மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் நாம் தினமும் செலவு செய்யும் நாள் முதல் நாணயம் வரை அனைத்தும் இரண்டு பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. இரவு-பகல்; பூ-தலை என நீளும் இதன் பட்டியலில் பாவ-புண்ணியமும் ஒன்று. மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கிய நம்பிக்கையான இதுதான் கண்ணுக்குத் தெரியாமல் மனித இனத்தை செலுத்திக் கொண்டிருக்கும் மாயச் சட்டம். இதன் முடிவுப்படியே ஓர் ஆன்மா சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோசெல்கிறது.

உண்மையில் எது சொர்க்கம்? எது நரகம்?


இந்தக் கேள்விக்கு இடையே சஞ்சரித்த மனம், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே நழுவத் தொடங்கியது. புழுதிக் காற்று வீசும் வறண்ட பாலைவனம். இலையே இல்லாத மொட்டை மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கின்றன.

அழுகிய மாமிசத்திற்காக அலையும் கழுகுகள் கூரிய அலகுகளோடு அந்த மொட்டை மரத்தின் உச்சி யில் அமர்ந்திருக்கின்றன.
அடித்த புழுதிக்காற்றில் அனலடித்தது. கூடவே சகிக்க முடியாத நாற்றம். அப்பாவு அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார். தாங்க முடியாத வேதனையில் உள்ளம் உழன்றது. புத்தி தெளிவாய் காட்சிகளைப் பதிவு செய்தது.

அந்த அனல் வீசும் பாலையின் பாறைகளுக்கு நடுவே, வறண்ட பரட்டைத் தலையோடு சில உருவங்கள் எட்டிப் பார்த்தன. அடுத்த நொடியே இந்தக் கழுகுகள் பாய்ந்து சென்று அவர்களைக் கொத்திக் கிழித்தன. அவர்கள் மணலை வாரித் தூற்றினார்கள். ஓலமிட்டார்கள். அந்த ஓலம் உலகின் உச்சபட்ச கேவலாய் ஒலித்தது. தாகமாய் இருந்தது. சுவாசிக்க முடியவில்லை. கால்களின் கீழே சுடும் மணல் வெளியின் வெப்பம், உச்சி மண்டையில் உறைத்தது.

‘இது நரகம்... இது நரகம்...’ என மனசு திரும்பத் திரும்பச் சொன்னது. அப்போ சொர்க்கம் எப்படி இருக்கும்?

பொன்னொளி வீசும் தேகத்தோடு மூன்று பேர் தோன்றினார்கள். ‘என் பின்னால் வா’ என ஒற்றைக் கட்டளை உதிர்த்தார்கள். ஒருவர் முன்னால் நடக்க, இரண்டு பேர் அப்பாவுவின் கரங்களைப் பற்றிக்கொண்டு நடத்தினார்கள். கொஞ்சம் தூரம் போனதும் பாதை இரண்டாய் பிரிந்தது. கால்களின் கீழே சகதி. கால்விரல்கள் அந்த கொழகொழப்பான சகதியுள் புதையும்போது, உடல் கூசியது.

கொஞ்சம் கவனம் சிதறினாலும் அதலபாதாளத்தில் விழுந்து விடக்கூடும் அளவுக்கு பயங்கரமான குறுகிய பாதை. அதைக் கடக்க... கழிவுக்குவியலை மிதித்துத் தாண்ட வேண்டி இருந்தது. பார்க்க சகிக்காமல் கண்களை மூடிக்கொண்டார். பிறகு, ஒளிதேகம் தாங்கிய மூவரின் பாதங்களைப் பார்த்தார். அவை எதிலும் படாமல் ஓரடி உயர்ந்து மிதந்து நடந்தன.

ஒரு சின்ன வளைவு. காற்றில் அனல் மெல்ல மறைந்தது. ஒரு குளுமை முகத்தை வருடியது. மெல்லிய நறுமணம் நாசி தொட்டது. புதிதாய் ஒரு புத்துணர்ச்சி உடலில் பரவியது. அகல கண் விரித்துப் பார்க்கிறார். பசுமை... அழகிய வினோதமான பறவைகள் சிறகடிக்கின்றன.

பழ மரங்கள் நிறைந்திருக்கின்றன. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என விதவிதமான வண்ணங்களில் பூக்களும் பழங்களும் நிரம்பி வழிகின்றன. அங்கிருந்த அத்தனை பேர் முகத்திலும் புன்னகை. எதிர்ப்பட்டவர்கள் எல்லாம் தேவதைகளாய்த் தெரிந்தார்கள். மூப்பென்பதே இல்லை. வலி, வறுமையின் தடம் எங்குமே இல்லை. அந்தப் பிரதேசமே குதூகலமாக இருந்தது. அதில் குதியல் இல்லை. நிதானம் நிரம்பி வழிந்தது. ‘ஓ... இதுதான் சொர்க்கம்’ என நினைத்த வினாடி அப்பாவுக்கு விழிப்பு வந்துவிட்டது.

