புல்லட் ரயில் நமக்குப் பெருமையா... வீண் செலவா?



அணுகுண்டு, ராக்கெட் தொழில்நுட்பம், விமானம் தாங்கி போர்க்கப்பல்... வல்லரசு தேசங்களுக்கான அடையாளங்கள் இவை. இந்த அடையாளங்களில் புதிதாக இன்னொன்று சேர்ந்திருக்கிறது. அது, புல்லட் ரயில்.

நிலத்தில் அதிவேக பயணத்தை சாத்தியமாக்கும் இந்த ரயிலை விட்டு வல்லரசுப் பட்டியலில் இணைய இந்தியாவும் முடிவெடுத்திருக்கிறது. மும்பையிலிருந்து அகமதாபாத்துக்கு முதல் புல்லட் ரயிலை சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விடப்போவதாக பா.ஜ.க அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் அறிவித்திருக்கிறது. புல்லட் ரயில் என்பது பெருமிதமான அடையாளம்தான்.

ஆனால் அந்த அடையாளம் நமக்கு இப்போது தேவையா?

புல்லட் ரயில் என்பது முதலில் ஜப்பான் கண்ட பெருங்கனவு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானில் புல்லட் ரயில் ஓடத் தொடங்கிவிட்டது. தொழில் வளர்ச்சியில் உச்சத்தை எட்டியபோது பெரும்பாலான ஜப்பானியர்கள் நகரங்களை நாடி வந்தனர். தொலை தூர இடங்களுக்கு விமானத்தில் போய் விடலாம்.

ஆனால் ஒரு நகரத்திலிருந்து சுமார் 500 கி.மீ. தூரத்தில் இருக்கும் இன்னொரு நகரத்துக்கு விமானம் என்பது ஆடம்பரம்; காரோ, பஸ்ஸோ அவஸ்தை. சாதா ரயிலில் அவசரத்துக்கு இடம் கிடைக்காது. சற்றே அதிகம் செலவழித்தாலும் நிம்மதியாகப் போக நினைப்பவர்களுக்கு இந்த புல்லட் ரயில் வரம். ஜப்பானியர்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் வருமானத்துக்கும் புல்லட் ரயில் பெரிய செலவு இல்லை. ஜப்பானில் 2500 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில்கள் ஓடுகின்றன. மணிக்கு 240 கி.மீ. வேகம்.

ஜப்பானைப் பார்த்து பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி, தென் கொரியா எனப் பல நாடுகள் புல்லட் ரயிலை ஓட விட்டன. எனினும் இந்தத் தொழில்நுட்பம் அறிந்தவையாக ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளே இருந்தன. சீனா களத்தில் இறங்கியபிறகு நிலைமையே மாறியது. சீனா வெறும் பத்தே ஆண்டுகளில் சுமார் 12 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்கியது.

இன்று உலகிலேயே அதிக புல்லட் ரயில் ஓடுவது சீனாவில்தான். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் உதவியோடு புல்லட் ரயில்களை உருவாக்கிய சீனா, இன்று அவர்களின் தொழில்நுட்பத்தைக் காப்பியடித்து சொந்தமாக ரயில் செய்கிறது. அதோடு விடவில்லை... பல ஐரோப்பிய நாடுகளுக்கு புல்லட் ரயிலை குறைந்த விலையில் உருவாக்கிக் கொடுத்து பிரான்ஸையும் ஜெர்மனியையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறது.

ஆனாலும் சீனாவுக்கு புல்லட் ரயில் என்பது யானையைக் கட்டி தீனி போடுவது போன்ற சமாச்சாரம்தான். பெய்ஜிங் - ஷாங்காய் வழித்தடத்தைத் தவிர வேறு எங்கும் லாபம் கிடைக்கவில்லை. ‘‘இன்னும் பல ஆண்டுகளுக்கு நஷ்டம் தொடரும்’’ என்கிறார்கள். காரணம், விமானக் கட்டணத்தைவிட புல்லட் ரயில் கட்டணம் அதிகம்.இந்தியாவில் என்ன ஆகும்? சாதாரண ரயில் தண்டவாளத்தை ஒரு கி.மீ தூரத்துக்கு அமைக்க சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் செலவாகும்.

அதே புல்லட் ரயிலுக்கு 120 முதல் 200 கோடி ரூபாய் வரை ஆகும். சாதாரண வழித்தடத்தை இதற்குப் பயன்படுத்த முடியாது. புதிதாக பாதையை உருவாக்க வேண்டும். இதற்காக பெருமளவு நிலத்தைக் கையகப்படுத்த வேண்டியிருக்கும். ரயில் தண்டவாளங்களை கால்நடைகளும் மனிதர்களும் கடந்து செல்வது இங்கு சாதாரணக் காட்சி. மணிக்கு 250 முதல் 300 கி.மீ வேகத்தில் வரும் புல்லட் ரயில், இந்த விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது. எனவே தரையிலிருந்து மேலே உயர்த்தப்பட்ட பாதையில்தான் ஓட்ட வேண்டியிருக்கும்.

