அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் தமிழப் பெண்!



2012, டிசம்பர்... லண்டன்ல பயங்கர குளிர். அப்போதான் அண்டார்டிகாவைப் பத்தின Frozen Planet  விவரணப் படத்தை பார்த்தோம். ‘இது எங்களுக்கு மட்டுமே சொந்தமான சுதந்திர பூமி’ங்கிற மமதையோட பென்குவின்கள் தத்தித் தாவி குதூகலிக்கிறதைப் பார்க்க பொறாமையா இருந்துச்சு. ‘இந்த இடங்களுக்கெல்லாம் நீ எப்போ போகப் போறே?’ன்னு அப்பா கேட்டார்.

 ‘நிச்சயம் ஒருநாள் போவேன்’னு சொன்னேன். அந்தப் பெருங்கனவு ஒரே வருடத்தில நிறைவேறும்னு எதிர்பார்க்கலே...’’ - கண்கள் மின்ன, உற்சாகமும் பெருமிதமுமாகப் பேசுகிறார் ஷானு சுப்ரா. பனிக்குள் புதைந்து கிடக்கும் ரகசிய நிலப்பரப்பான அண்டார்டிகாவில் கால்பதித்த முதல் தமிழ்ப் பெண்.

லண்டனில் செட்டிலாகியுள்ள ஷானு சுப்ராவுக்கு பூர்வீகம் சங்ககிரி. இந்த 25 வயது பெண்ணுக்கு நாவலாசிரியர், புகைப்படக் கலைஞர், சமூக ஆய்வாளர், 200 அதிகாரிகளுக்குத் தலைமை வகிக்கும் நிதி நிர்வாகி என ஏகப்பட்ட முகங்கள். பெரு, பிரேசில், அர்ஜென்டினா, பாடகோனியா என பல நாடுகளுக்குப் பயணித்து, மனிதர்கள் பாதம் படாத நிலப்பரப்பை ஆவணப்படுத்துவதில் அலாதி ஆர்வம்.

 உலகெங்கும் உள்ள ஆதிகுடிகளின் மரபு சார்ந்த வாழ்க்கையை காட்சித் தொகுப்பாக்குவதிலும் பெரும் முனைப்புக் காட்டுகிறார். பிரிட்டானிய ஆசியர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இவர் எழுதியுள்ள ‘ Brown British"   நாவல் பெரும் அனலைக் கிளப்பும் என்கிறார்கள் விமர்சகர்கள். எந்த முகப்பூச்சும் இல்லாமல் மனசுக்கு நெருக்கமாகப் பேசுகிறார் ஷானு.

‘‘சங்ககிரியில பிறந்து மைசூர்ல படிச்சவ நான். லண்டன் மிடில்செக்ஸ் யுனிவர்சிடியில ஸ்காலர்ஷிப்போட பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. படிப்பு முடிந்ததும் இங்கேயே வேலை. ‘பிளாக்ஸ்டோன்’ என்னும் நிறுவனத்தில செயல்திட்ட அதிகாரி. கூடவே, கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிடியில் ‘சர்வதேச அபிவிருத்தியில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு’ பற்றி முதுகலை படிக்கிறேன்.

அப்பா சிவசுப்பிரமணியம் மைசூர்ல இருக்கார். விவசாயி. கூடவே ஒரு கல்வி நிறுவனத்தையும் நடத்துகிறார். அம்மா வசந்தி... அப்பாவுக்கு எல்லா விதத்திலும் பக்கபலம். தங்கை, சங்கீர்த்தனா டாக்டர். தம்பி ரகு, லண்டன் ராணி மேரி யுனிவர்சிடியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிக்கிறான். இதுதான் எங்க குடும்பப் பல்கலைக்கழகம்.

சின்ன வயதிலேயே எனக்கு எழுத்தில் ஆர்வமுண்டு. 17 வயதில் படிக்க லண்டனுக்கு வந்தேன். இங்கே வந்தபிறகு பயணத்தின் மேல் ஈடுபாடு அதிகமானது. முதல் பயணம் ஹாலந்து நாட்டுக்கு. அந்த அனுபவங்கள் பற்றி என் குடும்பத்தாருக்கு எழுதினேன். ‘எழுத்தும் புகைப்படங்களும் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமுள்ள ஒரு பிரதேசத்தை அருகில் இருந்து பார்ப்பதைப் போன்ற அனுபவத்தை ஏற்படுத்துது’ன்னு சொன்னாங்க. அதுக்குப் பிறகு பயணம் வாழ்க்கையில பிரதான அங்கமாகி விட்டது’’ என்கிற ஷானுவின் இயற்பெயர் சாதனா.

