like and Share



வெல்டன்!

உலகக் கோப்பை ஜெர்மனிக்குத்தான் என்பது அனைவரும் எதிர்பார்த்ததே. 24 வருடங்களுக்குப் பிறகு அது நடக்கவும் செய்தது. ஆனாலும், ஜெர்மன் அரசுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடாது. இறுதிப் போட்டிக்கு முன்பே, ‘ஜெர்மனி கால்பந்து உலகச் சாம்பியன் 2014’ என்கிற எழுத்துகளோடு 50 லட்சம் ஸ்டாம்ப்களை அச்சடித்துவிட்டது ஜெர்மன் அரசு.

 ‘‘நிச்சயம் வெல்வோம் என்கிற தைரியத்திலேயே இந்த ஸ்டாம்ப்களை அச்சடித்தோம். அந்தக் கனவை எங்கள் அணி நிறைவேற்றிவிட்டது. பொன்னான அந்த நாளை இந்த ஸ்டாம்ப்கள் நினைவுபடுத்தி மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்’’ என்கிறார் ஜெர்மன் நிதியமைச்சர் உல்ப்கேங் சாபிள். சூப்பர்ஜி! சூப்பர்ஜி!

‘கிபீ’டடா

கடந்த வாரம் தொடங்கி இல்லங்கள் தோறும் செல்லப் பிள்ளைகளாகி விட்டார்கள் இந்த தாத்தாவும் பாட்டியும். ‘‘இவளுக்கு மருந்து சாப்பிடவே பிடிக்காது. அதனால அவளுக்குத் தெரியாம பால்ல கலந்து கொடுக்கறேன்’’ என தாத்தா நம்மிடம் ரகசியம் பேசுகிறார். ‘‘எப்பவும் இவர் மருந்தை பால்லயே கலக்கிக் கொடுக்கறார். அது ரொம்ப கசக்குது!’’ என பாட்டி இன்னொரு பக்கம் ரகசியமாய்ச் சொல்கிறார். ஆனால், இருவருமே அதை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளாமல், ‘‘பால் நல்லா இருக்கு!‘‘ எனப் பரஸ்பரம் அன்பைப் பரிமாறிக் கொள்வது அழகிலும் அழகு.

‘உங்களின் பர்ஃபக்ட் பேங்கிங்’ பார்ட்னர் என்ற வரிகளோடு முடிகிறது ‘ஃபெடரல் வங்கி’க்கான இந்தவிளம்பரம். பாட்டியின் ஜோக், உடற்பயிற்சி நேரம் என இதே வரிசையில் வரும் மற்ற விளம்பரங்களும் மனதை அள்ளுகின்றன!

ரசனை சினிமா

Blue is the Warmest Color
மொழி: பிரெஞ்ச்
இயக்குநர்: அப்டெல்லாடிஃப் கெசிசே
இந்த வருட ஆரம்பத்தில் பரபரப்புக்கு உள்ளான படம். ஒரே பாலின உறவுகளின் மீது நாம் கொண்டிருக்கும் தவறான புரிதல்களை, வெளிப்பாட்டை எல்லாம் தங்கு தடையின்றி கேள்வி கேட்டு பதில்களை எடுத்து வைக்கிறது. படம் ஓடும் மூன்று மணி நேரம் முழுவதும் அட்லி, லியா என்ற இரண்டு பெண்களின் அந்தரங்க உலகத்தில் நீங்கள் புகுவது நிச்சயம். குடும்பம் என்ற அமைப்பை சீர்குலைத்ததாக அவர்களைக் குற்றம் சாட்டும் பொதுப்புத்தியை மாற்றி அமைக்கிறது படம். இயக்குநரின் திறமைகள் நம் கண்களின் புருவம் ஏற்றுகின்றன. எதையும் ஆராய்ந்து பார்க்காமல், முன்முடிவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம் என்பது இந்த சினிமாவைக் கண்ட பின்பு மனதில் வருகிறது.

ஈவென்ட் கார்னர்!


