கிக் நம்பர்!



‘சிறை, குற்றவாளிகளை உருவாக்குகிறது’ கட்டுரை படித்தேன். திருந்துவதற்கான இடமாக சிறை என்றுமே இருந்ததில்லை என்பது கசப்பான உண்மையே! வருமானம் தராத சிறைத்துறை புத்துணர்ச்சி பெறுவது காலத்தின் கையில்தான் உள்ளது!
- கவியகம் காஜூஸ், கோவை.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்பட ஸ்டில்களில் பிந்து மாதவியிடம்தான் என்ன ஒரு கிக்! நிச்சயம் இந்தப் படம் வெளிவந்ததும், ரசிகர்கள் வெற்றி என்னும் எண்ணை அழுத்துவார்கள்!
- ஜி.சின்னகண்ணு, வேலூர்.

இடுகாட்டில் பூச்செடிகள் நட்டு பூஞ்சோலையாக மாற்றும் அர்ஜுனனின் செயல் அருமை. எல்லா மயானங்களிலும் இதுபோன்று பூஞ்செடிகளை அரசே வளர்த்தால் நன்றாக இருக்குமே!
- வெ.லட்சுமிநாராயணன், வடலூர்.

‘அடுத்த நட்சத்திர தம்பதி சிம்பு-ஹன்சிகா தான்’ என ப்ரியா ஆனந்த் ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பது சிம்பு சொல்லித்தானா... இல்லை உமது வேலையா..? நாரதர் வேலை உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே பாஸ்!
- எஸ்.சந்திரன், திருச்சி.

‘இப்போ சினிமாவுக்குள் வர்றது ரொம்ப சுலபம். ஆனா, நிலைக்கிறது கஷ்டம்’ - 25 படங்களில் நடித்துவிட்ட ‘வேலையில்லா பட்டதாரி’ நடிகர் தனுஷ் கொடுத்த ஸ்டேட்மென்ட் ரொம்ப கரெக்ட். அனுபவம் பேசுகிறதோ?!
- எஸ்.மந்திரமூர்த்தி, சிதம்பரம்.

தமிழக அணைகளை அபகரிக்க கேரளா முயல்வதை உங்கள் கட்டுரை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்திவிட்டது. இதன்பிறகு, நரேந்திர மோடி அரசு எடுக்கும் தீர்க்கமான முடிவில்தான் அவர்களின் ‘பாரபட்சமற்ற’ ஆட்சி முறை இருக்கிறது!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

உயிரின் மதிப்பு என்ன என்பதை தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்த நர்ஸ் மோனிஷா உணர்த்தியிருக்கிறார். நாட்களையும் பணத்தையும் இழந்து வந்திருக்கும் மோனிஷாவுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

வெள்ளை தாஜ்மகாலுக்கு எதிரிலே கறுப்பு தாஜ்மகால், அந்த இரண்டு தாஜ்மகால்களையும் இணைக்கும் விதத்தில் யமுனையின் மீது அழகிய பாலம்... அடடா, ஷாஜகான் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காட்சியே படு ரொமான்டிக் பாஸ்!
- ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை

அண்ணன் ஆல்தோட்ட பூபதி சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவார். ஷரபோவா - சச்சின் விவகாரம் கிடைச்சா விடுவாரா? மனுஷன் காய்ச்சு காய்ச்சுன்னு காய்ச்சி
எடுத்திட்டாரே!
- தி.தெ.மணிவண்ணன், அங்கலக்குறிச்சி.