நடைவெளிப் பயணம்



எழுதியதில் பிழை எழுத்துப் பிழை சந்திரபாபுவின் சகோதரர் ஜவஹர் ஒரு பிழைத்திருத்தம் செய்தார். நடிகர் சந்திரபாபு ஒன்றல்ல, இரண்டு ஜெமினி படங்களில் நடித்திருக்கிறார்! ஒன்று, ‘மூன்று பிள்ளைகள்’. இரண்டாவது, ‘ராஜி என் கண்மணி’. குத்துச் சண்டை பார்க்கும் வரிசைகளில் இருப்பார். ஒரு குத்துச்சண்டை வீரர் இன்னொருவரை வீழ்த்த... சந்திரபாபு மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்!

சந்திரபாபு அப்படி நெடுஞ்சாண் கிடையாகப் பல படங்களில் விழுந்திருக்கிறார். நான் கவலைப்பட்டிருக்கிறேன். நிச்சயம் பலமுறை அவருக்கு அடிபட்டிருக்கும். தி.க.சி. இரங்கலில் நான் ஒரு கவிஞரைக் குறிப்பட்டிருப்பேன். அது கே.சி.எஸ்.அருணாசலம். இவருக்கு ‘ஸ்டாலின் பரிசு’ கொடுத்த நிகழ்ச்சிக்கு நான் போயிருந்தேன். பரிசு பெற்ற நூலின் பெயர் ‘கவிதை என் கைவாள்’. உள்ளூர்க் கலவரங்களுக்கு வாள் சரியாக இருக்கலாம், ஆனால் நிஜப் போர்களுக்கு? ஸ்டாலினே ஜெர்மனியோடு வாளேந்தி சண்டை போட்டிருப்பாரா?

கவிஞர்களுக்கு வாள் சரியாக இருக்கலாம், ஆனால் அவர்களை வீழ்த்த அச்சுப்பிழை போதும். ‘‘கவிஞனால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும், அச்சுப்பிழையைத் தவிர’’ என்று ஆங்கிலக் கவிஞர் பைரன் கூறினார். ஆனால் அவருடைய படைப்புகள் அச்சில் வரும்போது அச்சுப்பிழையைப் பொறுத்துக் கொண்டேயாக வேண்டியிருந்தது இந்த அச்சுப்பிழைகள் பைரன் போன்றோருக்கு மட்டும் தானம் செய்யப்படவில்லை.

 மேடம் பிளாவாட்ஸ்கி போன்ற ஆன்மிகவாதிகளுக்கும் அருளப்பட்டது. மேடம் பிளாவாட்ஸ்கி ஓர் ரஷ்யப் பெண்மணி. அவளுக்கு வசதி இருந்திருக்கிறது என்று தெரிகிறது. கர்னல் ஆல்காட் என்ற அமெரிக்கருடன் சேர்ந்து தியாசாஃபிகல் சொசைட்டி என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தினார்.

அதன் தலைமைச் செயலகம் சென்னை அடையாரில் உள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவிலும் ஐரோப்பியக் கண்டத்திலும் ஆன்மிகம் என்ற பெயரில் பல குழுக்கள் தோன்றின; பல போதகர்கள் தோன்றினார்கள். ‘இந்தியாவில்தான் பகவான்களும் சுவாமிகளுமா? இங்கேயும் உண்டு’ என்பது போலப் பல இயக்கங்கள் தோன்றின.

அந்த நாளில் தோன்றிய இலக்கியங்கள், தலைவர்கள், சமூக நிலை போன்ற எல்லாவற்றையும் இவை பாதித்தன. எமெர்சன் தன்னையும் அவருடன் நெருங்கிப் பழகிய தோரோ, ஹாத்தார்ன் போன்றோரையும் பரம்பொருள்வாதிகளாகக் கருதினார். அவர்கள் ‘பாஸ்டன் பிராமின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார்கள்.

மிஸஸ் பேகர் எட்டி என்பவர் விவிலியத்துக்கு ஒரு புது விளக்கவுரை எழுதி, இந்திய வேதாந்தத்தில் ‘பூர்ணம்’ (முழுமையானது) என்பது உள்ளது போல மனிதன் பூர்ணமானவன் என்றும், முழு ஆரோக்கியத்துடன் இருப்பவன் என்றும் அறிவித்தார். கிறிஸ்துபிரான் பலரைக் குணப்படுத்தியதாக அவருடைய நான்கு வரலாறுகளிலும் உள்ளது. அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு மருத்துவக் கோட்பாடு அமைத்தார்.  ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ ஓர் மருத்துவ முறையாகவே கருதப்பட்டது.