1914ம் ஆண்டு, ஜூலை 14ம் தேதி சென்னையின் முதல் மகளிர் கல்லூரியாகத் துவங்கப்பட்டது ராணி மேரிக் கல்லூரி. இதன் நூற்றாண்டுத் தொடக்க விழா, பிரத்யேக அஞ்சல் தலை வெளியீட்டோடு நடந்தேறியது. தங்கள் கல்லூரியின் நூறாவது பர்த் டேயை கேக் வெட்டியும் மரங்கன்றுகள் நட்டும் மாணவிகள் கொண்டாட, சென்னை கடற்கரை சாலையே அன்று குதூகலம் பூசிக் கொண்டது.

பாரம்பரியம் மிக்க அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவிகளும், இசைத்துறை வி.ஐ.பிகளுமான வாணி ஜெயராம், அனுராதா ஸ்ரீராம், கிரேஸ் கருணாஸ், சுனந்தா ஆகியோர் மேடையில் பொழிந்த மலரும் நினைவுகள், டச்சிங்.அடுத்த ஐந்து மாதங்களுக்குத்  தொடரப் போகும் இந்த நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு நிறைவு விழா, டிசம்பர் 14.

‘டெக்’ஷ்னரி!

ஸ்மார்ட் போனுக்கு அடுத்து, ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி என்று வளர்ந்து, இப்போது ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸில் வந்து நிற்கிறது டெக்னாலஜி. கான்டாக்ட் லென்ஸில் என்ன ஸ்மார்ட்? நிறைய இருக்கிறது. இந்த லென்ஸில் இணைக்கப்பட்டிருக்கும் விசேஷ சென்சார், நம் கண்களில் உள்ள நீரை வைத்தே ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கணக்கிட்டுவிடும். இதிலுள்ள மிக நுண்ணிய ஆன்டெனா, இந்தச் சோதனை முடிவுகளை அடிக்கடி நம் செல்போனுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். ஏற்கனவே இப்படிப்பட்ட லென்ஸை உருவாக்கி பரிசோதித்துவிட்ட கூகுள், தற்போது வணிக ரீதியிலான தயாரிப்புக்காக நோவார்டிஸ் நிறுவனத்துடன் கை கோர்த்திருக்கிறது. சீக்கிரமே ‘ஸ்மார்ட் கான்டாக்ட் லென்ஸ்’ ஷோ கேஸ்களில் சிரிக்கும்

கிளிக்கானந்தா

சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்த ரகு, தன் ஆட்டோவையே இலவச குடிநீர்ப் பந்தலாக்கி அட்ராக்ஷனை அள்ளுகிறார். முன்புறம் ‘நல்ல மனிதர்களே துணை’ என்ற சிறப்பு வாக்கியத்தோடு சிட்டியை கலக்குகிறது இவரின் ஆட்டோ!

‘படி’த்துறை

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
சசி வாரியர்
தமிழில்: இரா.முருகவேள்
விலை: ரூ.220/-
எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி-642002. போன்: 04259-226012.
மரண தண்டனை ஏற்பாட்டாளரான ஜனார்த்தனன் பிள்ளையின் வாழ்க்கையைச் சொல்கிற புத்தகம். மனசை கல்லாக்கிக் கொண்டு செய்து முடிகிற இந்த வேலை பற்றிய செய்திகளில் வேதனை படர்கிறது. தூக்கிலிடும் முன் மேடையில் நிற்கிற கணங்களில் மனிதர்கள் எதிர்கொள்ளும் தவிப்பு, நெஞ்சைப் பிழிகிறது. அதில், அவர்கள் செய்த குற்றங்களின் பின்னணி கூட மங்கித் தெரிகிறது. பிள்ளையின் குறிப்புகள், நம் வாழ்வியல் நம்பிக்கைகளை கறாரான கேள்விக்கு உள்ளாக்குகின்றன. சசி வாரியர் இதை கதை போல்எழுதியிருக்கிறார். ஆனால், தமிழரான பிள்ளை சொன்னதையே ரத்தமும் சதையுமாக எழுதியிருந்தால் இன்னும் அழகு. முருகவேளின் தமிழ் பொருந்துகிறது.