சென்னையில் 57 பேருக்கு ஒரு நாய்!



தெருநாய்களுக்கு ஒரு சர்வே

மக்கள்தொகை கணக்கெடுப்புதான் நமக்குத் தெரியும். தெருநாய்த் தொகை கணக்கெடுப்பு தெரியுமா? விலங்குகள் நலன் மற்றும் பொதுமக்கள் நலனுக்காக இப்படியொரு கணக்கெடுப்பையும் சமீபத்தில் செய்திருக்கிறது  சென்னை மாநகராட்சி. அதன் முடிவில், சென்னையின் தெருநாய்த் தொகை 82336 என அறிவித்திருக்கிறார்கள்.

அதாவது, 57 நபர்களுக்கு ஒரு நாய்! '' 'காட்டு விலங்குகள் - வீட்டு விலங்குகள்’ என இரண்டே வகையைத்தான் பள்ளிப்பாடம் சொல்கிறது. பாவம்... தெருநாய்களுக்குத்தான் காடும் இல்லை, வீடும் இல்லை’’ என சென்டிமென்டாகத் துவங்குகிறார்  மத்திய அரசின் விலங்கு நல வாரியத் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா. சென்னையில் தெரு நாய் குறைப்புக்காக ப்ளூ க்ராஸ் அமைப்போடு இணைந்து துணை நின்றிருப்பவர் இவர்.

‘‘எல்லா நாய்களும் ஆபத்தானவை என்ற மனநிலை முதலில் மாற வேண்டும். நாய்கள் ரோட்டில் பெருக நாமும் ஒரு காரணம் என்பதை அனைவரும் உணர வேண்டும். சொறி நாய்க்கும், வெறி நாய்க்கும் உள்ள வித்தியாசத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பொது இடங்களிலும் போடும் குப்பைகளையும், பிளாஸ்டிக், கெமிக்கல் போன்ற கழிவுகளையும் சாப்பிடுவதால்தான் தெரு நாய்களுக்குத் தோல் நோய்கள் வருகிறது. இதுதான் சொறி நாய். இந்த நாய்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டும்; பயப்படுவதும் தாக்குவதும் தேவையே இல்லை.

வெறி நாய் என்பது ரேபீஸ் எனப்படும் ஒரு வகை வைரஸால் தாக்கப்பட்ட நாய். வாயில் நுரை தள்ளுவது, தள்ளாடி நடப்பது போன்ற அறிகுறிகளால் இந்த நாயை சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். இப்படிப்பட்ட நாய்களிடமிருந்து நகர மக்களைக் காப்பாற்றத்தான் அரசு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வரை ரேபீஸ் நாய்க்கடி சென்னையில் குறிப்பிடும் அளவுக்கு இருந்தது. அப்போது சென்னையில் 1.7 லட்சம் தெரு நாய்கள் இருந்ததாக மாநகராட்சி புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால், இப்போது அது பாதியாகக் குறைந்து விட்டது’’ என்கிறவர், விலங்குகள் நல ஆர்வலர்களின் ஆலோசனையோடு சாத்வீகமாகத்தான் இந்த நாய்க்குறைப்பு நடந்திருப்பதாகச் சொல்கிறார்.

‘‘முன்பெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க அதைப் பிடித்து வந்து கொல்வது தான் நடவடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது ஏ.பி.சி எனப்படும் விலங்குகளுக்கான குடும்பக் கட்டுப்பாடு மூலம் மெல்ல மெல்ல நாய்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்கும் ஆண் நாயை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். பெண் நாய்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம்.

அதனால், அடையாளத்துக்காக அவற்றின் காதுகளின் ஒரு முனையை சிறிது வெட்டி இருப்போம். வெறியைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் போட்டும் நாய்கள் ஆபத்தில்லாதவையாக பராமரிக்கப்படுகின்றன’’ என்கிற சின்னி கிருஷ்ணா, ‘‘இதை மீறியும் நாய்கள் பெருக நாம்தான் காரணம்’’ என்கிறார் உறுதியாக!

‘‘நம் பாதுகாப்புக்கும், நம் சொத்துகளின் பாதுகாப்புக்கும்தான் நம்மூர் நாய்களை நாம் வளர்க்க ஆரம்பித்தோம். ஆனால், இன்று அவற்றை விட்டு விட்டு வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்து விட்டோம். பிறகு நம்மூர் நாய்கள் எங்குதான் போகும்? எந்த ஏரியாவில் அதிக உணவு கிடைக்கிறதோ அங்குதான் நாய்களும் அதிகம் வாழ்கின்றன. நாய்களை தொல்லை என்பவர்கள் குப்பைகளைத் தெருவில் போடாமல் இருக்கலாமே!

மற்ற விலங்குகள் போலில்லாமல் நாய்கள் ஒரு சிறிய வட்டத்துக்குள் வாழக் கூடியவை. நம்ம ஏரியா என்ற ஒரு உணர்வு எல்லா நாய்களுக்கும் உண்டு. அப்படிப்பட்ட ஏரியாவில் வேறு ஏரியா நாயோ அல்லது மனிதர்களோ புதிதாக நுழைந்தாலே அவை அலர்ட் ஆகிவிடும். இந்த ஏரியா விசுவாசம்தான் அதை வீடுகளில் வளர்க்க நம்மைத் தூண்டியது என்பதையும் மறக்க வேண்டாம்.

நாய்கள் விரட்டினால், நாம் கையைக் கட்டி கொஞ்ச நேரம் நகராமல் இருந்தால் அது சாதுவாகச் சென்று விடும். சும்மா போகிற நாய்களை கல் எடுத்து அடிப்பதும், குட்டிகள் போட்ட தாய் நாய்களிடம் சேட்டை செய்வதும்தான் பெரும்பாலான நாய்க்கடிக்குக் காரணமாகிறது. இதைப் புரிந்துகொண்டு நாய்களை அணுக வேண்டும்.

சில நாய்கள் ஏற்கனவே ஏதாவது வண்டியில் அடிபட்டிருந்தால், அது போன்ற வண்டியில் போகிறவர்களைத் துரத்தும். அப்படித் துரத்தும்போது, கொஞ்சம் நின்று வண்டியைத் தள்ளிக்கொண்டு போவதே சிறந்தது.

 தெரிந்தோ தெரியாமலோ நம் தெருவுக்கு கூர்க்காவாகவும் துப்புரவுத் தொழிலாளியாகவும் 24/7 வேலை பார்க்கின்றன நாய்கள். நாயை மனிதர்களின் நல்ல நண்பன் என்கிறோம். ஆனால் நாம் நாய்களின் நல்ல நண்பர்களாக இருக்கிறோமா என சிந்தித்துப் பார்ப்பதே மனிதத் தன்மை!’’ என்கிறார் அவர் புன்னகையோடு! நாயை மனிதர்களின் நல்ல நண்பன் என்கிறோம். ஆனால் நாம் நாய்களின் நல்ல நண்பர்களாக இருக்கிறோமா?

 டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சி.எஸ்