அதிகாலை. தான் கண்ட கனவை நினைத்துப் பார்த்தார். உலகில் சொர்க்கம் இருக்கிறது. நரகமும் இருக்கிறது. அதை ஆன்மா ஒரு சாட்சியாக இருந்து பார்க்கிறது. ‘நான் பார்த்தேன்’ என்கிற அந்த ஆன்மாதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை. சூட்சுமமாய் அடி ஆழத்தில் இந்த ஆன்மா அமர்ந்துகொண்டு மாயையோடு விளையாட தனக்கு ஆதரவாக ஒரு ஆள் தேடுகிறது. மனசு என்கிற வலிமையான ஒரு வஸ்துவை இந்த ஆன்மா எழுப்புகிறது.

அந்த மனசு தனக்குப் பிடித்தமான விஷயங்களை உருவாக்குகிறது. அங்கிருந்து ஆரம்பிக்கும் மாயையின் விளையாட்டு மாளிகை கட்ட ஆரம்பிக்கும். கண்ணாடி கண்ணாடியாய் ஒளிரும். மனம், தான் பார்க்கும் எல்லாக் காட்சிகளும் உண்மை என நம்ப வைக்கும். அதனால் ஒரு நொடிகூட சும்மா இருக்க முடியாமல் விதவிதமாகப் படம் வரையும். பிடித்த இசை, பிடித்த பாட்டு என ஆரம்பித்து பிடித்த மனிதன், நாடு, கடவுள் என நகரும். ஆனால், அடிப்படையாய் இதில் எல்லாமே ‘நான் பார்க்கிறேன்’ என்கிற விஷயம்தான்.

இந்த ‘நான் பார்க்கிறேன்’ என்கிற விஷயம் எங்கிருந்து வருகிறது என வேரைத் தேடி நகர ஆரம்பிக்கும்போது... மனமா? ஆன்மாவா? என்கிற விஷயத்துக்குள் நுழையும்போது... மனதின் ஆட்டம் விஸ்வரூபம் எடுக்கும். அந்த இடத்திற்கு வரவே விடாமல், அதன் மீது இதன் மீது எனப் பரிவு காட்டச் சொல்லும். ‘நீதான் எல்லாம் எனக்கு’ என இன்னொரு ஆள் மீது மாயவலை வீசும். ‘நீ என் உயிர்’ எனக் கூவும். இதையும் சொல்வது யார் என கவனிக்க... பேயாட்டம் போடும் மனசு, ஆசிரியரைக் கண்ட மாணவன் போல அமைதியாய் உட்கார்ந்து கொண்டு வழிவிடும்.

அப்போது சின்னதாய் ஒரு ஒளிக்கீற்று தோன்றும். இருண்ட குகைக்குள் தெரியும் அந்த கீற்று சொல்லும்... ‘நீ பார்த்தவை எல்லாம் வெறும் காட்சிகள். மாயை. அதை அனுபவிக்கவில்லை. சும்மா வெறுமனே பார்க்கிறாய். புலன்கள்தான் இதை சுவைத்தன. நீ சாட்சியாக மட்டுமே கிடந்தாய். அது எதுவும் உனதில்லை. கண்களையும் காதுகளையும் மூடிக்கொள். உலகம் இப்போது இல்லை. மலை இல்லை. வீடு இல்லை. கோயில் கோபுரம் எதுவும் இல்லை. நீ மட்டுமே இருக்கிறாய்.

நான் மட்டும் இருக்கிறேன் என்கிற அந்த நீ... யார் எனத் தேடு. அதில்தான் கடவுள் என்னும் பொக்கிஷத்தின் சாவி இருக்கிறது. அது கிடைத்துவிட்டால் உண்மை தெரிந்துவிடும். உள்ளே எப்போதும் புல்லாங்குழல் இசைக்கும். சொர்க்கம் எது எனப் புரிந்துவிடும். சொர்க்கத்தையும் தாண்டிய தேடல் ஆரம்பமாகும். அந்தத் தேடல்தான் உண்மையான சுகம். அதில் உள்ள ஏக்கம்தான் பிறவி அறுக்கும் அரம். வலிக்கும். மனசு மாயம் காட்டும்.

முருகன்தான் இனிமை என்பதில் மாயையின் முதல் விளையாட்டு தொடங்கும். வாசலில் ஊதுவத்தி வாசனையில் லயிக்க வைத்து, கருவறை உள்ளே வராமல் தடுக்கப் பார்க்கும். FIPக் கொண்டு உள்ளே நகரணும். அழணும். அடம்பிடிக்கணும். உண்மை அப்போது தெரியும். எது நிலையானது என்பது பாடமாகும். எது சத்தியம் என்பது விளங்கும். பேரானந்தம் கிடைக்கும். அதுதான் அனுபூதி. அதுதான் உண்மையான சொர்க்கம். பிறவியும் ஆசையும் நரகம்.’

