ஆரஞ்சு கலர் வாழைப்பழம்



இயல்பாக மரத்தில் குலை தள்ளும் அதே வாழைப்பழம்தான். அதை சற்றே மாற்றினால், ஆண்டுக்கு மூன்று லட்சம் குழந்தைகளின் கண் பார்வை பறிபோவதைத் தவிர்க்கலாம்... ஏழு லட்சம் குழந்தைகள் செத்துப் போவதைத் தடுக்கலாம் என்றால் அது சூப்பர் வாழைப்பழம்தானே! அப்படி ஒரு வாழைப்பழத்தை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.

வறுமையின் பிடியில் இருக்கும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ குறைபாடு’ பெரும் சாபக்கேடு. இந்தக் குறைபாட்டால் ஆசிய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஆண்டுக்கு ஏழு லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இந்த வைட்டமினை திரவ மருந்தாகக் கொடுத்துப் பார்த்தும் பெரிய அளவில் மரணங்களையும் பார்வை பறிபோவதையும் தடுக்க முடியவில்லை.

இந்த எல்லா நாடுகளிலும் வாழைப்பழம் அதிக அளவில் விளைகிறது; விலை குறைவாகவும் கிடைக்கிறது. எனவே இந்த வைட்டமினை வாழைப்பழத்தில் கலந்து கொடுத்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் டேல் என்பவர் தலைமையில் ஒரு குழு ஒன்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது. இதற்காக ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனர் பில் கேட்ஸின் அறக்கட்டளை சுமார் 60 கோடி ரூபாய் நிதியுதவி செய்தது. ஆராய்ச்சியின் முடிவில் இப்போது ‘சூப்பர் வாழைப்பழம்’ ரெடி.

வாழைப்பழத்தின் இயல்பான மரபணுவை மாற்றி, அதனுடன் ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டின் சேர்த்திருக்கிறார்கள். வெளித் தோற்றத்தில் இது சாதா வாழைப்பழம் போல இருந்தாலும், உள்ளே பழம் சற்றே ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். விலங்குகளில் பரிசோதனை முடிந்து இப்போது இதை மனிதர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தாயிற்று!

இன்னும் ஆறே ஆண்டுகளில் இதை உகாண்டா நாட்டில் விளைவிக்க ஒப்புதலும் பெற்றாயிற்று. ‘‘எதிர்காலத்தில் இதேபோல ஊட்டச்சத்துக்களை உணவோடு கலந்து கொடுக்கும் பல முயற்சிகள் நடைபெறும். ஆப்பிளில் ஒரு வைட்டமின், திராட்சையில் ஒரு மினரல் என சாகசங்கள் சாத்தியமாகும். அப்போது மருந்தும் உணவும் ஒன்றாகிவிடும்’’ என பெருமிதப்படுகிறார் டேல்.

ஆனாலும் இதற்கு எதிர்ப்புகள் இல்லாமல் இல்லை. ‘‘மரபணு மாற்றம் செய்யப்படும் உணவுகளின் பக்க விளைவுகள் பற்றி எதுவும் தெரியவில்லை. உணவில் மருந்தைக் கலப்பது ஆபத்தானது’’ என கலகக் குரல் இப்போதே எழுந்திருக்கிறது.

- அகஸ்டஸ்