மும்பையிலிருந்து அகமதாபாத் 543 கி.மீ. பெரிதும் வளர்ச்சியடைந்த நகரங்கள் நிறைய இந்த வழியில் இருக்கின்றன. நிலத்தின் விலை தாறுமாறாக இருக்கிறது. நிலத்தை கையகப்படுத்தி முதல் புல்லட் ரயிலை எட்டு ஆண்டுகளில் ஓட விடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுமாராக ஒரு கி.மீ. தூரத்துக்கு 8 ரூபாய் கட்டணம் இருக்கலாம் என்கிறார்கள். ஒரு டிக்கெட் 4344 ரூபாய் வரும். இது கிட்டத்தட்ட விமானக் கட்டண அளவு!

‘‘கடவுளிடம் வரம் கேட்கும்போது, சில விஷயங்கள் கிடைத்துவிட்டாலே பெரும் ஆபத்தாகிவிடும். புல்லட் ரயில் அப்படிப்பட்ட ஆசைதான்’’ என்கிறார்கள் ரயில்துறை நிபுணர்கள். இதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்:

* பிரிட்டனும் பிரான்ஸும் கான்கார்டு என்ற சூப்பர்சானிக் விமான சேவையில் அமெரிக்க நகரங்களை தங்கள் தேசத்தோடு இணைத்தன. லண்டனிலிருந்து நியூயார்க்கிற்கு 8 மணி நேரத்துக்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் கான்கார்டு விமானத்தில் போய்விடலாம். ஆனால், 2003ம் ஆண்டில் இந்த சேவை ரத்து செய்யப்பட்டது. காரணம், பெருத்த நஷ்டம். சாதா விமானத்தை விட, இதில் கட்டணம் அதிகம். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கூடுதலாக நான்கரை மணி நேரம் ஆவதைப் பெரிதாக நினைக்கவில்லை. புல்லட் ரயில்களுக்கும் இதே லாஜிக்தான்!

* இந்த புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் போகும் என்றால், ஒரு சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரத்தில் போய் விடும். மொபைல் போன், பாக்கெட் இன்டர்நெட், வைஃபி என எல்லா வசதிகளும் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவருக்கும் அவர்கள் இருக்கும் இடமே ஆபீஸ் ஆகிவிட்டது. பயண நேரம் இப்போது பெரிய விஷயமே இல்லை.

* இந்தியாவில் ஆண்டுதோறும் ரயிலில் பயணிக்கும் 2.3 கோடி பேரில் சுமார் 1.8 கோடி பேர் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பத்து மக்கள். இவர்கள் ஏ.சி பெட்டிகளையே நாடுவதில்லை. புல்லட் ரயில் இவர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். ஒரே ஒரு வழித்தடத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் விட்டு, அதன் கட்டணங்களையும் குறைத்து மானிய விலையில் தர முடியாது. ஏனெனில், அது ஏழைகளுக்கானது அல்ல! அதிக கட்டணம் வைத்தால் எல்லோரும் விமானங்களை நாடிப் போவார்கள்.

* இந்திய ரயில்வேயில் சுமார் இரண்டரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதிய ரயில்களை அறிமுகம் செய்வதால், மிக பிஸியான வழித்தடங்களில் சுமார் 8 நிமிடங்களுக்கு ஒரு ரயில் போகிறது. எல்லாமே பழமையான பாதைகள். பராமரிப்பு செய்யவோ, கண்காணிக்கவோ போதுமான அவகாசம் இல்லை. கிட்டத்தட்ட ரயிலில் பயணிக்கும் எல்லோரது உயிரையும் பணயம் வைத்துத்தான் ரயில் போகிறது. இரட்டை வழித்தடங்கள்தான் இப்போது அவசியத் தேவை. ரயில்வேயின் பெருமளவு நிதியை புல்லட் ரயிலில் முடக்கினால், மற்ற திட்டங்கள் சவலைப் பிள்ளைகள் ஆகிவிடும். இருப்பதை சரி செய்துவிட்டு பெருங்கனவு காணுவோம்!

சாதா ரயிலையே வேகமாக்கலாம்!

இந்தியாவில் இப்போது அதிவேக ரயிலாகக் கருதப்படுவது சதாப்தி எக்ஸ்பிரஸ். மணிக்கு 140 கி.மீ. வேகம். அதையும் தாண்டிய வேகத்தை சாதாரண வழித்தடங்களிலேயே சாத்தியமாக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லி - ஆக்ரா தடத்தில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயிலை இயக்கும் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. 200 கி.மீ. தூரத்தை அந்த ரயில் வெறும் 90 நிமிடங்களில் சென்றடைந்தது.

இதற்காக அந்த 200 கி.மீ. தண்டவாளங்களையும் சிக்னல்களையும் மேம்படுத்த ஆன செலவு, வெறும் 10 கோடி ரூபாய். ‘‘ஒரே ஒரு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு செலவாகும் பணத்தை வைத்து, இந்தியா முழுக்க எல்லா ரயில்களையுமே இப்படி 160 கி.மீ வேகத்தில் ஓட வைப்பது சாத்தியம்’’ என்கிறார்கள் நிபுணர்கள்.

- அகஸ்டஸ்