மனதோடு மனதாக முருகன் பாடம் நடத்தினான். ஆத்மானுபூதியை நோக்கி தன்னை முருகன் நகர்த்துவதை உணர்ந்து, ‘முருகா... முருகா...’ எனக் கை கூப்பினார் அப்பாவு. கடவுள் தேடலைத் தீவிரமாக்கிய அப்பாவு, உணவில் உப்பு, புளி, காரம் என எல்லாவற்றையும் தவிர்க்க ஆரம்பித்தார். அடிக்கடி உபவாசம் இருந்தார். பச்சரிசியையும் பச்சைப் பயிறையும் வேக வைத்து உப்பில்லாமல் சாப்பிட்டு வந்தார். மனசு சொன்ன பேச்சை கேட்க வேண்டுமென விரும்பினார்.

தீவிரமான உபவாசமும் அதீத உணவுக் கட்டுப்பாடும் அப்பாவுவின் உடலை பலவீனமாக்கியது. இதைப் பார்த்த அவரது வைத்திய நண்பர், ‘‘உப்புக்கு பதிலாக இந்துப்பை சேர்த்துக் கொள்’’ எனக் கோரினார். ஆனால் அப்பாவு, முருகனின் திருவுரு முன்னால் திருவுளச் சீட்டெழுதிப் போட்டு ‘இந்துப்பு சேர்த்துக் கொள்ளலாமா’ என அனுமதி கேட்டார். ‘வேண்டாம்’ என உத்தரவு வந்தது. ஆகவே, தனது வழக்கமான உணவையே தொடர்ந்தார். அதுவும் பகலில் ஒரு வேளை மட்டுமே! ஆனால், ஆச்சரியப்படும் விதமாக அப்பாவுவின் உடல் வலிமை பெற்றது. எப்பொழுதும் போல ஆனார்.

‘நான் அனுமதிக்கும் வரை பழநிக்கு வரக்கூடாது’ என முருகன் கட்டளையிட்ட நான்காவது மாதம்.  கார்த்திகை பிறந்திருந்தது. அப்பாவு ராமேஸ்வரம் வந்தார். மனதில் இதுதான் காரணம் என சொல்ல முடியாத வலி இருந்தது. ஏன் இந்த வேதனை என எத்தனை தீவிரமாய் யோசித்தும் விளங்கவில்லை. மனித முயற்சியால் இதில் ஆகக் கூடியது எதுவும் இல்லை எனத் தெளிந்து முருகனை மனதில் நிறுத்தி தீவிர தியானத்தில் ஆழ்ந்தார்.

அவர் மனதில் வார்த்தைகள் நீர்க்குமிழ் போல பூக்கத் தொடங்கின. என்ன இது? வீரிய விதையொன்று மண்ணை முட்டிக் கொண்டு முளை விடத் துடிப்பது போல, வார்த்தைகள் மனசில் எட்டி எட்டிப் பார்க்கின்றனவே எனக் கவனித்தார். வலியால் வதைபடும் மக்களுக்கான மந்திரம் மனதுள் சூல் கொண்டிருப்பதை உணர்ந்தார். அது ஜனிக்க தகுந்த நேரம் பார்த்துக் கிடந்தது. முருகன் அதற்கும் நாள் குறித்தார்.

இதய நோய் நீக்கும் கமல பந்தம்


‘‘1985ல இருந்து நான் பாம்பன் சுவாமிகளோட பக்தன். எனக்கு 2 பொண்ணுங்க. சாதாரண தொழிலாளியான நான், அவங்களை எப்படிக் கரையேத்துறதுன்னு எப்பவும் கவலைப்படுவேன். திருப்பரங்குன்றத்தில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் கோயிலுக்கு அடிக்கடி ஈடுபாட்டோட போய் வருவேன். அந்த நேரத்துல டெல்லியில இருந்து நல்ல வரன் வந்துச்சு. செலவுக்கு கையில ஒரு ரூபா இல்ல. எதிர்பார்க்காத இடத்துல இருந்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து கல்யாணத்தை நடத்தச் சொன்னாங்க. என் கண்ணுக்கு அவர் பாம்பன் சுவாமியாதான் தெரிஞ்சார்’’ எனச் சொல்லும் ராஜேந்திரன் மதுரையைச் சேர்ந்தவர்.

‘‘பாம்பன் சுவாமிகளின் ஒவ்வொரு வார்த்தையும் மந்திரம்தான். அதுல கமல பந்தம்னு ஒண்ணு இருக்கு. அதை தினமும் பாராயணம் செஞ்சா இதய நோய்கள் நீங்கும். மனக்கவலை, பயம் நீங்கும். தியானம் கைகூடும்’’ என சிலாகிக்கிறார் அவர்.

கமல பந்தம்
வரவிதி திருவ வருதிபொ னரவ
வரனது கருவ வருகணை குரவ
வரகுக மருவ வருமறை பரவ
வரபத மருவ வருமதி விரவ

(ஒளி பரவும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்