அண்டார்டிகா பயணம் பற்றிக் கேட்டால் சிலிர்ப்போடு பேசுகிறார் ஷானு. ‘‘அண்டார்டிகாவை சொர்க்கம் என்று சொல்லலாம். நரகம் என்றும் சொல்லலாம். ஈவு, இரக்கம் இல்லாத குளிர். மொத்தம் 26 நாள் பயணம். ளிக்ஷீtமீறீவீமீs கப்பல்தான் எங்களுக்கான வீடு. முதல் 3 நாட்கள் கடல் பயணத்தில் அச்சமும், பிரமிப்பும் என்னைத் தூங்க விடவில்லை. 4ம் நாள் காலை ஃபாக்லாந்து தீவை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் பென்குவின்கள், கடற்பறவைகள். 5 நாட்கள் நடந்து திரிந்து முழுத்தீவையும் சுற்றிப் பார்த்தோம். முதன்முறையாக அங்குதான் பென்குவின் குஞ்சுகளைப் பார்த்தேன். 

பென்குவின்களுடைய வாழ்க்கை பிரமிப்பும், சுவாரஸ்யமும் நிறைந்தது. ஒரு பென்குவின் மற்ற பென்குவின்கள் சேகரித்து வைத்திருக்கும் கற்களைத் திருடித்தான் தனக்கான கூட்டைக் கட்டும். அப்படிக் கட்டப்படும் கூடுகளில் எந்தக்கூடு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கிறதோ அந்தக் கூட்டின் உரிமையாளரை துணையாக சேர்க்க பிற பென்குவின்களுக்குள் போட்டி நடக்கும். அருகாமையில் நின்று அந்த வாழ்க்கையை தரிசித்த அனுபவத்தை வார்த்தையால் சொல்ல முடியாது.

மீண்டும் பயணம். 11ம் நாள் அதிகாலை 6 மணிக்கு என்னை எழுப்பி ஒரு அதிசயக் காட்சியை காட்டினார்கள். மிகப்பெரிய பென்குவின் காலனி. குறைந்தது 5 லட்சம் இருக்கும். அந்த பிரமிப்பிலிருந்து மீளவே பல மணி நேரமானது. 19ம் நாள் அண்டார்டிகாவை அடைந்தோம். அப்போது தட்பவெப்பம், மைனஸ் 20 டிகிரி. ஆறு நாட்கள் அந்த பனித்திடலில் நடந்து திரிந்தோம். ஆறு அடுக்குகள் துணி அணிந்தும் உள்ளுக்குள் ஊடுருவி ஊசியாகக் குத்தியது குளிர். அண்டார்டிகா ஒரு வெள்ளை வனம்.

பனி படர்ந்த பாலைநிலம். எங்கும் எதிலும் வெண்மை. 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர். ஆராய்ச்சியாளர்களைத் தவிர வேறெவரும் கால் வைக்கத் துணியாத வெற்றுப்பரப்பு. குடிநீர் கூட கிடைக்காது. சீற்றமிக்க பசிபிக் கடலின் ஓசையைத் தவிர அச்சமூட்டும் நிசப்தம். அண்டார்டிகாவின் அழகே அதன் சாபம்.

கப்பலிலிருந்து காற்று நிரப்பிய ரப்பர் படகில்தான் கரைக்குச் செல்லமுடியும். எந்நேரமும் கவிழும் ஆபத்து உண்டு. கவிழ்ந்தால் உறைந்துபோக வேண்டியதுதான். வீசும் காற்றே சதையை வறட்சியாக்கி கிழித்துப் போடும். ரத்தம் கசியும். அங்கு எந்தப் பொருளையும் வீசி எறிய முடியாது. சர்வதேச சட்டப்படி, எல்லாக் கழிவுகளையும் நம்முடனே கப்பலுக்கு திருப்பிக் கொண்டு வந்துவிட வேண்டும். அங்கு உலவும் சீல் எனப்படும் நீர்நாய்கள் மிகவும் பயங்கரமானவை.

மிதக்கும் பனிக்கட்டிகளும், வெள்ளைத் திமிங்கலங்களும் படகைச் சூழ்ந்து கொள்ளும். இவற்றையெல்லாம் கடந்துதான் அண்டார்டிகாவின் பேரழகைத் தரிசிக்க வேண்டும்...’’ - ஷானு சொல்வதைக் கேட்க நமக்கு உயிர் சில்லிடுகிறது. இந்தாண்டு செப்டம்பரில் உலகின் இரண்டாவது நீள நதியாகிய காங்கோ ஆற்றின் வடிநிலப்பகுதியைக் கடக்கவும், உலகில் மிகவும் குள்ளமான மனிதர்களைப் பார்க்கவும், மனிதர்களை வேட்டையாடி சாப்பிடும் மனிதர்களை சந்தித்து நேர்காணல் செய்யவும் திட்டமிட்டுள்ளார் ஷானு.

- வெ.நீலகண்டன்