முதல் உலகப் போரில் காயமுற்ற அமெரிக்கத் துருப்புகளில் வேண்டுவோருக்கு ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ மருத்துவர்கள், தாதியர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான் என் குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை அடையாரில் இயங்கிய ‘கிறிஸ்டியன் சயின்ஸ்’ குழுவில் சேர்ந்தேன். ‘நம்பு, விசுவாசமாக இரு...’ ஆனால் அந்த நூல்களில் உள்ள அச்சுப்பிழைகளுக்கு நடுவில் ‘வாழ்வா, சாவா’ என்பதில் எதை நம்புவது?

பிளாவாட்ஸ்கி அம்மையாரின் ஆதார நூலாகிய ‘ஐஸிஸ் அன்வீல்ட்’ என்ற பெரிய நூலின் ஒரு திருத்தப் பதிப்பு வெளி வருவதற்குள் அவர் மறைந்து விட்டார். இருபத்தொன்றாவது நூற்றாண்டு பிறந்தவுடன் மேலையப் பிரசுர அமைப்புகள் கூடி ‘இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த நூல் எது’ என்று ஒரு தேர்வு நடத்தினார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்த நூல்... ஜேம்ஸ் ஜாய்ஸ் என்ற எழுத்தாளர் படைத்த ‘உலிஸிஸ்.’

ஆனால் ‘உலிஸிஸ்’ வெளியான கதை, எழுத்தாளர்களின் உற்சாகத்தைப் போக்கி விடும். ‘நமக்கு நல்லது உண்டாகும்’ என்று ஒருவர் பெரிய பணியொன்று புரிகிறார். ஆனால் அவருக்கு நம் தேவை, எதிர்பார்ப்புகள் சரியாகத் தெரியாது. நல்லெண்ணத்தின் பெயரில் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி என்று பாரிஸ் நகரத்தில் எழுத்தாளர்களுக்கென்றே ஒரு புத்தகக் கடையை ஸில்வியா பீச் என்றோர் அம்மாள் நடத்தி வந்தாள். அவர்தான் இதை வெளியிட்டார்.

ஜேம்ஸ் ஜாய்ஸுடைய நாவல் அமெரிக்காவில் ஒரு சிறு பத்திரிகையில் வெளி வந்தது. இன்றும் ஜாய்ஸ் என்ன எண்ணி அந்த நாவலை எழுதினார் என்று ஹேஷ்யங்கள்தான் நிலவுகின்றன. ஐசக் ஸிங்கர் போன்ற மகத்தான எழுத்தாளர்கள் ‘‘அந்த நாவல் ஒரு ஏமாற்று வேலை’’ என்றார்கள். அதை விளக்குவதாகப் பேராசிரியர்கள் உரை மேல் உரை எழுத... ‘‘ஒரு தொழிற்சாலையை ஜாய்ஸ் ஆரம்பித்து விட்டார்’’ என்று உறுதியாகக் கூறினார்கள். இது போதாது என்று அமெரிக்காவில் அது ஆபாச எழுத்து என்று தடையே செய்யப்பட்டது.

ஜாய்ஸ் அதை ஆரம்பத்தில் நூலாக்க முயன்றபோது, ஷேக்ஸ்பியர் அண்டு கம்பெனியின் ஸில்வியா பீச், முழு நாவலையும் வெளியிடுவதாக உறுதியளித்து, அதுபோலவே வெளியிடவும் செய்து விட்டாள். ஆனால் அந்த நூல் வெளியானபோது ஜாய்ஸ் தவித்துக் கொண்டிருந்தார்.  நான்கு பகுதிகளில் அவர் அறிந்து நாற்பது பிழைகள். ஜாய்ஸுக்குச் சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை. அந்த நாவலை அவர் வாழ்நாளில் பிழை திருத்த முடியவில்லை.

அவருடைய கடைசி வருடங்களில் பார்வை போய் விட்டது என்றார்கள். பிழை திருத்தியே போயிருக்கலாம். அவர் இறந்து பல ஆண்டுகள் பல பேராசிரியர்கள் கூடி விவாதித்து, ‘இதுவே சரியான பிரதி’ என்று ஒரு பிரதியைத் தயாரித்தார்கள். இரண்டரை லட்சம் சொற்களுக்கும் மேலாக உள்ள ‘உலிஸிஸ்’ நாவலை அதன்பின் முழுமையான பதிப்பு என வெளியிட்டார்கள். ஆவி உலகம் என்று இருந்து அங்கு ஜேம்ஸ் ஜாய்ஸ் இருந்தால் அவர் என்ன எண்ணியிருப்பார்?

