக்கிறது? ஒரு மரம் வெட்டினால் 3 மரங்கள் நடவேண்டும் என்கிறது நீதிமன்றத் தீர்ப்பு. சாலைப்பணிகளுக்காக லட்சக்கணக்கான மரங்களை வெட்டியிருக்கிறார்கள். அதற்கு ஈடாக எத்தனை மரங்களை எங்கே நட்டிருக்கிறார்கள்?

சாலை ஓரங்களில் சர்வீஸ் லைன், கேபிள் லைனுக்கு இடம் ஒதுக்குகிறார்களே ஒழிய மரங்கள் நடுவதற்கு இடங்கள் ஒதுக்கப்படுவதே இல்லை. பசுமை அமைப்புகளும் கூட இப்படித்தான் செயல்படுகின்றன. பசுமையை பிசினஸாக்கி பிழைப்பவர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது’’ என்கிறார் அவர். இனி வருங்காலங்களிலேனும் பசுமைப்பணிகளை அர்ப்பணிப்போடும், பொறுப்புணர்வோடும் முன்னெடுக்காவிட்டால் இயற்கை தன் எதிர்விளைவை நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

இன்று கன்றை நட்டால் நாளைக்கே அது மரமாகி விடாது. மரம் நடுவது என்பது குழந்தையைப் பெற்று, வளர்த்து, ஆளாக்குவது போன்ற பணி.

குளோபல் வார்மிங் என்பது வதந்தி!

குளோபல் வார்மிங் பீதியை முன்வைத்தே உலகெங்கும் பசுமை பிசினஸ் பரவி வருகிறது. ஆனால் ‘‘குளோபல் வார்மிங் என்பதே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு வதந்தி’’ என்கிறார் புவி வெப்பமயமாதல் பற்றி ‘ஆக்சிஸ் ஆஃப் இந்திரா’ என்கிற நூலை எழுதியுள்ள பிரபாகரன். ‘‘தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளிவிடும் பசுமை இல்ல வாயுக்களால் புவி வெப்பமயமாகிறது; அதனால் துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் அதிகரிக்கும்;

மொரீஷியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகள் கடலில் மூழ்கிவிடும் என்று வளர்ந்த நாடுகள் வதந்தியை உருவாக்கிப் பரப்புகின்றன. உண்மையில் குளோபல் வார்மிங் என்பதே மோசடி. இதை நிரூபிக்க பல ஆய்வுகள் இருக்கின்றன. வெறும் 50 வருட டேட்டாவை வைத்துக்கொண்டு 200 வருடங்களுக்குப் பிறகு நடக்க இருப்பதைக் கணிக்கிறார்கள். இதற்குப் பின்னால் கார்பன் டிரேடிங் என்ற ஒரு வணிகமே நடந்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மர வளர்ப்புக்காக பெரும் தொகையை செலவு செய்கின்றன.

இதைப்போலவே ‘ஓசோன் ஒட்டை’யும் பசுமை வணிகத்தை வேகப்படுத்தியிருக்கிறது. ஓசோன் ஓட்டை என்பது தென்துருவப் பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இதற்கு மாறாக, மக்கள் வசிக்கும் பகுதியில் ஓசோன் ஓட்டை விழுந்தது போலவும், அதனால் புற ஊதாக் கதிர் நேரடியாகத் தாக்குவது போலவும் ஒருவித பயத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இது தொடர்பான ஆய்வுகளில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கின்றன. இயல்பாகவே தன்னை சமப்படுத்திக்கொள்ளும் சக்தி இயற்கைக்கு உண்டு. இதை மக்களும் பசுமை அமைப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார் அவர்.

தமிழகத்தில் மரம் நட்டால் ஜப்பானில் மழை பெய்யும் என்று ஒரு ஆய்வு இருக்கிறது. அதனால் தமிழக பசுமை அமைப்புகளுக்கு ஜப்பானிலிருந்து நிறைய நிதியுதவி கிடைக்கிறது.

- வெ.நீலகண்டன்,
பேராச்சி கண்ணன்