மீண்டும் ஆபாசம் என்று தடை. ஆனால் இம்முறை அந்த ஜட்ஜுக்கு யதார்த்தம் நன்கு தெரிந்திருக்கிறது. அவர் கூறினார்: ‘‘கிளர்ச்சிக்கு என்று ஒருவனால் இந்த நூலைப் படிக்க முடிந்தால், உண்மையில் அவனுக்குப் பரிசு தர வேண்டும்’’.

தணிக்கைத் தடை நீங்கியது. ஆனால் நூலைப் படிக்க வேண்டுமே? பொதுவாகப் பெரிய பத்திரிகைகள் எனப்படும் வெகு ஜனப் பத்திரிகைகளில் அச்சுப்பிழைகள் வருவதில்லை; வருவதேயில்லை என்று கூடக் கூறலாம். ஆனால் சில ஆண்டுகள் வரை சிறு பத்திரிகைகளுக்கு அச்சுப்பிழை தவிர்க்க முடியாத அடையாளம் என்று எண்ணப்பட்டது.

அசலே பிழையுடன் இருந்தால்? எழுத்தாளர்கள் சிலர் அவர்களுடைய பிரதியை வேறொருவரிடம் கொடுத்துச் சரிபார்த்து அதன் பின்னரே அச்சுக்குத் தருவார்கள். ‘நல்லாபிள்ளை பாரதம்’ என்றொரு நூல். ஆயிரம் பக்கங்கள் கொண்டது. குட்டிக் குட்டி எழுத்துக்கள்.

தமிழில் இதுவே வியாச பாரதத்தின் முழுமையான தமிழ்ப் பிரதி என்கிறார்கள். முதல் பதிப்பில் கொட்டை எழுத்தில் பிழை திருத்தியவர் பெயர் இருந்தது. சமீபத்தில் இந்த நூலின் புதிய பதிப்பு வந்திருக்கிறது. இதையும் பிழை திருத்தியவர் அவரே. ஒருவேளை சாகாவரம் பெற்றுவிட்டாரோ! ஆச்சரியமாகி விசாரித்தேன். நூல் மீண்டும் அச்சுக் கோர்க்கப்படவில்லை. பழைய பக்கங்களையே புகைப்படம் எடுத்துப் புதிதாக அச்சிட்டுவிட்டார்கள்!

ஜட்ஜுக்கு யதார்த்தம் நன்கு தெரிந்திருக்கிறது. அவர் கூறினார்: ‘‘கிளர்ச்சிக்கு என்று ஒருவனால் இந்த நூலைப் படிக்க முடிந்தால், உண்மையில் அவனுக்குப் பரிசு தர வேண்டும்.’’

படிக்க...

அச்சில் வந்த என் புத்தகங்களைப் பார்க்க எனக்குத் தயக்கம். பயம் என்று கூட கூறலாம். காரணம், அச்சுப்பிழைகள். ஒருமுறை என் பதிப்பாளரிடம் ‘‘பிழை திருத்தம் போடலாமா?’’ என்று கேட்டேன். ‘‘புத்தகம் வந்ததே என்று சந்தோஷப்படுங்கள்’’ என்று கூறினார் அவர்.  இந்த அனுபவத்திற்குப் பிறகு நான் என் நூல்களைப் படித்துப் பார்ப்பது அரிதாகி விட்டது.

ஆனால் தேர்ந்தெடுத்த குறுநாவல்கள் தொகுப்பு ஒன்று சமீபத்தில் வந்தது. 46 ஆண்டுகளுக்குப் பிறகு என் குறுநாவல் ஒன்றை நான் மீண்டும் படித்தேன். பின்னர் அந்த நூல் முழுதும் படித்தேன். நிறைவாக இருந்தது.

‘விழா’ என்ற குறுநாவலை நானே கால்வாசி வெட்ட வேண்டியிருந்தது. ‘தீபம்’ பார்த்தசாரதி ஒருமுறை வெளியூர் சென்றிருந்தார். அந்த ஒரு இதழை நான் முடிக்க வேண்டியிருந்தது. இருபது பக்கத்துக்கும் மேலாக வரும் குறுநாவலை பதினோரு பக்கங்களில் குறுக்க வேண்டியிருந்தது. எங்கெல்லாம் வெட்டினேன் என்று எனக்கே உறுதியாகக் கூற முடியவில்லை.

(இன்ஸ்பெக்டர் செண்பகராமன் - தேர்ந்தெடுத்தகுறுநாவல்கள், காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் -629001.
தொலைபேசி: 04652-278525. விலை: ரூ.185/-)

(பாதை நீளும்...)

அசோகமித்திரன்